``இனியாவது எனக்கு பிரத்தியேக காலணி செய்து தருவார்கள்!'' - ஸ்வப்னா நம்பிக்கை



னியாவது எனக்கு ஸ்பெஷல் காலணி செய்து தருவார்கள்'' என்று நம்புவதாக ஆசியப் போட்டி ஹெப்டத்லானில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Sponsored


ஜகார்த்தா ஆசியப் போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா தங்கம் வென்றார். இந்தப் பிரிவில் இந்தியாவுக்குத் தங்கம் கிடைப்பது இதுவே முதல்முறை. ஸ்வப்னா தங்கம் வென்றதும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனார்ஜி ரூ.10 லட்சம் பரிசாக வழங்கியதோடு அரசு வேலை அளிக்கவும் உத்தரவிட்டார்.

Sponsored


மேற்கு வங்க மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கௌதம் தெப், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள ஸ்வப்னா வீட்டுக்கு நேற்று சென்றார். பின்னர், அவரின்  தாயாரை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் செல்போனில் பேச வைத்தார். அப்போது, ஸ்வப்னாவின் தாயாரிடம் அனைத்து உதவிகளையும் செய்வதாக மம்தா பனார்ஜி உறுதி அளித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. சச்சின், சேவாக் ஆகியோரும் ஸ்வப்னாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Sponsored


பல்வேறு இன்னல்களுக்கிடையே ஸ்வப்னா இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு இரு கால்களிலும் தலா ஆறு விரல்கள். இதனால், அவருக்கு சாதாரண காலணிகள் பொருந்தாது. ஸ்வப்னாவுக்காக எந்த நிறுவனமும் பிரத்தியேக காலணி தயாரித்து வழங்கவும் முன்வரவில்லை. இதனால், கால்களில் கடும் வலியுடன்தான் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். தங்கம் வென்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வப்னா, ``இனியாவது எனக்கு காலணி நிறுவனங்கள் பிரத்தியேக காலணி தயாரித்து வழங்க முன்வரும் என்று நம்புவதாகவும் அப்படித் தயாரித்து அளித்தால் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்'' என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். காலில் உள்ள ஆறாவது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் எனச் சிலர் கூறிய அறிவுரையை ஏற்றுக் கொள்ள ஸ்வப்னா மறுத்துள்ளார். 

இதற்கிடையே மகள் தங்கம் வென்றதையடுத்து ஸ்வப்னாவின் தாயார் வீட்டுக்கு எதிரே உள்ள காளி கோயிலில் நன்றி கூறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



Trending Articles

Sponsored