’தேர்வுக் கட்டணத்தைக் குறைக்க மாட்டோம்’ -மாணவர்கள் போராட்டத்துக்கு பல்கலைக்கழகம் பதிலடி!Sponsoredதேர்வுக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராடிவரும் நிலையில், 'கட்டணத்தைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை' என நெல்லை பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பாஸ்கரன் பொறுப்பேற்ற பின்னர், அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார். அதன்படி, கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவை ஆன்லைன் மூலமாக மட்டுமே பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த முடியும். மேலும், வருடத்துக்கு ஒருமுறை தேர்வுக் கட்டணத்தில் மாற்றம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு, மாணவர்களிடம் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

Sponsored


பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டண அதிகரிப்பைக் கண்டித்து நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில், பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்திய மாணவர் சங்கத்தினரும் இந்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திவருகின்றனர். இதனால், கடந்த சில தினங்களாக தென் மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளில் பணிகள் நடைபெறவில்லை.

Sponsored


இந்த நிலையில், இந்த விவகாரம்குறித்து ஆலோசிக்க, பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளரான ஜான் டி பிரிட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’தேர்வுக் கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது’ எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இது, மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’’தேர்வுக் கட்டண உயர்வுகுறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு கூடியது. இதில், ஆட்சிக்குழுவின் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்ட தேர்வுக் கட்டணங்கள்குறித்து விவாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்துவதற்கு ஆகக்கூடிய செலவீனங்கள் மற்றும் இதரச் செலவுகளை கவனத்தில்கொண்டு பார்க்கையில், உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் சரியானது என முடிவுசெய்யப்பட்டது.

பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயிலும், கல்வி உதவித்தொகை பெறும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள், அரசுமூலம் உதவித்தொகை பெறும்போது,தேர்வுக் கட்டணத்தையும் முழுமையாகச் சேர்த்துப் பெறுகிறார்கள். அதனால், மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் எந்த விதத்திலும் கூடுதல் நிதிச்சுமை கிடையாது. அதனால், மாணவர்கள் 25-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கடைசித் தேதியிலும் எந்தவித மாற்றமும் இல்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிக்கையால், மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  Trending Articles

Sponsored