அரசு-தனியார் பேருந்து ஓட்டுநர்களின் அடாவடி! - பயணிகள் பரிதவிப்புSponsoredபுதுக்கோட்டை மாவட்டம் அரசு, தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களிடையே மோதல் போக்கு சமீப காலமாக அதிகரித்திருக்கிறது.  இதனால், பயணிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், கந்தர்வகோட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து புறப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வசூலை அள்ளுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு இயங்குகின்றன. இரு தரப்பு ஓட்டுநர்களுமே,  பேருந்தை வழி மறித்துப் போட்டுக்கொண்டு, கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் காட்சிகள் இந்தப் பகுதியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாகிவிட்டன. 

Sponsored


ஞாயிற்றுக்கிழமை காலை, கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து புறப்படும் நேரத்தில், பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வேகமாகப் புறப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், அந்தத் தனியார் பேருந்தை வழிமறித்து தன் பேருந்தை நிறுத்திவிட்டார். இரு தரப்பு ஓட்டுநர்களும் நடத்துநர்களும் காரசாரமாக வாய்த்தகராறில் மோதிக்கொண்டனர்.  அதனால், வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Sponsored


தவிர, அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. "நேரக் காப்பாளர்  எங்களுக்கென்று குறிக்கும் நேரத்தில் தனியார் பேருந்துகள் நுழைந்து எங்கள் பயணிகளை கூப்பிட்டு ஏற்றுகிறார்கள். 'பீக்அவர்'களில் அவர்கள் காட்டும் அடாவடி அளவுக்கு மீறியதாக இருக்கிறது. போடும் டீசல் அளவுக்குக்கூட கலெக்ஷ்ன் வருவதில்லை என்று அதிகாரிகள் எங்களுக்கு மெமோ கொடுக்கிறார்கள். இந்த நிலைமையில், அரசுப் பேருந்துகளில் ஏறும் பயணிகளையும் கூப்பிட்டு அவர்களின் பேருந்துகளில் ஏற்றினால் எப்படி?" என்று கொதிக்கிறார்கள் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள். 

தனியார் பேருந்து தரப்பு ஓட்டுநர்களோ, 'உண்மையில் அவர்கள் நேரத்தில் நாங்கள் புறப்படுவதில்லை. 'லொடலொட'வென்று ஓட்டிக்கொண்டு தாமதமாக வந்து, நாங்கள் புறப்படும் நேரத்தில் அவர்கள் நுழைகிறார்கள்.  அதனால் எங்கள் கலெக்ஷ்ன் பாதிக்கிறது. நேரத்துக்கு வந்து சரியான நேரத்துக்கு எடுத்தால், இந்தப் பிரச்னையே வராது. அவர்களுக்கு ஓட்டினாலும் ஓட்டாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும். எங்களுக்கு அப்படி இல்லை. ஓட்டுவதோடு அதிகமான கலெக்ஷ்னையும் காட்டணும். அப்போதான் பயணப்படியும் சம்பளமும் ஒழுங்காக வரும்"என்கிறார்கள்.

'புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளில்தான் மேற்கூரைகளிலும் பயணிக்கும் அவலம் அதிகமாக இருக்கிறது. எவ்வளவு கலெக்ஷ்ன் அள்ளினாலும் அவர்களுக்கு பத்தாது. அதேபோல, பழைய பேருந்துகளை வைத்துக்கொண்டு, குறைவான வேகத்தில் ஓட்டிக்கொண்டு, வசூலுக்கு அரசுப் போக்குவரத்து நிர்வாகம் ஆசைபடுவதும் வேலைக்காகாது. இந்த லட்சணத்தில் இரண்டு தரப்பும் மோதிக்கொள்வதில் நியாயமே இல்லை. இதனால் நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம்" என்று வேதனையுடன் கூறுகின்றனர் பயணிகள்.Trending Articles

Sponsored