'எனக்கு 450... உனக்கு 350...' - வாட்ஸ் அப் ’ஒரு நம்பர் லாட்டரி’யால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்Sponsoredசென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு, மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. வாட்ஸ் அப், இன்டர்நெட் என ஹைடெக்காக நடக்கும் இந்த லாட்டரி சீட்டு விற்பனையால் கூலித்தொழிலாளர்கள், தினமும் பணத்தை இழந்துவருகின்றனர். 

 தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை உள்ளது. தடையை மீறி சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. இந்த லாட்டரி சீட்டு வலையில் சிக்கி கூலித் தொழிலாளர்கள் தினமும் பணத்தை இழந்துவருகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனையும் ஹைடெக்காக நடந்துவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஓரமாக நிற்கும் ஒருவரிடம் வெள்ளைக் காகிதத்தை கூலித்தொழிலாளர் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். அந்தத் தாளில் மூன்று இலக்க எண்கள் எழுதப்பட்டுள்ளன. அந்த எண்கள்தான் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் என்று சொல்கின்றனர் அந்த வெள்ளைத்தாளை கையில் வைத்திருப்பவர்கள். அவர்களிடம் பேசினோம். 

Sponsored


 சார்... என்னுடைய பெயர், போட்டோ எதுவும் வரக் கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அந்த நபர். "அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள நிறுவனத்தில் தினக்கூலியாக வேலைப்பார்க்கிறேன். பணக்காரனாக வாழ வேண்டும் என்ற ஆசை. எவ்வளவுதான் உழைச்சாலும் வீட்டு வாடகை, குடும்பத்தை நடத்தவே வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. இதனால்தான் அதிர்ஷ்டத்தை நம்பி, லாட்டரி சீட்டுக்களை வாங்கிவருகிறேன். சில நேரங்களில் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. ஆனால், பம்பர் பரிசு கிடைக்கவில்லை. அதுமட்டும் கிடைத்துவிட்டால் நான் லட்சாதிபதிதான் என்று அவர் சொல்லும்போதே அவரது கண்கள் மின்னலாக மின்னின. அவரே தொடர்ந்தார். தினமும் 100 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுக்களை வாங்குவேன். பரிசுத்தொகை கிடைத்தால் நண்பர்களோடு ஜாலியாக டாஸ்மாக் பாரில் கொண்டாடுவோம். இல்லையென்றால் வீட்டுக்குப்போய்விடுவேன்" என்றார். 

Sponsored


 

அடுத்து நம்மிடம் பேசியவர், "லாட்டரி சீட்டு விற்பவர்களிடம் மூன்று நம்பர்களைச் சொல்ல வேண்டும். அந்த நம்பரைத்தான் வெள்ளைத்தாளில் எழுதி நம்மிடம் கொடுப்பார்கள். பரிசுத்தொகையைப் பொறுத்து லாட்டரி சீட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். 10 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லாட்டரி சீட்டுக்கள் உள்ளன. நம்மிடம் உள்ள நம்பர்களில் ஏதாவது ஒரு நம்பர் பரிசு எண்களில் இருந்தால் ஒரு தொகை கொடுப்பார்கள். இரண்டு நம்பர்கள் இருந்தால் அதைவிட கூடுதலான தொகை கிடைக்கும். மூன்று நம்பர்களும் இருந்தால் பம்பர் பரிசுதான். எனக்கு இதுவரை பம்பர் பரிசு கிடைக்கவில்லை. ஆனால், என்னுடைய நண்பருக்குக் கிடைத்துள்ளது. லாட்டரி சீட்டு வாங்கக் கூடாது என்று காலையில் முடிவு செய்வேன். ஆனால், சம்பளம் வாங்கியதும் மனம் மாறிவிடும். தானாக லாட்டரி சீட்டு விற்பவர்களிடம் பணத்தைக் கொடுத்து லாட்டரி சீட்டை வாங்கிவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்வேன். முடிவுகள் வாட்ஸ்அப்பில் நண்பர்கள் அனுப்பிவைப்பார்கள். பரிசு விழுந்தால் நம்முடைய செல்போன் நம்பருக்கு அழைப்புவந்துவிடும். உடனடியாக கமிஷன் தொகைபோக பரிசுத்தொகையை உடனே தந்துவிடுவார்கள்" என்றார். 

லாட்டரி சீட்டு விற்பனை குறித்து விரிவாகப் பேசினார் போலீஸ் உயரதிகாரிஒருவர், "லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தமிழகத்தில் தடை உள்ளது. இதனால், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுத்துவருகிறோம். எங்களுக்குக் கிடைக்கும் ரகசியத் தகவலின்அடிப்படையில் லாட்டரி சீட்டு விற்பனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு என்று அழைக்கப்படும் லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. நிரந்தரமாக ஓரிடத்திலிருந்து அவர்கள் லாட்டரி சீட்டுக்களை விற்பதில்லை. லாட்டரி சீட்டு விற்பவர்களும் அதை வாங்குபவர்களும் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர்.

 இன்று ரயில் நிலையத்தில் விற்பவர்கள், நாளை பஸ் ஸ்டாண்டில் விற்பார்கள். இதனால், அவர்களை அடையாளம் காண்பதில் எங்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. மூன்று நம்பர்கள் கொண்ட வெள்ளைக் காகிதம்தான் இங்கு லாட்டரி சீட்டு. அதில், விற்பவர்களின் கையெழுத்தும் இருக்கிறது. பிறகு, பரிசுத் தொகை விழுந்தவுடன் வாங்கியவர்களின் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. லாட்டரி சீட்டு விற்பனைக்குப் பின்னால் அரசியல் தலையீடும் இருக்கிறது. குறிப்பாக அந்தந்த ஏரியாவில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆசியோடுதான் லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது. இதனால், சிரமப்பட்டு லாட்டரி சீட்டு விற்பவர்களைப் பிடித்தால் போலீஸ் உயரதிகாரிகளின் சிபாரிசில் அவர்கள் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், போலீஸ் நிலையங்களுக்கு மாமூலும் கொடுக்கப்படுகிறது என்றார் வேதனையுடன். 

 

சென்னை அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர், ராயபுரம், மயிலாப்பூர் என முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றோம். அங்கு ஒரு நம்பர் லாட்டரி சீட்டு வாங்கியவர்கள் எனக்கு 450, உனக்கு 350 என்று தங்களுக்குள் பேசியபடி நடந்து சென்றனர். அது என்ன 450, 350 என்று விசாரித்ததால் மூன்று இலக்க ராசியான நம்பர் என்று தெரிந்தது. அதுதான் ஒரு நம்பர் லாட்டரி சீட்டின் தொழில் ரகசியம் என்று கூறியபடி அவர்கள் நம்மைக் கடந்து சென்றனர். 

பரிசுத் தொகை எவ்வளவு 

காலை 7 மணிக்குத் தொடங்கும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை இரவு 8 அல்லது 9 மணிக்குள் முடிந்துவிடுகிறது. அதன்பிறகு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 10 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் பம்பர் பரிசு. அதுபோல 50 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு (மூன்று இலக்க நம்பரும் இருந்தால்) பம்பர் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் பம்பர் பரிசு. இரண்டு நம்பர் இருந்தால் ஆயிரம் ரூபாய். ஒரு நம்பர் மட்டுமே இருந்தால் 100 ரூபாய். 100 ரூபாய் லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பம்பர் பரிசும் உள்ளது. லாட்டரி சீட்டு முடிவுகள் குறித்து வாட்ஸ் அப்பில் பெரிய விவாதமே நடக்கிறது. இந்த நம்பருக்குத்தான் பம்பர் பரிசு என்று சூதாட்டமும் நடப்பது தனிக்கதை. Trending Articles

Sponsored