கோலியை சேஸிங் மாஸ்டராக்கிய 5 பெஸ்ட் இன்னிங்ஸ்! #10YrsOfKingKohli



விராட் கோலி - அதிக சராசரி, குறைந்த ஆண்டுகளில் நிறைந்த ரன்கள், ஐசிசி தரவரிசையில் நம்பர்-1 என எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரன். சச்சினுக்குப் பின் யார் என்ற பலரின் கேள்விகளுக்கு ரன்களால் பதில் சொன்னவன். எத்தனை பெரிய இலக்காக இருந்தாலும் ஒற்றை மனிதராய் நின்று சேஸ் செய்து வெற்றி தேடி தரும் ரன் மெஷின். கவர் ட்ரைவ்களாலும், ஸ்கோயர் கட்களாலும் எதிரணி பௌலர்களை கலங்கச் செய்யும் ராஜபாட்டை. அவர் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கி இன்றுடன் பத்து வருடங்கள் ஆகின்றன.  உள்ளூரிலும் சரி வெளிநாடுகளிலும் சரி, எதிரணியின் சிம்மசொப்பனமாகத் திகழும் கோலி, சேஸிங்கில் ஆடிய 5 மிரட்டல் இன்னிங்ஸ்...!

122 vs இங்கிலாந்து, 2017 (ODI)

Sponsored


2017-ம் ஆண்டு ஜனவரி 15 இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, அந்தத் தொடரில் விளையாடிய முதல் ஒருநாள் போட்டி. ஏற்கெனவே டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் 4-0 என்று தோற்றநிலையில் ஒருநாள் போட்டியில் பதிலடி தர வேண்டும் என்று முனைப்புடன் ஆடிய இங்கிலாந்து அணி, 350 ரன்கள் இமாலய இலக்கை நிர்ணயித்தது. வெற்றி மிதப்பில் இருந்த இந்திய அணி சொதப்ப 63 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தவான், யுவராஜ், தோனி என அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து வசமிருந்த வெற்றியை மெள்ள இந்தியாவின் பக்கம் திருப்பினார் கேப்டன் கோலி. முதலில் ஆமை வேகத்தில் ஆடியவர் அதன்பின் அசுர வேகத்தில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் விளாசி, 105 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்குத் தெம்பூட்டி வெற்றிபெறச் செய்தார். இவருக்குத் துணையாக கேதர் ஜாதவ், தன் பங்குக்கு 120 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டார். டாப் ஆர்டர் முழுக்க காலியான பின்பும் `நான் சேஸ் மாஸ்டர்' என்று நிரூபித்தார் கோலி!

Sponsored


Sponsored


133* vs இலங்கை, 2012 (ODI)

ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பெரிய இலக்கை சேஸ் செய்வதற்குள் போதும்போதுமென ஆகிவிடும். ஆனால், 321 என்னும் இலக்கை `ஜஸ்ட் லைக் தட்’ என 37 ஓவருக்குள் முடித்தால்... அந்த ஒரு சரித்திர வெற்றியை கோலியின் சதத்துடன் 2012-ம் ஆண்டில் பதிவு செய்தது இந்திய அணி. காமன்வெல்த் பேங்க் தொடரில் இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற்றால் மட்டுமே இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளமுடியும் என்ற வாழ்வா, சாவா கட்டத்தில் இருந்த இந்திய அணிக்கு ஆரம்பமே காத்திருந்தது அதிர்ச்சி. சங்ககரா மற்றும் தில்ஷனின் அதிரடி சதத்தில் 320 ரன்களைக் குவித்தது இலங்கை. முக்கியமான போட்டியில் இமாலய இலக்கு என்றதைப் பெரிதுபடுத்தவில்லை அந்த இந்தியப் படை.

படைத்தளபதி கோலி ஆடிய ருத்ர தாண்டவத்தில் 36.4 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து சரித்திர வெற்றி பெற்றது இந்தியா. கோலியின் `ஒன் மேன் ஷோ’ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 86 பந்துகளில் 133 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். 76 பந்துகளிலேயே சதமடித்த கோலி பின்னர் பத்துப் பந்துகளில் 33 ரன்கள் குவித்து விரைவான வெற்றிக்கு வித்திட்டார். மேலும், அந்தத் தொடரில் கலக்கிய `டெத் ஓவர் கிங்' மலிங்கா வீசிய 35-வது ஓவரில் 24 ரன்கள் எடுத்து ஆல் ஏரியாவிலும் தான் கில்லி என நிரூபித்தார்.
 
