முடங்கிப்போன நிர்வாகம்... காலியான கஜானா... புதுக்கோட்டை நகராட்சியின் அவலம்



Sponsored



புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் நிரந்தரத் துப்புரவுப் பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் போடவில்லை என்று இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஒரு பரபரப்பு எழுந்து அடங்கியது. இப்போது,"நகராட்சி கஜானா காலியாகிவிட்டது. அதனால் அன்றாடம் நடக்க வேண்டிய பல வேலைகள் முடங்கிக்கிடக்கிறது" என்று அடுத்த பரபரக் குற்றச்சாட்டைக் கிளப்புகிறார் விடுதலைக் குமரன்.

2013-ம் வருடம் நவம்பர் மாதம் நகரமெங்கும் முக்கியமான சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கு தோண்டிப்போட்டு வைத்தது நகராட்சி நிர்வாகம். நீண்டநாள்களாக அவை அப்படியே கிடந்தது. மக்கள் பலமுறை முறையிட்டும் தோண்டிய சாக்கடையை மூடும் வழியாகத் தெரியவில்லை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போய் கேட்டதற்கு, அன்றைக்கு ஆணையராக இருந்தவர், "நகராட்சி நிதி இல்லை" என்று கூறியிருக்கிறார். உடனே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி, நகராட்சியின் திவால் நிலைமையை மக்கள் முன் வைத்தார்கள். இப்படி அவ்வப்போது பல்வேறு அரசியல் அமைப்புகள் நகராட்சியின் அவலநிலைக்கு எதிராகக் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், நிலைமை மட்டும் அப்படியே இருக்கிறது.

இதுகுறித்து, ஜனநாயகத் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் விடுதலைக்குமரன் விவரித்தார்."பேரு பெத்த பேரு... குடிக்க பானி லேது'னு சொல்லுவாங்க.அந்தக் கதையாகத்தான் புதுக்கோட்டை நகராட்சியோட நிலைமை. அலுவலகக் கட்டடம் பார்க்க பிரமாண்டமான அரண்மனைபோல இருக்கு. ஆனா, நிர்வாகம் முடங்கிப் போய்தான் கிடக்கு. நகராட்சிக்குனு தனியா கமிஷனர் இல்லை. இன்னிக்கு வரைக்கும் பொறுப்பு கமிஷனர்தான் இருக்கார்.அவருக்கு நிர்வாக விசயத்தில் சுதந்திரமா செயல்பட முடியலை. ஏதோ பேருக்குத் தான் நிர்வாகம் பண்றாரு. புதுக்கோட்டை நகராட்சி அதிக வருமானம் கொண்டது. வீட்டு வரி, நிலவரி, கடைவரி, குடிநீர் வரி, மூலமா நல்ல வருமானம் வந்துகிட்டு இருக்கு. ஆனாலும், மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஏதும் சரியாக, முறையாக நடப்பதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், நகராட்சியில் பணம் இல்லை என்கின்றனர்.

மாதாமாதம் உள்ளாட்சி நிர்வாகத்துக்காக, அனைத்துப் பேரூராட்சி, நகராட்சி, தேர்வுநிலை நகராட்சி, பஞ்சாயத்து, ஊராட்சி அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி வழங்குகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு கிட்டத்தட்ட 60 லட்சரூபாய் வருகிறது. அந்தப் பணத்தில் கான்ட்ராக்ட்காரர்களுக்கு பில் ஓகே செய்யப்படுகிறது. அலுவலர்களுக்கு ஊதியம் போடப்படுகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு நிதி இல்லாமல் போய்விடுகிறது. நவம்பர் மாதச் சம்பளத்தை முற்றுகைப் போராட்டம் நடத்திதான் துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தந்தோம். ஒவ்வொரு மாதமும் இதற்காகப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க முடியுமா. நகராட்சி கஜானா காலியாகிக்கிடக்கிறது. இந்தநிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்" என்றார்.

நகராட்சி பொறுப்பு ஆணையர் ஜீவா சுப்பிரமணியனைத் தொடர்புகொண்டு பேசினோம். "நகராட்சியில் எல்லா பணிகளும் தடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு அன்று மாலையே சம்பளம் போடப்பட்டுவிட்டது. நிதி நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது" என்றார்.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored