’இதுதான் உண்மையான புஷ்கரம்’ - பக்தர்கள் நெகிழ்ச்சிSponsored மயிலாடுதுறையில் உள்ள காவிரி துலாக்கட்டத்தில், காவிரி மகா புஷ்கரம்  கடந்த 12 -ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதற்கான ஏற்பாடுகள், கடந்த  ஆறு மாத காலமாக செய்து வரப்பட்ட நிலையில், காவிரியில் நீர் இல்லாததால், துலாக்கட்டத்தில் தற்காலிகக் குளமும் படித்துறையும் அமைக்கப்பட்டு, போர்வெல்மூலம் நீர் நிரப்பப்பட்டது. இதில்தான் நேற்று முன்தினம் வரை மக்கள் புனித நீராடினர். ஆனால், உண்மையான காவிரி நீரில் நீராட முடியவில்லையே என்ற வருத்தம் பக்தர்களிடையே காணப்பட்டது.

Sponsored


இருப்பினும், 144 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் மகா புஷ்கரம் என்பதால், தினமும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்துகொண்டிருந்தனர்.

Sponsored


 கடந்த 13-ம் தேதி, காவிரியிலிருந்து புஷ்கரத்துக்காக 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இந்த நீர், நேற்று காலை 6.30 மணி அளவிலேயே  துலாக்கட்டத்தை வந்தடைந்தது.   அதைக் கண்ட மக்கள், இன்றுதான் உண்மையான புஷ்கரம் என்று கூறி காவிரியில் புனித நீராடினர். 

நேற்று காலை 9.45 மணி அளவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துலாக்கட்டத்தில் புனித நீராடினார். அவருடன் சேர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ஓ.எஸ்.மணியன், அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆகியோர் நீராடினர். பிறகு, நாகையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு, சுமார் 2,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனர்.

காவிரியில் நீர் வந்ததால், நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் துலாக்கட்டத்துக்கு புனித நீராட வந்தனர். பலர், காவிரி நீரை  பாட்டில்களில் நிரப்பி வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.

" கடந்த 13-ம் தேதி திறந்துவிடப்பட்ட காவிரி நீர், நேற்று காலையில்தான் துலாக்கட்டத்துக்கு வந்ததால், கடந்த  எட்டு நாள்கள் வரை மக்கள் வேறு வழியின்றி தற்காலிக குளத்தில் இருந்த அழுக்கு நீரிலேயே நீராடினர். தமிழக அரசு இந்த ஏற்பாட்டை முன்கூட்டியே செய்திருந்தால், அனைத்து பக்தர்களுக்கும் காவிரி நீரில் நீராடிய மன நிறைவு ஏற்பட்டிருக்கும் " என்று பக்தர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர்.Trending Articles

Sponsored