77 அன்ஃபோர்ஸ்டு எரர்ஸ்... 10 டபுள் ஃபால்ட்ஸ்... ஃபெடரர்க்கு என்னாச்சு? #federer #USOpenSponsored37 வயது வீரர் ஒருவர் டென்னிஸில் இப்படியெல்லாம் வெற்றிகள் பெறுவது என்பதே வரலாறு. அப்படி வரலாற்று வெற்றிகள் பெற்று வந்தவர்தான் ரோஜர் ஃபெடரர். 2018 ஆஸ்திரேலிய ஓப்பனில் இறுதிப்போட்டிவரை ஒரு செட்கூட இழக்காமல் வெற்றிபெற்றுவந்தவர் இறுதிப்போட்டியில் மரின் சிலிச்சை தோற்கடித்து தனது கேரியரில் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். ஆனால், ஆஸ்திரேலிய ஓப்பனுக்குப் பிறகு ஃபெடரருக்குப் பெரிய சறுக்கல்கள். பிரெஞ்சு ஓப்பனில் கலந்துகொள்ளாத ஃபெடரர் விம்பிள்டனில் காலிறுதியோடு முடித்துக்கொண்டார். இப்போது அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் நான்காவது சுற்றோடு வெளியேறியிருக்கிறார்.

"இன்று வெப்பம் அதிகமாக இருந்தது. இன்றுதான் முதல்முறையாக இந்தச் சூட்டை உணர்ந்தேன். சில நாள்களில் உடல் ஒத்துழைக்காது. அதுபோன்ற நாள்தான் இது. சுவாசிக்க காற்று இல்லாமல் கஷ்டப்பட்டதுபோல் இருந்தது'' என்று ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனிடம் தோல்வியடைந்ததும் சொன்னார் ரோஜர். ஃபெடரரின் தோல்வியைவிட அவர் தோற்றவிதம்தான் எல்லோருக்குமே அதிர்ச்சி. 77 அன்ஃபோர்ஸ்டு எரர்கள்... 10 டபுள் ஃபால்ட்ஸ் என ஃபெடரரின் ஆட்டம் ஃபெடரரின் ஆட்டமாக இல்லாததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.

Sponsored


கடந்த பிப்ரவரியில் ரோட்டர்டாம் ஓப்பனை வென்று உலகின் நம்பர் ஒன் வீரர் என்கிற ரேங்கிங்கை நீண்டநாள்களுக்குப் பிறகு பிடித்தார் ஃபெடரர். கிட்டத்தட்ட 37 வயதில் உலகின் நம்பர் ஒன் வீரர் என்கிற இடத்தைப்பிடித்த முதல் வீரர் என்கிற பட்டமும் ஃபெடரருக்குச் சொந்தமானது. ஆனால், அதன்பிறகு முக்கியமான மேட்ச்களில் தோல்வியைச் சந்திக்க ஆரம்பித்தார் ஃபெடரர். இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதிப்போட்டியில் டெல் பெட்ரோவிடம் தோல்வியடைந்தார். அடுத்துவந்த மியாமி ஓப்பனில் தனாஸி கோக்கினாக்கிஸ் என்னும் புதுமுக வீரரிடம் இரண்டாவது ரவுண்டிலேயே தோல்வியடைந்தார்.

Sponsored


அதன்பிறகு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிரெஞ்சு ஓப்பன் உட்பட களிமண் தரையில் ஆடும் டென்னிஸ் போட்டிகளைத் தவிர்த்தார். இதனால் நம்பர் ஒன் வீரர் பட்டம் பறிபோனது. ஆனால், ஸ்டட்கார்ட் ஓப்பனை வென்று முதலிடம் பிடித்தார். அடுத்து ஹாலே ஓப்பனில் தோல்வி.

2018 விம்பிள்டனை நம்பர் ஒன் வீரராக எதிர்கொண்ட ஃபெடரருக்கு காலிறுதிப் போட்டியில் அதிர்ச்சி காத்திருந்தது. காலிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்களையும் 6-2, 7-6 என வென்றவர், மூன்றாவது செட்டை வெல்லும் மேட்ச் பாயின்ட்டில் இருந்தார். ஆனால், ஃபெடரருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. நிதானம் இழந்தார். மேட்ச் பாயின்ட்டில் இருந்தவர் அந்த செட்டையும் இழந்து, அதற்கு அடுத்த இரண்டு செட்களையும் தொடர்ந்து இழந்து விம்பிள்டனிலிருந்து வெளியேறினார். அடுத்து சின்சினாட்டி ஓப்பன் இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார் ஃபெடரர். இதோ இப்போது யு.எஸ் ஓப்பனில் நான்காவது சுற்றுடன் வெளியேறிவிட்டார். 

