’உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!’: வைகோ வலியுறுத்தல்!உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள 950 தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Sponsored


இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், 4084 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல அறிவிப்புகள் செய்யப்பட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகரத் திட்டங்களைச் செயல்படுத்த அறிவிப்புகள் வந்தன.

Sponsored


பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய பல சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக, பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திட குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கருத்துகள் அறியப்பட்டன. தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அதற்கு ஏற்ப மாணவர்களை ஆயத்தப்படுத்த வேண்டுமானால், பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டியது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

Sponsored


மனப்பாடமும், மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல. மனித வாழ்வியலின் மிக உயர்ந்த பல மதிப்பீடுகளை மாணவச் செல்வங்களுக்குக் கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிகள்தான். கல்வித்துறையின் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். எனவே, பள்ளிகளில் ஆசிரியர் பணி இடங்களை முறையாக நிரப்பவேண்டியது இன்றியாமையாததும், உடனடித் தேவையும் ஆகும்.

தமிழ்நாட்டில் 950 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மேலும், ஐந்து தலைமைக் கல்வித்துறை அதிகாரிகள் பணி இடங்களும், 35 மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் பணி இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. வேளாங்கண்ணியில் நடைபெற்ற தமிழக உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு, இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும், தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான துணை இயக்குநர் பதவி மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கான துணை இயக்குநர் பதவி போன்றவை நிரப்பப்படாமல் உள்ளன.

தமிழகக் கல்வித்துறையில் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் செயல்படுத்தப்பட வேண்டுமானால், முதலில் அடிப்படைக் கட்டமைப்புகளிலும், காலிப் பணி இடங்களை நிரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இல்லையேல் கல்வித்துறையின் வளர்ச்சி என்பது வெற்று அறிவிப்பாகவே நின்றுவிடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored