ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ், ராமமோகன ராவைப் பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்?Sponsoredமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்... துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை சகாக்களுக்கும், இன்றைக்குச் சிம்ம சொப்பனமாக இருப்பவர் ராமமோகன ராவ்! ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நேரத்திலும், அவர் மரணமடைந்த பிறகு சில நாள்களும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த இவருடைய அலுவலகத்தைச் சோதனை செய்வதற்காகத்தான், வரலாற்றில் இல்லாதவகையில், வருமானவரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். 

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில், ராமமோகன ராவும் சாட்சியம் அளித்துவருகிறார். அங்கு அவர் அளித்துள்ள சாட்சியங்கள், ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும், இன்றைய ஆட்சி அதிகாரத்திலும் இருக்கும் அமைச்சர்கள் அனைவரின் நம்பிக்கை, விசுவாசம் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது; மற்றவர்களின் சாட்சிகளைவிட ராமமோகன ராவ் அளித்துள்ள சாட்சியம்தான், ஜெயலலிதாவின் அப்போலோ நாள்களை அக்குவேறு ஆணிவேறாகப் படம் பிடித்துக் காட்டுகிறது; போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை யாரும் தாக்கவில்லை என்பதை, ஆணித்தரமாகவும், லாஜிக்காகவும் நிரூபிக்கும் வகையில் ராமமோகன ராவின் சாட்சியம் அமைந்துள்ளது. அதுதான் பிரச்னை ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அமைச்சரவை சகாக்களுக்கு ‘ஷாக்’ அடிக்கிறது! ‘தங்களின் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடுமோ!’ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அதன் காரணமாகத்தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `ராமமோகன ராவ் கூறுபவை உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு’ என்கிறார். ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்ல முடியாமல், `நான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை... பார்க்கவில்லை... பார்க்கவில்லை...’ என்று கிளிப்பிள்ளைபோல் சத்தியம் செய்துவிட்டு, இடத்தைக் காலி செய்கிறார். அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர், `ராமமோகன ராவ் யாரையோ காப்பாற்றப் பொய் பேசுகிறார்; அவர் அப்பட்டமான அரசியல்வாதியைப்போல் பேசுகிறார்(அப்போ, அரசியல்வாதினா பொய்தான் பேசுவாங்களா?!)’ என்று அலறுகிறார்கள். இவர்கள் மொத்தமாக இந்தளவுக்குப் பதறித்துடிக்கும் அளவுக்கு ராம மோகன ராவ் சாட்சியத்தில் சொன்னது என்ன? 7.04.2018-அன்று ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் ராமமோகன ராவ் அளித்த சாட்சியமும், அவரைக் குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனின் கேள்விகளும்! 

Sponsored


கேள்வியும்... பதிலும்...

Sponsored


வழக்கறிஞர்: 22-ம் தேதி முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீங்கள் அவருடன் பேசினீர்களா?

ராமமோகன ராவ்: நான் பேசவில்லை. ஆனால், நான்கைந்து செய்திகளை திரு.ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் மூலம் முதல்வர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார். 

வழக்கறிஞர்: அப்போது, முதல்வரின் உடல்நிலை நன்றாக இருந்ததா? 

ராமமோகன ராவ்: இல்லை! அதற்கு முதல்நாளே, மெட்ரோ ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியின் போதே அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதை எங்களிடம் சொல்லிவிட்டு அவர் அறைக்குக்கூட போகாமல் அப்படியே வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். 

வழக்கறிஞர்: 22-ம் தேதி முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு நீங்கள் அவரைப்போய் பார்த்தீர்களா?

ராமமோகன ராவ்: ஆம். முதல்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்து நான் உடனே அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அப்போது, முதல்வர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். நான் அங்கேயே காத்திருந்தேன். அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, அவசர சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுசெல்லப்பட்டார். அப்போது, நான் முதல்வரைப் பார்த்தேன்.

வழக்கறிஞர்: மருத்துவமனையில் முதல்வருடன் யார் இருந்தார்கள்?

ராமமோகன ராவ்: மருத்துவமனையில் போய் நான் முதல்வரைப் பார்த்தபோது, சசிகலா இருந்தார். அவரோடு வேறு சில பெண்களும் இருந்தனர். 

வழக்கறிஞர்: சசிகலாவை உங்களுக்குத் தெரியுமா?

