பறவையே எங்கு இருக்கிறாய்... வெறிச்சோடிய வெள்ளோடு பறவைகள் சரணாலயம்!Sponsoredஎளிதில் காணக்கிடைக்காத பல அரிய உயிரினங்களைப் பார்ப்பதற்காக, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை செல்லும் ஒரே இடம் சரணாலயம். இன்றைய நவநாகரிக உலகத்தில் வேகமான வாழ்க்கைமுறையில் தமிழகச் சரணாலயம் ஒவ்வொன்றும் கலையிழந்து காணப்படுகின்றன. ஆம், தன்னைக் காக்கவும், தனக்கான தேவையைப் பூர்த்திசெய்யவும், தேடி வரும் பறவையினங்களுக்கான சிறந்த வாழ்விடமாக தன்னை மாற்றவும் எவராவது வர மாட்டார்களா... என ஏங்கிக்கிடக்கும் தமிழகச் சரணாலயங்களில் ஈரோடு வெள்ளோடு பறவைகள் உய்விடமும் ஒன்று.

ஈரோட்டிலிருந்து 13 கி.மீ தூரத்தில் வெள்ளோடு என்னும் கிராமத்தில் அமைந்திருக்கிறது அந்தச் சரணாலயம். அதன் பெயர் 'வெள்ளோடு பறவைகள் உய்விடம்’. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஒரே பறவைகள் சரணாலயம் இதுதான். இதில் உள்ள ஏரி, 77.85 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பறவைகளின் வரத்து மற்றும் பாதுகாப்புக் கருதி, 2000-ம் ஆண்டு இதை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது தமிழக அரசு. அதன் பிறகு அரசு நிதி ஒதுக்கி, சரணாலயத்தை மேம்படுத்த ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றானது வெள்ளோடு பறவைகள் உய்விடம்.

Sponsored


Sponsored


இந்தப் பறவைகள் சரணாலயத்தில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரைதான் பறவைகள் வந்து போகும். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 20 வகையான இனத்தைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்துபோகும். அதுமட்டுமல்லாமல், இந்தியப் பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற அரிய வகைப் பறவைகளும் இந்தச் சரணாலயத்துக்கு வரிசைகட்டி வரும். இங்கு இதுவரை சுமார் 125 வகையான பறவைகள் வந்து சென்றதாக பதிவுகள் உள்ளன.  

இந்தச் சரணாலயத்தில் உள்ள ஏரிக்கு, மழையால் கிடைக்கக்கூடிய நீரும், பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரும், அதன் மூலம் கிடைக்கும் ஊற்றுநீரும்தான் நீர் ஆதாரம். மழைப் பொழிவு குறைவானதன் காரணத்தாலும், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாததாலும் சரணாலயத்தில் உள்ள ஏரி, முற்றிலும் வரண்டுபோயுள்ளது. இதனால், பறவைகள் வரத்து குறைந்துள்ளது.

இதுகுறித்து விவரமறிந்த வன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடந்த நான்கு வருடங்களாக இந்த நிலை நீடிக்கிறது. இயற்கைச் சூழல்தான் ஒரு சரணாலயத்துக்கு முக்கியம். பறவைகளின் வரத்துக்கு தற்போதைய காலநிலை மாற்றம் உகந்ததாக இல்லை. சரணாலயத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் நிறைய இருந்தால், மீன் கிடைக்கும். எனவே உணவுக்காகவும், ஒருசில பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும் இந்தச் சரணாலயத்தைத் தேடிவரும். 

சுற்றி இருக்கும் இடம் பாதுகாப்பானதாக, உணவு நிறைந்ததாக, சிறப்பான சீதோஷ்ண நிலையுடன் அமைதி நிலவினால்தான் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்குத்தான் பறவைகள் இடம்பெயரும். ஆனால், ஈரோடு வெள்ளோடு பறவைகள் உய்விடத்தில் இதுபோன்ற எந்த ஒரு சூழ்நிலையும் இல்லாததால்தான் பறவைகளின் வரத்து, அவற்றின் இனப்பெருக்கத் திறன் என அனைத்தும் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், இந்தச் சரணாலயத்தில் வாழ்ந்துவரும் ஒருசில அரியவகைப் பறவையினங்கள் அழியக்கூட வாய்ப்பிருக்கிறது.

இதைத் தவிர்க்க, சரணாலயத்தில் உள்ள ஏரிக்கு வருடம் முழுவதும் தண்ணீர் வந்தாலே போதும். பவானிசாகர் அணையிலிருந்து இதற்காக தனியாக ஒரு மடைவைத்து தண்ணீரைக் கொண்டுவந்தால், பிரச்னை தீர்ந்துவிடும். இதை சாத்தியப்படுத்துவது அரசு கையில்தான் உள்ளது” என்றார்.

தான் ஓய்வெடுக்க, இளைப்பாற, இனப்பெருக்கம் செய்ய ஓர் இடம் இருக்கிறது என, பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சிறகடித்துப் பறந்து வரும் ஒரு பறவைக்கு, அதற்கான சூழ்நிலை அந்த இடத்தில் இல்லை என்றால் இயற்கைக்கு நாம் துரோகம் செய்வதாகத்தானே அர்த்தம்?Trending Articles

Sponsored