`கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றியை அர்ப்பணிக்கிறோம்!’ - கேப்டன் கோலி நெகிழ்ச்சி



Sponsored



இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

Photo Credit:ICC

Sponsored


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்குப் பின்னர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் நடைபெற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி தோற்று, தொடரில் 0-2 என பின்தங்கியது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய மூன்றாவது டெஸ்டின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Sponsored


போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் கோலி, ``நாங்கள், தொடரில்  0-2 என்று பின்தங்கியிருந்தபோது, அனைவரும் எங்கள்மீது நம்பிக்கை இழந்தனர். ஆனால், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைதான், எங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது’’ என்றார். கடந்த 2014-ம் ஆண்டு, இங்கிலாந்து தொடரில் சோபிக்க முடியாததைப்போல, இந்தத் தொடரும் அமைந்துவிடுமோ எனப் பயந்தீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த கோலி, `2014-ம் ஆண்டு தொடர்குறித்து எதுவும் நினைக்கவில்லை. அணியை இந்தத் தொடரில் உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டிய நிர்பந்தத்துடன் மட்டுமே ஆடினேன்’’என்றார். இந்த இன்னிங்ஸை, தன்னை எப்போதும் ஊக்குவிக்கும், எந்தச் சூழலிலும் பக்கபலமாக இருக்கும் தன் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு சமர்ப்பிப்பதாகவும் கோலி கூறினார்.

பந்துவீச்சாளர்களின் பணியைப் பாராட்டிய கோலி, ``பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். சரியான தருணத்துக்காகக் காத்திருந்து, சமயம் வரும்போது அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். காயத்திலும் அஷ்வின் சிறப்பாகப் பந்துவீசினார்.’’ மேலும், ரஹானேவும், புஜாராவும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் தன்னால் ரன் குவிக்க முடிந்ததென்றும், இனிவரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறிய கோலி, இந்தத் தொடரில் 2 சதங்கள் உட்பட 440 ரன்கள் குவித்துள்ளார். ``இந்த வெற்றியை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்க நாங்கள் விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எவ்வளவோ உதவிகளை மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். எங்களால் முடிந்த சிறு விஷயமாக இதைச் செய்கிறோம்’’ என்றும் கோலி குறிப்பிட்டார்.

போட்டிகுறித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ``இந்த வெற்றி இந்தியாவுக்கானது. அவர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். எங்களின் பௌலர்களால் எளிதில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் பட்லர் மற்றும் ஸ்டோக்ஸின் பார்ட்னர்ஷிப் அபாரமானதாக இருந்தது. இனிவரும் போட்டிகளில், கோலியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.  ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-2 என்ற நிலையில் இந்தியா பின்தங்கியுள்ளது. நான்காவது போட்டி, வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 30-ம் தேதி) சௌதாம்டனில் தொடங்குகிறது. 
 



Trending Articles

Sponsored