ராமமோகன ராவ்: முதல்வர் வீட்டுக்கு அலுவல்ரீதியாகச் செல்லும்போது, நான் பலமுறை சசிகலா அவர்களைப் பார்த்துள்ளேன். அவர் முதல்வர் வீட்டில் இருப்பார்.

வழக்கறிஞர்: தீபா, தீபக் ஆகியோரை உங்களுக்குத் தெரியுமா?

ராமமோகன ராவ்: அவர்களை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் பற்றி எதுவும் தெரியாது. முதல்வர் இறந்தபிறகு, நடந்த இறுதிச்சடங்கின்போதுதான் நான் தீபக்கை முதன்முதலில் பார்த்தேன். அப்போது, அருகிலிருந்தவர்களிடம், `அந்தப் பையன் யார் என்று விசாரித்தேன்’. அப்போதுதான், `முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக்’ என்று அவரைத் தெரிந்தது.

வழக்கறிஞர்: அப்போலோ மருத்துவமனையில் முதல்வருடன் நீங்கள் பேசினீர்களா?

ராமமோகன ராவ்: அவசர சிகிச்சை முடிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஸ்டெரெச்சரில் வைத்து முதல்வர் கொண்டு செல்லப்பட்டார். அப்போது, நான் ஸ்டெரெச்சர் அருகில் போனேன். என்னைப் பார்த்தும், ``நான் எங்கிருக்கிறேன்?” என்று என்னிடம் முதல்வர் கேட்டார். உடனே, ``நீங்கள் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறீர்கள்” என்று முதல்வருக்குப் பதில் சொன்னேன்.

வழக்கறிஞர்: நீங்கள் முதல்வருடன் பேசியபோது அங்கு வேறு யார் இருந்தார்கள்?

ராமமோகன ராவ்: ஸ்ட்ரெச்சரில் முதல்வரை அழைத்துச் சென்றபோது, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முதல்வரின் செயலாளர்கள் 4 பேர், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், சசிகலா மற்றும் சில அமைச்சர்கள் அங்கு இருந்தனர்.

வழக்கறிஞர்: அமைச்சர்கள் என்றால் யார்?

ராமமோகன ராவ்: என் நினைவின்படி ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மற்றும் சில அமைச்சர்கள் இருந்தனர்.

வழக்கறிஞர்: முதல்வர் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொன்னதை அந்த அமைச்சர்களும் பார்த்தார்களா?

ராமமோகன ராவ்: ஆம். `நான் எங்கே இருக்கிறேன்’ என்று என்னைப் பார்த்து முதல்வர் கேட்ட கேள்விக்கு, நான் `அப்போலோவில் இருக்கிறீர்கள்’ என்று பதில் சொன்னதை, அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். அமைச்சர்களும் பார்த்தனர்.

வழக்கறிஞர்: டி.ஜி.பி. ராஜேந்திரனும் அங்கு இருந்ததாக ஒரு சாட்சி சொல்லியிருக்கிறார். நீங்கள் டி.ஜி.பியை அங்கு பார்த்தீர்களா?

ராமமோகன ராவ்: அது என் நினைவில் இல்லை! ஆனால், 27-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம், டி.ஜி.பி.ராஜேந்திரனும் முதல்வரை மரியாதை நிமித்தமாகப் பார்த்து சல்யூட் செய்தனர். அதை முதல்வர் ஏற்றுக்கொண்டார். நான் அப்போது அங்கு இருந்தேன். அதனால், நான் அதைப் பார்த்தேன்.

வழக்கறிஞர்: நீங்கள் அப்போது எதற்காக அங்கு போனீர்கள்?

ராமமோகன ராவ்:  கோப்பு ஒன்றில் கையெழுத்து வாங்கப் போனேன்.

வழக்கறிஞர்: என்ன கோப்பு?

(உடனே குறுக்கிட்ட நீதிபதி ஆறுமுகசாமி, அதை இங்கு சொல்லத் தேவையில்லை. அது அரசாங்க ரகசியமாக இருக்கலாம். அதனால், அதை இங்கு சொல்லத் தேவையில்லை என்றார். அதன்பிறகு, அந்தக் கேள்வியும் பதிலும் கைவிடப்பட்டது)

வழக்கறிஞர்: முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோது, கோப்புகள் கையெழுத்து வாங்கப்பட்டதா?

ராமமோகன ராவ்: 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, முதல்வரின் செயலாளர் ராமலிங்கம், சில நோட்ஸிலும், சில கடிதங்களிலும் கையெழுத்து வாங்கி உள்ளார்.

