8 வயதில் சர்வதேச சாதனை படைத்த ‘யோகா’ சிறுமி!



நெல்லையைச் சேர்ந்த 8 வயது சிறுமி யோகா செய்வதில் சர்வதேச சாதனைகளைப் படைத்து பாராட்டைப் பெற்றுவருகிறார். அடுத்ததாக, குடும்பத்தின் மூன்று தலைமுறைப் பெண்கள் இணைந்து, தண்ணீருக்குள் யோகாசனம் செய்து சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளனர். 

Sponsored


நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த 8 வயது சிறுமி, பிரிஷா. பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமியின் பாட்டி ரவிசந்திரிகா. இவர், பிரிஷாவுக்கு ஒரு வயதாக இருந்தபோதிலிருந்தே யோகாசனம் கற்றுக்கொடுத்துவருகிறார். பிரிஷாவின் தாயார் தேவிபிரியாவும் யோகா செய்வதால், அவரும் இவருக்கு உதவிசெய்துவந்தார். அதனால் இளம் வயதிலேயே மாநில மற்றும் தேசிய அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று, நூற்றுக்கும் அதிகமான மெடல்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 

Sponsored


ஆசனத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர்களாலேயே செய்வதற்குச் சிரமப்படும் மிகவும் சவாலான 'கண்ட பேருண்டா' என்ற ஆசனத்தை வேகமாகச் செய்வதில் பிரிஷா திறமையானவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கண்ட பேருண்டா ஆசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்து உலக சாதனை படைத்தார். கடந்த டிசம்பர் மாதத்தில், ’ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ சாதனை நிகழ்ச்சியில் சாதனை படைத்தார். கடந்த ஜனவரி 25, 26 மற்றும் 27-ம் தேதிகளில், மலேசியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியின் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் முதலிடம் பிடித்தார். 

Sponsored


புதுவையில் நடைபெற்ற 24-வது சர்வதேச யோகா விழாவில் பங்கேற்ற மாணவி பிரிஷா, திறமையாக யோகாசனங்களைச் செய்து பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவரது திறமையைக் கண்டு வியந்த புதுவை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பாராட்டினார்கள். அவருக்கு, அகில இந்திய யோகா மாஸ்டர்ஸ் அசோசியேஷன் சார்பாக ’யோகா ராணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை சார்பாக ’யோகா கலா’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அத்துடன், பல்வேறு அமைப்புகளின் சார்பாக யோகாசனத்தில் சிறந்து விளங்கியமைக்காக பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இது பற்றி சாதனை மாணவியான பிரிஷாவிடம் பேசியபோது, ’’சிறு வயதில் இருந்தே நான் யோகாசானம் கற்றுவருகிறேன். என் பாட்டியும் அம்மாவும் தினமும் யோகா செய்வதால் அவர்களைப் பார்த்து நானும் கற்றுக்கொண்டேன். இதுவரை பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள போதிலும் அடுத்ததாகத் தண்ணீருக்குள் இருந்து யோகாசனம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு முன்பு ராணுவ வீரர் ஒருவர் தண்ணீருக்குள் ஆசனம் செய்தது சர்வதேச சாதனையாக உள்ளது. நான் குடும்பத்துடன் சேர்ந்து நீருக்குள் மூழ்கி யோகா செய்யப் பயிற்சி எடுத்துவருகிறேன். அதுவும் என் பாட்டி, அம்மா ஆகியோருடன் சேர்ந்து மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் நீருக்குள் மூழ்கி ஆசனம் செய்தது இல்லை. அதனால், அந்தச் சாதனையைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் உற்சாகத்துடன். சாதனைச் சிறுமியை நாமும் வாழ்த்துவோம்!



Trending Articles

Sponsored