இந்த ஆண்டில் மட்டும் ஆறு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறார். இந்தத் தோல்விகள் அனைத்துமே பிரஷரான சூழலில் ஃபெடரர் மீண்டு வரமுடியாமல் ஏற்பட்ட தோல்விகளே. விம்பிள்டன் தோல்வி, டெல் பெட்ரோவிடம் ஏற்பட்ட தோல்வி, ஜோகோவிச்சிடம் ஏற்பட்ட தோல்விகளே இதற்கான உதாரணங்கள். சச்சின் 90 ரன்களைத் தொட்டதுமே ஒரு பதற்றத்துக்கு உள்ளாவாரே அதுபோன்ற நிலையில்தான் இப்போது ஃபெடரர் இருக்கிறார். ஸ்ட்ரெய்ட் செட் வெற்றிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், எதிர் வீரர் சவால் விடத்தொடங்கிவிட்டால் தடுமாற ஆரம்பிக்கிறார் ஃபெடரர். பதற்றம் பாடாய்ப்படுத்துகிறது.

37 வயதில் ஒரு டென்னிஸ் வீரர் 100 சதவிகித ஃபிட்னஸோடு எல்லாச் சூழல்களையும் சமாளிக்க முடியும் என எதிர்பார்ப்பதே தவறோ என்றும் தோன்றுகிறது. பொதுவாக கிரிக்கெட்டில் 35 வயது என்பது சராசரியாக ஓய்வுபெறும்வயது என்றால் டென்னிஸில் 30 வயதியிலேயே பலரும் ஓய்வுபெற்றுவிடுவார்கள். பீட் சாம்ப்ராஸ் 31 வயதில் ஓய்வுபெற்றவர். ஆனால் 37 வயதிலும் இளம் வீரர்களுடன் மோதிக்கொண்டிருக்கிறார் ஃபெடரர்

"நீங்கள் வாழ்க்கையில் மிகச்சிறப்பாக ஒரு விஷயத்தைச் செய்துகொண்டிருக்கும்போதோ அல்லது செய்வதாக நினைக்கும்போதோ அதை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி என்னை நான் மிகச்சிறந்த டென்னிஸ் வீரனாக நினைக்கிறேன். வயது இதற்குத் தடையாக இருக்கமுடியாது. நான் பெஸ்ட்டாக என்னை உணருகிறேன். அப்படி நினைக்கும்வரை விளையாடுவேன்'' என்பதுதான் ஓய்வுபற்றிய கேள்விகள் வரும்போதெல்லாம் ஃபெடரர் சொல்லும் பதில். 2018 யுஎஸ் ஓப்பன் தொடங்கும்போதும் ஓய்வுபற்றிய கேள்விகள் எழுந்தன. ``ஓய்வுபற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை'' என்றார் ஃபெடரர். 

தோல்விகள் ஒன்றும் ஃபெடரருக்குப் புதிதல்ல. தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்தவர்தான் ஃபெடரர். ஆனால், அவரின் வயதுதான் இப்போது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. 2019 ஆஸ்திரேலிய ஓப்பனுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டும் அமெரிக்க ஓப்பனில் காலிறுதிப் போட்டியோடு வெளியேறிய ஃபெடரர் அதற்குப் பின் மூன்று முக்கியப் போட்டிகளில் விளையாடிவிட்டு 2018 ஆஸ்திரேலிய ஓப்பனுக்கு வந்தார். இப்போதும் அதேபோல அவர் சில போட்டிகளில் விளையாடிவிட்டு ஆஸ்திரேலிய ஓப்பனுக்கு வரலாம்.

2017, 2018 எனத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓப்பனைக் கைப்பற்றிவருகிறார் ரோஜர் ஃபெடரர். ஆஸ்திரேலிய ஓப்பனை மூன்றாவது முறையாக... ஹாட்ரிக் முத்தத்துடன் கோப்பையைக் கைப்பற்றுவாரா என்பதைப் பொருத்தே ஃபெடரரின் எதிர்காலம் இருக்கும். ஆமாம்... ஃபெடரரின் ஓய்வுகுறித்த அத்தனை கேள்விகளுக்கும் 2019 ஆஸ்திரேலிய ஓப்பனே விடையளிக்கக் காத்திருக்கிறது...

ஆஸ்திரேலிய ஓப்பனில் ஃபெடரரை தரிசிக்கத் தயாராவோம்!Trending Articles

Sponsored