`ஸ்பின்னருக்கு ஒரே ஒரு விக்கெட்!’ - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா



Sponsored



இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 329 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேப்டன் கோலி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டம்கண்டது. டெஸ்ட் போட்டிகளில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை பாண்டியா வீழ்த்த, இங்கிலாந்து அணி 161 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். 

Sponsored


முதல் இன்னிங்ஸில் 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 103 ரன்களும், புஜாரா 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

Sponsored


இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 62 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 4-ம் நாளிலேயே இந்தியா வெற்றியைப் பதிவுசெய்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், 5-வது விக்கெட்டுக்குக் கைகோத்த பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களைக் கடுமையாகச் சோதித்தது. ஏறக்குறைய 57 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்த ஜோஸ் பட்லர், 106 ரன்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, கீப்பிங் செய்துகொண்டிருந்த ஜானி பேரிஸ்டவ் காயமடைந்தார். அவருக்குப் பதிலாக ஜோஸ்பட்லர் கீப்பிங் செய்தார். இதனால், இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பேரிஸ்டோவ் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், காயத்துடன் களமிறங்கிய பேரிஸ்டோவ், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். 

லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதமடித்த கிறிஸ் வோக்ஸ் மற்றும் நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 4-வது நாளின் கடைசி நேரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால், 9-வது விக்கெட்டுக்கு ஸ்டூவர்ட் பிராடுடன் ஜோடி சேர்ந்த அடில் ரஷீத், வேகமாக ரன் குவிக்கத் தொடங்கினார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் 20 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்திருந்தது. அடில் ரஷீத் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.  

கடைசி நாளான இன்று, இங்கிலாந்து அணி 2.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அஷ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் ஆண்டர்சன், ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம், 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, நடப்பு டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்தப் போட்டியில், எதிரணியின் 19 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோஹன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
 



Trending Articles

Sponsored