"செந்தில்பாலாஜி அரசியல் செய்ய, எங்க வாழ்வாதாரம்தான் கிடைத்ததா?" - மாட்டு வண்டி உரிமையாளர்கள்!Sponsoredகரூர் என்றாலே, காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் நடக்கும் தற்போதைய இமாலய மணல் கொள்ளைதான் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. கட்சி பாகுபாடின்றி இங்குள்ள அரசியல் புள்ளிகளின் வருமானத்துக்கு வழி செய்வதே இந்த மணல் கொள்ளைதான். இந்த நிலையில், இந்த மணல் விவகாரத்தை வைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட செந்தில்பாலாஜியும் முஷ்டியை முறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 

சில தினங்களுக்கு முன்பு தனது பரிவாரங்களோடு கரூர் கலெக்டர் அன்பழகனைச் சந்தித்த செந்தில்பாலாஜி, தனது கையோடு கொண்டுபோயிருந்த ஒரு மனுவை நீட்டினார். அந்த மனுவில், ``காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் கடந்த ஆறுமாத காலமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி பிழைப்பு நடத்திய ஏழை மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு மணல் அள்ள தடை போடப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றமும், எந்தச் சட்டமும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதைத் தவறு என்று சொல்லவில்லை. அமைச்சர் தரப்பு வேன்றுமென்றே, கடந்த ஆறுமாத காலமாக அவர்களுக்கு மணல் அள்ள வாய்மொழியாகத் தடை போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியினர் பொக்லைனை வைத்து லாரிகளில் இரவுப் பகலாகச் சட்டத்தை மீறி மணல் கொள்ளையை அரங்கேற்றுகிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. எனவே, மாட்டு வண்டி உரிமையாளர்கள் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு உடனே அனுமதிக்க வேண்டும்'' என்று எழுதப்பட்டிருந்தது. வெளியே வந்த செந்தில்பாலாஜி, பத்திரிகையாளர்களிடம் இதே விவகாரத்தைப் பேட்டியாகக் கொடுத்தார். 

Sponsored


இதையடுத்து, அன்று மாலையே சமூக வலைதளங்கள் மூலமாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு அதற்குத் தக்க பதிலடி கொடுத்தது. இதற்கிடையில், மாட்டு வண்டி உரிமையாளர்களோ, ``அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கள் பிரச்னையைத் தீர்க்க இருந்தார். ஆனால், நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பி, காரியத்தைக் கெடுத்துவிட்டார் செந்தில்பாலாஜி" என்று புலம்புகிறார்கள்.

Sponsored


 இதுசம்பந்தமாகச் செந்தில்பாலாஜி தரப்பிடம் பேசினோம். ``மாட்டு வண்டியில் சொந்த வேலைக்காக, உள்ளூர்த் தேவைக்காக மணல் அள்ளுவதை எந்த கோர்ட்டும் தடை போடவில்லை. வியாபாரரீதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளுவதற்குத்தான் தடை போடப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகத்தை வைத்து வெறும் வாய்மொழி உத்தரவு மூலம் தடை போட வைத்து, ஆயிரக்கணக்கான மாட்டு வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்துக்குக் கள்ளிப்பால் ஊற்றியிருக்கிறது அமைச்சர் தரப்பு. இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ளூர்த் தேவைக்காக மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. பல கட்டடங்கள், கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. ஆனால், இரவு நேரத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் பொக்லைன் வைத்து லாரிகளில் முறைகேடாக மணல் கடத்தல் அமைச்சரின் ஆசிர்வாதத்தோடு நடக்கிறது. இதைத் தவிர, கரூர் மாவட்டத்தில் மாயனூர் மற்றும் சிந்தலவாடியில் மணல் குவாரி இயக்கப்படுகிறது. மணல் கொள்ளை மற்றும் இந்தக் குவாரிகளில் எடுக்கப்படும் மணல், லாரிகள் மூலம் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. ஆனால், கரூர் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேநேரத்தில், அமைச்சர் தரப்பு உள்ளூர்த் தேவைக்காக எம்சாண்ட் மணலை விற்பனை செய்கிறது. மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதித்தால், தனது எம்சாண்ட் மணல் விற்பனையாகாது என்பதால், தனது சுயநலத்துக்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை போட்டிருக்கிறது. அதனால்தான், மாவட்ட கலெக்டரிடம், `மாட்டு வண்டிகளில் அதன் உரிமையாளர்கள் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்' என்று செந்தில்பாலாஜி மனு  கொடுத்திருக்கிறார்" என்றனர் மிகத் தெளிவாக.

இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, ``உண்மையில், கரூர் மாவட்டத்தில் மணலால் வளர்ந்ததும், மணல் கொள்ளையை முன்நின்று நடத்தியதும் செந்தில்பாலாஜிதான். 2000-ல் அ.தி.மு.க-வுக்கு வந்த செந்தில்பாலாஜி, 2006-ல் எப்படியோ சீட் வாங்கி கரூர் தொகுதியில் ஜெயித்தார். ஆனாலும், ஜெயலலிதாவுக்குத் தெரியாத நபராகத்தான் இருந்தார் செந்தில்பாலாஜி. ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு, `மணல் அள்ளும் ஜே.சி.பி-யான கே.சி.பி-யைக் கண்டிக்கிறோம்' என்ற கோஷத்துடன், மிகப்பெரிய `நாடக'ப் போராட்டம் நடத்தினார். அதை, தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளிப்பரப்ப வைத்து, ஜெயலலிதாவிடம் பரிச்சயமானவர்தான் செந்தில்பாலாஜி. அதாவது, ஜெயலலிதாவிடம் தனது பெயர் பதியவே, இந்த `நாடக'ப் போராட்டத்தை நடத்தினார். அதன்பிறகு, 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அமைச்சர் வரை உயர்ந்து அவர் வளர்ந்த கதை அனைவருக்குமே தெரியும். அதேபோல், அவர் கட்சியின் மாவட்டச் செயலாளர், அமைச்சராக இருந்த அந்த நான்கு வருடங்களில் கரூர் காவிரி மற்றும் அமராவதியில் நடத்திய மணல் கொள்ளை கணக்கற்றது. அப்படிப்பட்ட அவர், இப்போது மணல் கொள்ளையைத் தடுக்கும் திடீர் அவதாரம் எடுத்திருப்பது எங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருக்கிறது'' என்றார்கள்.

இதுதொடர்பாக மாட்டு வண்டி உரிமையாளர்கள், `` `மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதால், மணல் குவாரிகளில் அள்ளப்படும் மணல் பிசினஸ் பாதிக்கப்படுகிறது' என்று ஆளுங்கட்சி புள்ளிகள் அமைச்சரிடம் புகார் சொல்லியதை அடுத்துதான், ஆறு மாதத்துக்கு முன்பு நாங்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு வாய்மொழி உத்தரவு மூலம் தடை போட்டார்கள். இதனால், நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதுகுறித்து எங்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `மாட்டு வண்டிகளில் அள்ளப்படும் மணலை லாரிகளுக்கு விற்கக் கூடாது' என்ற நிபந்தனையோடு, மீண்டும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்தார். இதனால், `சில நாள்களில் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்' என்று மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், தனக்கு வேண்டிய சில மாட்டு வண்டி உரிமையாளர்களுடன் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்து குட்டையைக் குழப்பிவிட்டார் செந்தில்பாலாஜி. இதனால்,கோபமான அமைச்சர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வாங்கித் தரும் முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார். செந்தில்பாலாஜி அரசியல் செய்ய, எங்க வாழ்வாதாரப் பிரச்னைதான் கிடைத்ததா? எங்கள் பிரச்னைக்கு மேலும்

சிக்கலை ஏற்படுத்திய செந்தில்பாலாஜிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவிருக்கிறோம்" என்று கொந்தளித்தார்கள்.

இதைப்பற்றி செந்தில்பாலாஜி தரப்பு, ``எங்கள் அண்ணன் (செந்தில்பாலாஜி) எந்தக் காலத்திலும் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டதில்லை. அமைச்சர் தரப்புதான் அந்த வேலையைச் செய்கிறது. மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வாங்கித் தரச்சொல்லி மாட்டு வண்டி உரிமையாளர்கள் அண்ணனிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்தார்கள். அதன்பொருட்டே, அண்ணன் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அமைச்சர் தரப்பு அதை அரசியலாக்கி, சில மாட்டு வண்டி உரிமையாளர்களைத் தூண்டிவிட்டு, அண்ணனுக்கு எதிராகக் கொம்பு சீவிவிடுகிறது. அமைச்சர் தரப்பு என்ன உள்ளடி செய்தாலும், மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமையைப் பெற்றுத் தருவார் அண்ணன்" என்றார்கள்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்போ, ``இன்று செந்தில்பாலாஜி, அதிபதியாக இருப்பதற்கு முக்கியக் காரணம் மணல்கொள்ளையே. அவர்தான் மணல்கொள்ளை மூலம் கொழித்திருக்கிறார். பவரில் இல்லாத இந்தச் சூழலில் அவர், மணல் கொள்ளையைத் தடுக்கவும், மாட்டு வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் தோன்றியுள்ள ரட்சகராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்" என்றார்கள்.

 மணல் பிரச்னையை வைத்து முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஆதாயம் தேடுகிறார்கள் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.Trending Articles

Sponsored