`சிறந்த அணி என்றுதான் நம்புகிறோம்... அதில் என்ன தவறு?!’- சீறிய கோலி



இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பிய பத்திரிகையாளருக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோபத்துடன் பதிலளித்தார். 

Sponsored


இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, தொடரை இழந்திருந்தாலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டதாக நம்பிக்கை தெரிவித்தார். 

Sponsored


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ``தற்போதைய அணியின் கடந்த 3 ஆண்டுகள் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டால், வெளிநாடுகளில் நடைபெற்ற 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் மற்றும் 3 தொடர்களிலும் வாகை சூடியிருக்கிறோம். கடந்த 15-20 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு இதுவாகும். இதுபோன்ற குறுகிய காலத்தில் இந்திய அணி, இதற்கு முன்னதாக சிறப்பாகச் செயல்பட்டது கிடையாது’’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார். ரவி சாஸ்திரியின் கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் கேள்வி எழுப்பியிருந்தனர். அதேநேரம், ரவி சாஸ்திரியின் கருத்துக்குக் கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்திருக்கிறார். 

Sponsored


ஓவல் டெஸ்டுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், `கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்கிறார் ரவி சாஸ்திரி. இதுபோன்ற ஒப்பீடுகள் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லையா?. உண்மையில் அப்படி நீங்கள் எண்ணுகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு கோபமாகப் பதிலளித்த விராட் கோலி, ``நாங்கள் சிறந்த அணி என்றுதான் நம்புகிறோம். அதில் என்ன தவறு?’’என்று எதிர்க்கேள்வி கேட்டார். விராட் கோலியின் ரியாக்‌ஷனுக்கு, `15 ஆண்டுகளில் சிறந்த அணி?’ என்று அந்தச் செய்தியாளர் ஆச்சர்யத்துடன் அதே கேள்வியை முன்வைத்தார். அந்தக் கேள்விக்கு, ``நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’ என விராட் கோலி செய்தியாளரைப் பார்த்துக் கேட்டார். ``என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது’’ எனச் செய்தியாளர்கள் பதில் சொல்லவே, ``உங்களால் உறுதியாக் கூற முடியாது?. அது உங்கள் கருத்து. நன்றி’’ என்று கூறி முடித்தார் கோலி. 

தொடரை இழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ``இங்கிலாந்து தொடரில் எதிர்மறையான விஷயங்களை விடுத்து, நேர்மறையாக நாங்கள் கற்றுக்கொண்டவற்றை எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். இறுதிவரை போராடும் குணம் வீரர்களிடம் இருந்தது. அது பாராட்டத்தக்கது. நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தொடர் முடிந்துவிட்டதாக நாங்கள் எண்ணவில்லை. இந்தப் போட்டியின் (ஓவல் டெஸ்ட்) இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், நாங்கள் விளையாடினோம். அந்தச் சூழலில் பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெரும்பாலான அணிகள், இந்தச் சூழலில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடும். ஆனால், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை’’ என்றார். 


 



Trending Articles

Sponsored