"இன்னும் எவ்வளவு டி.எம்.சி தண்ணீரைத்தான் குறைப்பீர்கள்?" விவசாய சங்க நிர்வாகிகள் கொதிப்பு!



 

"ன்னும் எவ்வளவு டி.எம்.சி தண்ணீரைத்தான் குறைப்பீர்கள்?. ஏற்கெனவே வழங்கவேண்டிய தண்ணீரை முழுமையாகக் கர்நாடகம் ஒருமுறைகூட கொடுக்கவில்லை. இப்போ,உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கும் தண்ணீரின் அளவை கர்நாடகத்திடம் இருந்து யார் வாங்கித் தருவது?. கர்நாடகாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரப் போகிறது. அதனால்,எல்லா தேசியக் கட்சிகளும் கர்நாடகாவுக்கு வாலாட்டுவார்களே தவிர, தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தரமாட்டார்கள்" என்று கொந்தளிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

Sponsored


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே நிலவும் பிரச்னை 125 வருடங்களாக நீடித்த நிலையில், அதுதொடர்பான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் 177.25 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பான 192 டி.எம்.சி தண்ணீரைவிட 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைவாக அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.  

Sponsored


இதுபற்றிப் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன்,
"மலைபோல உச்ச நீதிமன்றத்தை நம்பி இருந்த தமிழக விவசாயிகளின் வயிற்றில் ஓங்கி அடித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. 'யானைப் பசிக்கு சோளப்பொறி' மாதிரி அளவைக் குறைத்து அறிவித்திருக்கிறது. அதுவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 192 டி.எம்.சி தண்ணீர் அளவில் இருந்து தீர்ப்பில் குறைக்கப்பட்டுள்ள 14.75 டி.எம்.சி தண்ணீரை, 'தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளது' என்று சொல்லி குறைத்திருப்பது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல் உள்ளது. என்ன அடிப்படையில், எந்த விஞ்ஞானக் குழுவை வைத்து ஆய்வு பண்ணி இப்படி அறிவித்தார்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கிறது என்று யார் சொன்னது? எந்த முகாந்திரத்தில் உச்ச நீதிமன்றம் அப்படிச் சொன்னது?. 

Sponsored


 1924-ல் தமிழகத்திற்கு கர்நாடகம் 520 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென்று ஒப்பந்தம் இருக்கிறது. அதன் பிறகு, கர்நாடகம் 1987-ல் 205 டி.எம்.சி தண்ணீர் தருவதாகச் சொல்லி, போட முயன்ற ஒப்பந்தத்தை எதிர்த்து, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அம்மாநிலத்திற்குச் செல்லவில்லை. அதன்பிறகு,2005-ல் நமக்கு 264 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். அப்புறம் 270 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அதுவும் தரப்படவில்லை. 2007 பிப்ரவரியில் 192 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும்;  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. ஆனால், அந்தத் தண்ணீரையும் கர்நாடகம் நமக்குத் தரவில்லை. அதன் பின்னர் வந்த எந்தவொரு மத்திய அரசும், தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கவில்லை. 2013 பிப்ரவரி 15-ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வந்தது. ஆனால்,அதன்பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத இப்போதைய மோடி அரசு, அந்த உத்தரவு நீர்த்துப் போகும் அளவிற்கான ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்தது. அதைதொடர்ந்து, இதே உச்ச நீதிமன்றம் 2015-ல் விநாடிக்கு 200 டி.எம்.சி தண்ணீரை 10 நாள்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என உத்தரவு போட்டது. அந்த உத்தரவையும் கர்நாடகா மதிக்கவில்லை" என்றார்.

அடுத்து,பேசிய காவிரி ஆறு பாதுகாப்புப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் விஜயன், 

"வடமாநிலத்தில் ஓடும் பியாஸ், தெனிந்தியாவில் ஓடும் கோதாவரி, நர்மதா நதிகளுக்கெல்லாம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்கு. அதை அமைத்த மத்திய அரசுகளால் காவிரிக்கு மட்டும் மேலாண்மை வாரியம் அமைக்க மனசில்லை. இப்போ உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவில்,'காவிரி யாருக்கும் சொந்தமானதல்ல' என்று சொல்லி இருப்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம். உலக நதிநீர்ப் பங்கீட்டு தீர்வு ஒப்பந்தத்தின்படி,'நதிகள் தேசத்திற்கு சொந்தமானவை. ஒரு நதி எந்தப் பகுதியில் அதிகம் பாய்கிறதோ, அதிக பரப்பளவில் அதன் பயன்பாடுகள் இருக்கிறதோ அதைக் கொண்டு அதிகமாகவும், பரப்பளவு குறைவாக உள்ள பகுதிகளுக்குக் குறைவாகவும் நீர் பங்கீடு பண்ணனும்'னு இருக்கு. ஐ.நா சபையே ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் இது. நமது தமிழகத்தில் காவிரி 435 கிலோமீட்டரும், கர்நாடகாவில் 365 கிலோமீட்டரும் பாய்கிறது. அதேபோல்,1966-ல் பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கியில் போடப்பட்ட சர்வதேச நதிநீர் பகிர்மான தீர்வு ஒப்பந்தமும்,'நதிகள் தேசத்திற்குச் சொந்தமானவை'ன்னு சொல்லுது. ஆனால், இந்த ஒப்பந்தங்களை நமது மத்திய அரசுகள் காவிரி விஷயத்தில் மட்டும் மீறி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அமிலத்தைக் கொட்டுகின்றன. அப்புறம்,இப்ப சொன்ன தீர்ப்பின்படி, கர்நாடகத்திடம் இருந்து யார் நமக்கு தண்ணீர் வாங்கித் தருவது?. நதிநீர் விஷயத்தில் தண்ணீரைப் பிரிச்சுக் கொடுக்கும் கடமை மத்திய அரசிற்கு உள்ளது. விரைவில் கர்நாடகாவில் தேர்தல் வரப் போகிறது. அதனால்,இப்போதுள்ள மத்திய பி.ஜே.பி-யும், காங்கிரஸூம் கர்நாடக மாநிலத்திற்குத்தான் வாலாட்டுவார்களே தவிர, தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தரமாட்டார்கள். 1987 வரை தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கரில் முப்போகம் நடந்து வந்த விவசாயம், தற்போது16 லட்சம் ஏக்கரில் ஒருபோகம்கூட காவிரித் தண்ணீரை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலையை எட்டியுள்ளது. அதனால் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை பண்ணணும். அதோடு,கர்நாடகம் நமக்குக் கொடுக்க வேண்டிய அளவாக நிர்ணயித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் அளவு தண்ணீரை ஒரு துளி குறையாமல் கொடுக்கவும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், தமிழக விவசாயி மீள்வான். இல்லைன்னா, கொத்துக்கொத்தாக நடக்கும் தமிழக விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க முடியாது" என்றார். 



Trending Articles

Sponsored