திரு பழனிசாமி... வளர்ச்சிக்காக உங்கள் நிலத்தை சதுர அடி 350-க்கு கொடுப்பீர்களா?- விவசாயிகள்



Sponsored



சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டுவழி பசுமை சாலைத் திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல் போலீஸார் குவிக்கப்பட்டு, விவசாயிகளை அச்சுறுத்தியும், மிரட்டியும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கைது செய்தும், அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தி நில அளவை செய்து, எல்லைக்கல் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால், அந்த மாவட்ட விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வழக்கத்தைவிட குறைவான விவசாயிகளே கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய விவசாயி ஜெயராமன், ''நாங்க எல்லோரும் மாடு மேய்த்து விட்டு உங்க பேச்சைக் கேட்டு, இங்கு அமைதியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கோம். நீங்க வந்தபோது 'நானும் விவசாயியின் மகள்' என்று சொன்னீர்கள். அந்தக் காரணத்தால் அமைதியாக இருக்கிறோம். ஆனால் எங்க சக விவசாயிகள் பெரும் துன்பத்தில் இருக்கிறார்கள். எட்டுவழி பசுமைச் சாலை பற்றித்தான் பேசுகிறேன். அந்த பசுமைச் சாலை திட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை, பொதுமக்களுக்கு என்ன நன்மை என்பதை விளக்கிக் கூறுங்கள்.  மிகவும் வேதனையாக இருக்கிறது. உங்கள் மீது இருக்கும் நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாணை அனுப்பிவிட்டு முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்தி வருகிறீர்கள். விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு நிறைய விவசாயிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்'' என்றார்.

Sponsored


மாவட்ட ஆட்சியரோ, "நிச்சயம் கடைசியில் சொல்கிறேன். அமருங்கள்" என்று கூறிவிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். முதல்முறையாக சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைப் பற்றி வாய் திறந்து பேசினார். பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்து விட்டு மீண்டும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அவர் கலந்துக் கொண்டார்.

Sponsored


நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ், "ஏற்கெனவே நான் நான்கு வழிச் சாலைக்கு என் நிலத்தை கொடுத்தேன். அதற்கு இன்றுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு ஏற்கெனவே மூன்று சாலைகள் இருக்கும் போது எட்டு வழிச் சாலைக்காக போலீஸைக் குவித்து விவசாய நிலங்களை பறிக்கிறீர்கள். இந்த எட்டு வழிச் சாலை எதற்கு?

சேலம் மாவட்டம் தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிதான், தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார். அதனால் எட்டு வழிச்சாலை போட்டு சென்னைக்கு சென்று வருவதைவிட சேலத்திற்கே தலைமைச் செயலகத்தைக் கொண்டுவந்து விடலாம். அவர் சேலத்திற்கு தலைமைச் செயலகத்தை கொண்டு வந்தாலும் கொண்டு வருவார். சட்டசபையில் எட்டுவழிச் சாலையை போராடிக் கொண்டு வந்ததாகச் சொன்னார். ஒரு விவசாயி என்ற முறையில் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஜூன் 14-ஆம் தேதி கருத்துக் கேட்பு, விசாரணைக் கூட்டம் என்று கூறிவிட்டு திடீரென நிலங்களைக் கையகப்படுத்துகிறீர்கள். அதை முன்கூட்டியே சொல்லி இருக்கலாம். இந்த எட்டு வழிச் சாலையால் தமிழகத்தில் 50,000 பேர் அகதிகள் ஆவார்கள். அதனால் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துச் செல்கிறேன்'' என்று வெளியேறினார். அவருடன் மேலும் ஏழு விவசாயிகளும் வெளியேறினார்கள்.

மற்றொரு விவசாயி எழுந்து இந்த ''எங்களுக்கு இந்த எட்டு வழிச் சாலை தேவையில்லை" என்றார். ஓமலூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார், திடீரென குறுக்கிட்டு ''பெரும்பான்மை விவசாயிகள் இத்திட்டத்தை வரவேற்கிறார்கள்'' என்று சொன்னதும் அனைத்து விவசாயிகளும் சூழ்ந்துகொண்டு, ''அவரைக் கூட்டத்தை விட்டு வெளியேற்றுங்கள். விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். நீ அநீதியாக பேசுகிறாயா?'' என்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துத் திட்டினார்கள். இதையடுத்து அதிகாரிகள் தலையிட்டு அமைதிப்படுத்தினார்கள்.

அடுத்துப் பேசிய தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ''எட்டு வழி பசுமைச் சாலை தேவையில்லை. எங்களிடம் விசாரணைக்கு அழைப்பாணை கொடுத்துவிட்டு திடீரென போலீஸாரைக் குவித்து, விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி நில அளவை செய்து வருகிறீர்கள். ஜனநாயக முறைப்படி விவசாயிகள் போராடக்கூட முடியாமல், யாரிடமும் பேச முடியாமல் உள்ளனர். விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பவர்களையும் கைது செய்கிறீகள். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது'' என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மாதேஸ்வரன், ''எட்டு வழி பசுமைச் சாலையில் தொடக்கத்திலேயே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்கிறீர்கள். 10 டன், 20 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் எப்படி 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்? இதிலிருந்தே பொய்யான திட்டம், மக்களை ஏமாற்றும் திட்டம் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. குடியிருக்கும் வீடுகளுக்கு ஒரு சதுர அடி 340 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். இதே மாவட்டத்தில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடும், நிலமும் இருக்கிறது. அவருடைய வீட்டை சதுர அடி 350 ரூபாய் கொடுத்தால் எழுதிக் கொடுத்து விடுவாரா? எனவே, இந்த எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது'' என்றார்.



Trending Articles

Sponsored