``அவரைத் தோற்கடிக்கும்போது நானும் தோற்கிறேன்!'' - வீனஸ் பற்றி செரினா வில்லியம்ஸ்



செரினா வில்லியம்ஸ், அலெக்ஸின் திருமதியாவதற்கு முன் டென்னிஸ் உலகின் தங்கமங்கையாக இருந்தவர். கிராண்ட் ஸ்லாம்ஸ், ஒலிம்பிக் என்று செரினாவின் டென்னிஸ் ராக்கெட்டுக்குத் தெரிந்தது எல்லாம் வெற்றி மட்டும்தான். காதல், திருமணம், குழந்தை என்று குடும்ப வாழ்க்கையை அனுபவித்துவிட்டு மீண்டும் டென்னிஸ் வாழ்க்கைக்கு திரும்பியவருக்குத் தொடர் தோல்விகள்தாம் கிடைத்தன. இதில் சின்சினாட்டி ஓப்பன் டென்னிஸில் செரினாவை வெற்றிகொண்ட கிவிடோவா, ``அவர் தாய்மை கொடுத்த உடல் பலவீனத்திலிருந்து மீண்டு வர வேண்டும்'' என உருக்கமாகப் பேசியிருந்தார். 

Sponsored


யெஸ், செரினா குழந்தை பிறந்த பிறகு பல பெண்களுக்கும் வருகிற 'போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்' (postpartum blues) என்கிற மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதைப் பற்றி அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். தவிர, ``இனி நான் கடினமாக உழைக்கப்போகிறேன். நிச்சயம் நிறைய போட்டிகளில் வெற்றிபெறுவேன்'' என்று நம்பிக்கையாகப் பதிவிட்டிருந்தார். இதோ, அவர் சொன்னபடி, அவருடைய நம்பிக்கையும் உழைப்பும் வெற்றி பெற்றிருக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அவருடைய அக்கா வீனஸ் வில்லியம்ஸை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்து விட்டார். குழந்தை பேற்றுக்குப் பிறகு செரினா விளையாடிய டென்னிஸ் போட்டிகளில் இதை மிகச் சிறந்த ஆட்டமாகவே டென்னிஸ் உலகம் குறிப்பிடுகிறது. செரினாவும், ``நான் கடந்த 6 மாதங்களில் ஆடிய மேட்ச்களில் என் அக்காவுடன் விளையாடிய போட்டியில்தான் என்னுடைய மிகச் சிறந்த ஆட்டத்திறமையை வெளிப்படுத்தியிருந்தேன்'' என்று அதை வழிமொழிந்திருக்கிறார். 

Sponsored


Sponsored


குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்த செரினா, மறுபடியும் விளையாட வந்து ஆறேழு மாதங்கள்தாம் ஆகியிருக்கின்றன. அதற்குள் 20 மேட்ச்கள் விளையாடிவிட்டார். 20-வது மேட்சில்தான் தன் அக்கா வீனஸை வெற்றிகொண்டார். இதைப் பற்றி செரினா சொல்லும்போது, ``இந்த வெற்றிக்காக நான் கடந்த 4 மாதங்களாகக் கடுமையாக பிராக்டிஸ் செய்திருக்கிறேன். வெற்றி, தோல்வியைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், எப்போதும் வெற்றிக்காக உழைத்துக்கொண்டு மட்டும் இருப்பேன், அதுதான் வாழ்க்கை'' என்கிறார் ஒரு போராளியின் இயல்புடன்.

தங்கையின் வெற்றி பற்றி அக்கா வீனஸ் குறிப்பிடுகையில், ``என்னுடன் செரினா விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகச் சிறந்த ஆட்டமாக நான் நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே அவள் சிறப்பாக விளையாடினாள். முதல் செட்டில் என்னுடைய ராக்கெட்டால் அவளுடைய பல பந்துகளைத் தொடவே முடியவில்லை. இப்படி ஒருவர் விளையாடினால் எதிராளி நிச்சயம் மிரண்டு விடுவார். செரினா தற்போது இப்படித்தான் விளையாடுகிறாள்'' எனப் புகழ்ந்திருக்கிறார். 

டென்னிஸ் உலகமே பூரித்துப் போய் செரினாவின் வெற்றியை ரசித்துக்கொண்டிருக்கையில், செரினாவோ, ``என்னுடைய மிகச் சிறந்த தோழி என் அக்காதான். அவள் என்னுடைய உலகமும்கூட. அவள் என்னிடம் தோற்றுவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அவள் தோல்வியடைந்தபோது, நானும் தோற்றுப் போனதாகத்தான் உணர்கிறேன். இப்போது மட்டுமல்ல, அவள் எப்போது, யாரிடம் தோல்வியடைந்தாலும் அதை என் தோல்வியாகவும் நினைக்கிறேன். விளையாட்டில் அவளை ஜெயித்தது சாதாரண விஷயம் கிடையாது. அதே நேரம் அவள் தோல்வி என்னுடைய தோல்வியும்கூட என்கிற என் உணர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், இதுவொரு விளையாட்டு. இதில் வெற்றி தோல்வி சகஜம். வாழ்க்கை டென்னிஸ் விளையாட்டைவிட உயர்ந்தது. அது எங்கள் இருவருக்கும் நன்கு தெரியும்'' என நெகிழ்ந்திருக்கிறார்.

வாருங்கள் செரினா. மறுபடியும் உங்கள் ராக்கெட் வெற்றிகளைச் சந்திக்கட்டும்!



Trending Articles

Sponsored