புதிய ஒப்பந்த வரைவுக்குக் கர்நாடகம் எதிர்ப்பு! - காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 17Sponsoredகாவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக 1972- ம் ஆண்டு மே மாதம் முதல்வர்களாக அப்போது பதவியில் இருந்த தமிழகத்தின் கருணாநிதி, கேரளாவின் அச்சுதமேனன், கர்நாடகத்தின் தேவராஜ் அர்ஸ் ஆகியோர் டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.லட்சுமண ராவ் முன்னிலையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

Sponsored


இந்தச் சந்திப்பின்போது, `பேச்சுவார்த்தை மூலமே காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது; காவிரி உண்மை அறியும் குழுவை அமைப்பது’ என முடிவெடுக்கப்பட்டது. மேலும், ``மத்திய அரசாங்கம் இன்னும் ஆறு மாதங்களில் நடுநிலையான தீர்வு ஒன்றினை அடைய உதவி செய்யும். இதனிடையில், எந்தவொரு மாநிலமும் இப்போதுள்ள அளவைக் காட்டிலும், மிகையாகக் காவிரி நீரைத் தேக்கிவைத்தோ அல்லது பயன்படுத்தியோ சிக்கலை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது” என்கிற ஒப்பந்தம் மூன்று மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 

Sponsored


காவிரி உண்மை அறியும் குழு!

மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காவிரி வடிநிலப் பகுதியில் பயனடையும் பகுதியின் அளவு, பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு போன்ற விவரங்களைத் திரட்டுவதற்காகக் காவிரி உண்மை அறியும் குழு, 1972- ம் ஆண்டு ஜூன் 12- ம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இரண்டு பொறியாளர்கள் (பி.ஆர்.அஹுஜா, ஜதீந்திர சிங்) உள்பட ஓய்வுபெற்ற விவசாயத் துறை ஆணையர் (ஜே.எஸ்.படேல்) ஒருவரும், நீதிபதி பி.டி.பால் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். `1972- ம் ஆண்டு ஜூன் 15-இல் ஆரம்பித்து அதே ஆண்டு செப்டம்பர் 15- ம் தேதிக்குள் இந்தக் குழுவினர் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்’ எனக் காலக்கெடு விதிக்கப்பட்டது. இக்குழுவினர் தனது ஆய்வுகளை முடித்து அறிக்கை கொடுக்கும்வரை, `சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் காவிரிப் பிரச்னையை மேலும் பலவீனம் செய்துவிடாத வகையில் இருக்க வேண்டும்’ என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை, 1972 டிசம்பர் 15- ம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

ஒருநபர் கமிட்டி!

ஆய்வறிக்கையைப் படித்துப் பார்த்த மூன்று மாநில முதல்வர்களும் மத்திய அமைச்சர் கே.லட்சுமண ராவுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர். அத்துடன், உண்மை அறியும் குழுவிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, 1973- ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சி.சி.படேல் தலைமையில் ஒருநபர் கமிட்டி ஒன்றை அமைத்தது மத்திய அரசு. காவிரி நதிநீர்ச் சிக்கல்கள் குறித்து படேல் ஆய்வுகளை மேற்கொண்டார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 1974-இல் மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கே.சி.பந்தும், நவம்பர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஜெகஜீவன் ராமும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரிப் பள்ளத்தாக்கு ஆணையம்!

1974- ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கூடிய கூட்டத்தில், மத்திய அரசு தயாரித்த காவிரி ஒப்பந்த வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரைவு அறிக்கையில் மூன்று முக்கிய இலக்குகள் இடம்பெற்றன. `காவிரி நீருக்கு உரிமையுள்ள மாநிலங்கள் நான்கும் அதனை உகந்த வகையில் பயன்படுத்திக்கொள்வது; சிக்கனமான வகையில் நீரைப் பயன்படுத்துவதன் மூலம் உபரிநீரைக் கூடுதல் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் தொழில் திட்டங்களுக்கும் பயன்படுத்திக்கொள்வது; நீர்த்தேக்கங்களின் பராமரிப்பையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதன் வழியே சிறப்பான வகையில் காவிரி நீரைப் பயன்படுத்திக்கொள்வது’ என்கிற அந்த இலக்குகளை வைத்து காவிரிப் பள்ளத்தாக்கு ஆணையம் (Cauvery Valley Authority) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், பல்வேறு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, `சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுடைய பாசனத்துக்குத் தேவையானதுபோக எஞ்சிய நீரை வீணாக்காமல் சேமிப்பதை உறுதிசெய்து, அப்படிச் சேமிக்கப்பட்ட நீரை அந்தந்த மாநிலங்களுக்கே மறுபடியும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்வது; கிடைக்கக்கூடிய நீரின் அளவு குறித்த துல்லியமான தகவல்களைச் சேகரித்து, அதன் வழியே மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு உரிய விகிதத்தில் கிடைப்பதற்கு உறுதி செய்வது’ எனப் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றன. 

கர்நாடகம் எதிர்ப்பு!

இந்த அம்சங்களுடன் கூடிய ஒப்பந்த வரைவு அறிக்கை விவாதிக்கப்பட்டபோது, மாநிலங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் எழத்தொடங்கின. குறிப்பாக, கர்நாடகம் எப்போதும்போல எதிர்வினை ஆற்றத் தொடங்கியது. இதுகுறித்து, அப்போது கர்நாடக நீர்வளத் துறை அமைச்சராக இருந்த நஞ்சே கெளடா, ``புதிய ஒப்பந்த வரைவு, 1924- ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தைவிட ஆயிரம் மடங்கு அதிகமான அநீதியை இழைக்கும். இதனைக் கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டால், கர்நாடகத்துக்குப் பேரழிவு காத்திருக்கிறது” என்றார். கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சென்னபசப்பா, ``அறிவியல்பூர்வமற்ற, நடைமுறை சாத்தியமற்ற ஒப்பந்த வரைவு இது” என்றதுடன், ``இதை ஏற்றுக்கொண்டால் குழப்பமும், குளறுபடியுமே மிஞ்சும்” என்று எச்சரித்தார். 

மத்திய அரசுக்குக் கடிதம்!

இதையடுத்து, அந்த ஒப்பந்த வரைவு அறிக்கை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீண்டும் விவாதித்தபோதிலும் அதில் திருப்தியில்லாமல் போனது. இப்படிப் பேச்சுவார்த்தையால் பலனில்லாமல் போகவே தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார். அதில், `காவிரிப் பிரச்னையைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, `விரைவில் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அத்துடன், தி.மு.க. எம்.பி-க்கள், பிரதமர் இந்திரா காந்தியையும், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவையும் சந்தித்து உடனே தீர்ப்பாயம் அமைக்கும்படி வலியுறுத்தினர். 

- காவிரி பாயும்....Trending Articles

Sponsored