ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்!



Sponsored



தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையில் இருந்து இதுவரை 94 டேங்கர் லாரிகளில் 2124.78 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றப்பட்டுள்ளது. சேமிப்பிக்கலனின் அடிப்பகுதியில் கழிவுகளுடன் இருப்பதால் மீதம் இருப்பதை  வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தமாக மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தினை அடுத்து இந்த ஆலைக் கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டு 28-ம் தேதி சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த ஆலையிலிருந்து  சல்பியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டுள்ளது என்று வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த 17-ம் தேதி, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசுக்கடுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், தாசில்தார்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Sponsored


ஆய்வில் சல்பியூரிக் ஆசிட் இருக்கும் சேமிப்புக்கலனில் கசிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.  இந்நிலையில், அதன்  மறுநாள்(18-ம்  தேதி) முதல் டேங்கர் லாரிகள் மூலம் ஆசிட் வெளியேற்றும் பணி துவங்கியது.  ஸ்டெர்லைட் ஆலையில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், ஜெனரேட்டரை பயன்படுத்தி இயந்திர மோட்டார் மூலம் சல்பியியூரிக் ஆசிட் டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டு வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது.  டேங்கர் லாரிகள் பற்றக்குறையாலும் இப்பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. 7-வது நாளாக நேற்றும் இப்பணி தொடர்ந்து நடைபெற்றது.

Sponsored


இதுவரை 94 டேங்கர் லாரிகள் மூலம் 2124.78 மெட்ரிக் டன் சல்பியூரிக் வெளியேற்றப்பட்டு, இதனை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சேமிப்பு கலனின் அடிப் பகுதியில் கழிவுகளுடன் கூடிய சல்பியூரிக் ஆசிட் இருப்பு உள்ளது.

இதனை  இயந்திர மோட்டார் மூலம்  வெளிக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனை எப்படிப் பாதுகாப்பாக முழுமையாக வெளியேற்றுவது என  ஆய்வுக்குழுவினர் ஆலோசனை  நடத்தி  வருகின்றனர்.  மேலும் ஏதாவது ஆசிட் கழிவுகள் உள்ளதா?, மற்ற ஆசிட் சேமிப்புக் கலன்களில் உள்ள இருப்பு நிலை என்ன என்பது குறித்தும் இக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.



Trending Articles

Sponsored