தேங்கிய மழைநீரால் அழுகும் நிலையில் வாழைகள்... காப்பாற்ற களத்தில் இறங்கிய விவசாயிகள்Sponsored'மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் அடி; விவசாயிகளுக்கோ திரும்பிய பக்கமெல்லாம் அடி' என்று சொல்வார்கள். அது உண்மைதான் என்று உணர்த்துவதாக இருக்கிறது இந்தக் காட்சி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள லாலாப்பேட்டையில் தங்களது வயலில் பயிரிட்ட வாழை, மழைநீர் தேங்கி அழுகத் தொடங்க, அந்தத் தண்ணீரை வடிய வைக்கத் தூர்வாராமல் செடிமண்டிக் கிடக்கும் சோன வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் கைகளால் செடிகளைப் பிடிங்கி எறிய, பார்ப்பவர்களை `உச்' கொட்ட வைக்கிறது.

லாலாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பலநூறு ஏக்கரில் வாழைதான் பயிர் செய்கிறார்கள் விவசாயிகள். கடந்த வருடம் காவிரியிலும் தண்ணீர் வரவில்லை. மழையும் பெய்யவில்லை. இதனால், மனம் ஒடிந்துபோன விவசாயிகள் இந்த வருடம் காவிரியிலும் தண்ணீர் வர, கூடவே மழையும் பொழிய, மகிழ்ச்சியோடு விட்டதைப் பிடிக்கும் எத்தனத்தோடு வாழை பயிரிட்டனர். ஆனால், காய்ந்து கெடுத்த வானம், பேய்ந்து கெடுத்த மாதிரி இந்த வருடம் மழை கொட்டோ கொட்டெனக் கொட்ட, வாழை வயல்களில் கடல்போல் தண்ணீர் தேங்கி, வாழைப்பயிர் அழுகத் தொடங்கியது. அந்தப் பகுதியில் மழை பெய்தால், அந்த நீர் வடிவதற்கு என்று உள்ள சோன வாய்க்கால் பல வருடங்களாக தூர் வாரப்படாமல் செடிகளும் கொடிகளும் மண்டி தூர்ந்துபோய் கிடக்கிறது. அதனால், இந்த வருடம் மழைத் தண்ணீர் வடியாமல், வாழை வயல்களிலேயே தேங்க, சோகத்துக்கு ஆட்பட்டார்கள் விவசாயிகள். வேறு வழியில்லாமல்தான், மழைநீரில் அழுகும் வாழைப்பயிர்களைக் காபந்து பண்ண தன் கையே தனக்குதவி என்று தாங்களே, சோன வாய்க்காலில் இறங்கி தண்ணீரைச் செல்ல விடாமல் தேங்கும் செடிகளையும் கொடிகளையும் வாய்க்காலில் இறங்கி அப்புறப்படுத்தினர். ஆனால், அந்தச் செடிகளும் கொடிகளும் அவ்வளவு சீக்கிரத்தில் வராமல் விவசாயிகளை அல்லல்படுத்தியது.

Sponsored


இதுபற்றி பேசிய அந்தப் பகுதி மக்கள், "அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வாழை நல்லா விளைஞ்சுச்சு. லாலாப்பேட்டை வாழைன்னாலே தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ். காவிரியில மணல் அள்ளினாங்க. தண்ணீர் கிடைக்கலை. இங்குள்ள வடிகால்களைத் தூர்வாரலை. அதனால், மழைக்காலங்கள்ல இப்படி எங்க வாழைப்பயிர்கள் அழுகி நாசமாயிட்டு. அரசு உடனே இந்தச் சோன வாய்க்காலில் எங்கள் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியும் வகையில் சீர்ப்படுத்தணும். அதோட, மழைநீரில் அழுகிய எங்கள் வாழைப்பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை உடனே நிவாரணமா கொடுக்கணும். இல்லைன்னா, எங்கள் போராட்டம் கரூரைக் கலங்கடிக்கும்" என்றார்கள் ஆக்ரோஷமாக!.

Sponsored
Trending Articles

Sponsored