183 vs பாகிஸ்தான், 2012 (ODI)

2008-ல் சர்வதேசப் போட்டியில் கால் பதித்த கோலி, தான் இன்னும் ஒரு 150+ ஸ்கோரைக் கூட தொட்டிருக்கவில்லை என்பதை உணர்ந்து ஆடிய ஆட்டம் இது. 2012 ஆசிய தொடரில் விளையாடிய இந்திய அணி தன் இர‌ண்டாவது போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றதும் சுதாரித்துக் கொண்டது. மூன்றாவது போட்டியில் தன் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. பாகிஸ்தான் ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் இருந்தது. இந்தியாவுக்கு வெற்றி கட்டாயம்.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 329 ரன்கள் குவித்தது. சேஸிங்கில், இரண்டாவது பாலிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் கம்பீர். பின் களமிறங்கிய கோலி, தன் ஆஸ்தான குருவான சச்சினுடன் இணைந்து நாலாபுறமும் பந்தைச் சிதறடித்தார் 19.1 ஓவர்களில் இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன் பார்ட்னர்ஷிப் எடுத்த நிலையில், டெண்டுல்கர் வெளியேற, கோலி தனி ஒருவனாக மொத்த பாகிஸ்தான் பவுலர்களையும் பந்தாட, ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. 211 நிமிடங்கள் களத்தில் நின்று 148 பந்துகளில் 22 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட 183 ரன்களைக் குவித்து, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்களை சேஸ் செய்ய அடித்தளம் அமைத்தார். கங்குலி, தோனி வரிசையில் தனது சிறந்த ஸ்கோராக 183 ரன்களைப் பதிவுசெய்தார். இந்த இன்னிங்ஸுக்குப் பின் `சேஸிங் மாஸ்டர்’ என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கோலியை மெச்சியது.

72* vs தென்னாப்பிரிக்கா, 2014 (டி-20)

2014  டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்தியா. உச்சகட்ட ஃபார்மில் இருந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அந்தப் போட்டி மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தியாவுக்கு 173 ரன்கள் இலக்கு. ஓவருக்கு 8.5 ரன்கள்தாம். ஆனால், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், தாஹிர் என மிரட்டும் பவுலிங் அட்டாக்கைச் சமாளிக்கவேண்டும். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவில்லை. ஆனால், ரன்ரேட் எகிறியது. கடைசி 10 ஓவர்களில், ஓவருக்கு 10 ரன்கள் வேண்டும். ஃபார்மில் இல்லாத யுவராஜ் ஒருபுறம் திணறுகிறார். ரன்ரேட் கூடிக்கொண்டே போக, விஸ்வரூபம் எடுத்தார் விராட். ஸ்டெய்ன் பந்துகளைக் கூட பாரபட்சமில்லாமல் சிதறடித்தார். 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். கோலிக்கு பெர்சனலாகப் பிடித்த இன்னிங்ஸ்களில் இது முக்கியமானது.

82* vs ஆஸ்திரேலியா, 2016 (டி-20)

2016 உலகக் கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இரு அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றிருந்ததால், இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியில் நுழையமுடியும் என்ற நிர்பந்தத்துடன் ஆடின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 160 ரன்களில் ஆட்டமிழக்க, கொஞ்சம் கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஓப்பனிங் பிரமாதமாக அமையவில்லை. அடுத்து வந்த ரெய்னா, யுவி இருவரும்கூட நிலைத்து நிற்கவில்லை. அவுட்டானவர்கள் அதிரடியாகவும் ஆடவில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வழக்கம்போல் அதகளப்படுத்தினார் விராட். 51 பந்துகளை நாலாப் பக்கமும் சிதற விட்டு 82 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற வைத்தார்.

எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் அதை உள்ளுக்குள் அடக்காமல், ஆட்டத்தின் மூலம் பதில் சொல்லும் வித்தகன் விராட். கோபக்காரன், ஆக்ரோஷக்காரன், சொதப்பல் கேப்டன் எனத் தன்னைச் சுற்றி எழும் நெகட்டிவ் வைப்ரேஷன்களை பேட் மூலம் தூள்தூளாக்குவது கோலியின் ஆல்டைம் அஜெண்டா. யார் என்ன சொன்னாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், வெற்றியை மட்டுமே மனதில் வைத்து, போராடும் தற்கால ஆட்டக்காரர்களில் கோலிக்கு நிகர் கோலியே!



Trending Articles

Sponsored