ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலம் வென்றது இந்திய செபக் டெக்ரா அணி



Sponsored



இந்தோனேசியாவின் ஜகர்தலாவில் நடைபெற்றுவரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா வெண்கலப்பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலை உயர்த்தியுள்ளது.

கோலாகலமாக நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், லீக் சுற்றில் ஈரானை 21-16 / 19-21 / 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் தாய்லாந்திடம் 0-3 என வீழ்ந்தாலும்,  அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும் என்பதால், இந்திய செபக் தக்ரா அணி முதல்முறையாக ஆசியப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய வீரர்களின் வீரியமிக்க உழைப்பை, இதுபோன்ற பதக்கங்கள்தான் உலகறியச்செய்கிறது.

Sponsored


`செபக் டெக்ரா' விளையாட்டு, சற்று வித்தியாசமானது. இதை எல்லோரும் ஆடுவதுபோன்று சர்வசாதாரணமாக விளையாடிவிட முடியாது. வாலிபால்போல விளையாடப்படும் இந்தப் போட்டி, கால்பந்துபோலும் விளையாடி பந்தை ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்குக் கால், தலை மற்றும் நெஞ்சு மூலம் அடித்துத் தள்ள வேண்டும். ஓர் அணிக்கு மூன்று பேர் வீதம் விளையாடும் `செபக் டெக்ரா' விளையாட்டுப் போட்டி, 1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடப்படுகிறது.

Sponsored


இந்த விளையாட்டு, தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அதிகம் விளையாடப்படுகிறது. மூன்று ஆட்டக்காரர்களால் விளையாடப்படும் இந்த விளையாட்டில், 13.4×6.1 மீட்டர் அளவு ஆடுகளத்தின் நடுவில் 1.52 மீட்டர் உயரமான வலை  கட்டப்படுகிறது. வலைக்கு அருகில் இருவர் இருப்பர். இவர்கள் வலது உள்பக்க வீரர், இடது உள்பக்க வீரர் என அழைக்கப்படுவர். பின்பக்கம் உள்ள விளையாட்டு வீரர் `டெகான்ங்' என அழைக்கப்படுவர். இவரே பந்தை சர்வீஸ் செய்வார்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் வடிவம் எடுக்கத் தொடங்கி, 1829-ல் ஷியாம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இந்த விளையாட்டுக்கான விதிகளை முதன்முதலில் உருவாக்கியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கைப்பந்து பாணியில் வலை (net) அறிமுகப்படுத்தியதுடன் முதல் பொதுப்போட்டியையும் நடத்தியது. சில வருடத்துக்குள், பள்ளிகளில் தற்காப்புப் பயிற்சிப் பாடத்திட்டத்துக்கு செபக் டெக்ரா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, பள்ளி மாணவர்களிடையே பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது.

பாங்காக்கில் உள்ள எமரால்டு புத்தர் கோயில் உள்ள சுவர் ஓவியங்கள், ஹனுமான் தன் சகதோழர்களுடன் செபக் டக்ரா விளையாடுவதைக் குறிக்கின்றன. பிற வரலாற்றுக் கணக்குகள், ஏற்கெனவே அயோத்தி அரசர் நர்ஸுன் ஆட்சிக்காலத்தில் இந்த விளையாட்டு இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.

1933-ம் ஆண்டில் தாய்லாந்தின் முதல் அரசியலமைப்பை, முழுமையான முடியாட்சி அகற்றப்பட்ட ஆண்டைக் கொண்டாடும்வகையில், கைப்பந்து பாணி செபக் டக்ரா விளையாடப்பட்டது. மேலும், சீன ராணுவப் பயிற்சிக்காக விளையாட்டில் பல மாறுதல்களை உருவாக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு இடையே இந்த விளையாட்டு வந்திருக்கலாம்  எனக் கூறப்படுகிறது.  

செபக்  டக்ரா, ஆசியாவில் வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டுகளில் ஒன்று. புவியீர்ப்பு தடையற்ற கிக்குகள், வான்வழித் திருப்பங்கள், உடல் திருப்பங்கள் இருப்பதால் பார்வையாளர்களை வியக்கவைக்கும் விளையாட்டாகவும் இது உள்ளது. இந்த விளையாட்டின் மூலம் வளர்ந்துவரும் தலைமுறை மட்டுமல்லாது, எதிர்காலத் தலைமுறை இளைஞர்கள் மூலமும் இந்தியா தங்கப்பதக்கம் வாங்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த விளையாட்டில் இந்திய அணி வெகுவிரைவிலேயே சாதிக்கும்!



Trending Articles

Sponsored