வழக்கறிஞர்: காவிரி விவகாரம் குறித்து முதல்வர் மருத்துவமனையில் ஆலோசனை நடத்தினார் என்று பத்திரிகைச் செய்தி கொடுக்கப்பட்டதே? அது உண்மையா?

ராமமோகன ராவ்: ஆம். அரசுத் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமார சுவாமி, அன்று அந்த விவகாரம் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நானும் இருந்தேன். 

வழக்கறிஞர்: காவிரி பிரச்னை தொடர்பான முதல்வரின் அறிக்கையை நீங்கள் ஏன் டெல்லியில் போய் படித்தீர்கள்? அமைச்சர் ஏன் படிக்கவில்லை?

ராமமோகன ராவ்: முதல்வர் என்னைத்தான் படிக்கச் சொன்னார்; அமைச்சர்கள் யாரையும், அதைப் படிக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிடவில்லை. ஆனால், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னுடன் டெல்லி வந்திருந்தார். 

வழக்கறிஞர்: மருத்துவமனை விவகாரங்கள் எல்லாம் சரி. ஆனால், மருத்துவமனைக்குப் போவதற்கு முன், முதல்வரைச் சிலர் தாக்கி, துன்புறுத்தி, அவரை நிலைகுலைய வைத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

(இந்தக் கேள்வியைக் கேட்டதும், நீதிபதி ஆறுமுகசாமி ‘பிரமாதம்’ என்பதுபோல் முகத்தில் பாவனை செய்தார்)

ராமமோகன ராவ்: அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

வழக்கறிஞர்: எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?

ராமமோகன ராவ்: 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை முடிந்து, தீவிர சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, முதல்வர் என்னை மட்டும் அவருடைய அறைக்கு அழைத்தார். நான் உள்ளே போனதும், `இப்போது என்ன செய்யலாம்?’ என்று கேட்டார். அதற்கு நான், `நீங்கள் ஒரு மாநில முதல்வர்; நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், உடடினயாக இதைப் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்று சொன்னேன். அதன்பிறகு, மற்ற செயலாளர்களையும் முதல்வர் அந்த அறைக்கு அழைத்தார். அவர்களுடனும் கலந்தாலோசித்துவிட்டு, ``டாக்டர்களிடம் சொல்லி என் உடல்நிலை பற்றி பொதுமக்களுக்குச் சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார். அப்போது, நான், மற்ற செயலாளர்கள், சில காவல்துறை அதிகாரிகள் அங்கு இருந்தோம். சசிகலா அப்போது அங்கு இல்லை. வீட்டில் இருந்தவர்களால், தனக்கு எதாவது துன்புறுத்தல் ஏற்பட்டிருந்தால், முதல்வர் அந்த நேரத்தில் எங்களிடம் சொல்லியிருப்பார். மேலும், 27-ம் தேதிக்கு முன்பாக, நான் டெல்லியில் இருந்தபோது, முதல்வர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போதும் அவர் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை. அதுபோல, 22-ம் தேதியிலிருந்து 27-ம் தேதிவரை முதல்வர் ஓரளவுக்கு நல்ல உடல்நிலையோடும், மனநிலையோடும் இருந்தார். அந்தச் சமயத்தில் பலமுறை நாங்கள் அவரைச் சந்தித்துப் பேசினோம். `வேறு நபரால் அவரது உடல்நிலைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்தச் சந்தர்ப்பங்களில் எதாவது ஒன்றில் அவர் அதை எங்களிடம் சொல்லியிருப்பார்.

வழக்கறிஞர்: எய்ம்ஸ் மருத்துவர்கள் வரக் காரணம் என்ன?

ராமமோகன ராவ்: எய்ம்ஸ் மருத்துவர்களை வரச் சொல்லி என் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை செயலாளர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதன்பேரில் மத்திய அரசு அந்த மருத்துவர்களை அப்போலோவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் அப்போலோ மருத்துவர்களுடன் இணைந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றால் அது சரி.

வழக்கறிஞர்: முதல்வர் இறந்ததாகச் சொல்லப்படும் டிசம்பர் 5-ம் தேதி என்ன நடந்தது?

ராமமோகன ராவ்: 5-ம் தேதி எக்மோ கருவியை முதல்வர் உடலிலிருந்து எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். அப்போது, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் அங்கு இருந்தார். இந்த இரு சந்தர்ப்பங்களிலும் என் நினைவில் இருந்தவரை மாண்புமிகு அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி, விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, தம்பிதுரை, சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.Trending Articles

Sponsored