நான் கனவு கண்டதைவிட அதிகம் சாதித்துள்ளேன்! சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் குக் பெருமிதம்



Sponsored



இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகப்போவதாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், அலஸ்டயர் குக். இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர், தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில்  விளையாடிவருகிறார். இந்த நிலையில்,  சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய கடிதத்தில், 'கடந்த சில மாதங்கள் நீடித்த தீவிர யோசனைக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

Sponsored


இது, எனக்கு சோகமான நாளாக இருந்தாலும், நான் முகத்தில் சிரிப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறேன். நான் அனைத்தையும் கிரிக்கெட்டுக்குக் கொடுத்துவிட்டேன். என்னிடம் மீதம் எதுவுமில்லை. நான் கனவு கண்டதைவிட அதிகமானதைச் சாதித்துவிட்டேன். கிரிக்கெட்டில், நீண்ட காலமாக மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து விளையாடுவதற்குரிய சலுகைகளைப் பெற்றிருந்ததாக உணர்கிறேன். இங்கிலாந்து அணி வீரர்கள் சிலருக்கு என்னுடைய முடிவு கடினமானதாக இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரியும், இது சரியான நேரம். சிறுவனாக மைதானத்தில் விளையாடிய காலத்திலிருந்து என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். எங்களைப் பொழுதுபோக்குவதற்கும், நாட்டுக்காக விளையாடுவதற்காக அவர்கள் அளவு கடந்த பெருமைகொள்வதற்கும் அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான சரியான நேரம் இது என்பது எனக்குத் தெரியும்.

Sponsored


கிரிக்கெட் வீரர்களாக, அடிக்கடி பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்படும் நாம், நம்முடைய வெற்றியில் நம்முடைய குடும்பத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கடி உணர்வதில்லை. என்னுடைய குடும்பமும் நானும் 12 ஆண்டுகள் வெற்றிகரமாக என்னுடைய கனவை (கிரிக்கெட்) நிறைவுசெய்துள்ளோம். என்னுடைய குடும்பத்தினர் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது' என்று குறிப்பிட்டுள்ளார். 

நாக்பூரில், 2008-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் அலஸ்டயர் குக், முதல் போட்டியை விளையாடினார். தற்போது கடைசிப் போட்டியும் இந்தியாவுக்கு எதிராகத்தான் விளையாட உள்ளார். 



Trending Articles

Sponsored