‘வலிகளுடன் சாதித்த வீராங்கனை!’- ஆசியப் போட்டியில் வரலாறு படைத்த ஸ்வப்னா பர்மன்



18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார், இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன். கொல்கத்தாவில் உள்ள ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர், ஸ்வப்னா. தந்தை ரிக்‌ஷா தொழிலாளி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுகையாகிவிட்டார். தந்தையை கவனித்துக்கொள்வதற்காக, தான் பார்த்துவந்த வேலையை அவரது தாய் விட்டுவிட்டார். அவரது சகோதரர் கூலி வேலை செய்துவருகிறார். இந்தக் கடினமான சூழலில் இருந்து சாதித்துள்ளார். ஹெப்டத்லான் போட்டியில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து ஸ்வப்னா தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஹெப்டத்லான் போட்டி என்பது, 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 200, 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளை உள்ளடக்கியது. இந்தப் போட்டிகளில், புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஸ்வப்னாவுக்கு இரண்டு கால்களிலும் 6 விரல்கள் உள்ளன. இதனால் ஷு அணிவது சவாலான விஷயமாகும். போட்டிகளின்போது, இந்த விரல்கள் அவருக்கு வலிகளை ஏற்படுத்தும்.

Sponsored


Sponsored


இதுகுறித்து அவரது தாயார் கூறுகையில், “நான் போட்டியைக் காணவில்லை. போட்டி தொடங்கும் முதலே காளி கோயிலில் பிரார்த்தனை செய்துவந்தேன். வெற்றிகுறித்த செய்தியைக் கேட்டதும் என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்று திரும்புவேன் என ஸ்வப்னா உறுதியளித்தார். இப்போது, இந்தியாவுக்காகத் தங்கம் வென்றுள்ளார்'' என்றார்.

Sponsored


அவரது முன்னாள் பயிற்சியாளர் சுகந்தா சின்கா கூறுகையில்,  “2006-2013 வரை பயிற்சியாளராக இருந்தேன். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நான்காம் வகுப்பில் இருந்து பயிற்சி அளித்துவந்தேன். நான், எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. இந்த வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. நாங்கள் அவரது எதிர்பார்ப்பை எல்லா நேரத்திலும் பூர்த்திசெய்யவில்லை. அவர், அதற்காக எப்போதும் புகார் தெரிவித்ததில்லை. அவரது தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்.” என்றார்.



Trending Articles

Sponsored