ஆர்.கே.நகரை கிடுகிடுக்கச் செய்யும் தினகரன் - மதுசூதனன் மோதல்... வருகிறது தனி காவல் நிலையம்?!Sponsoredஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் அணிக்கும், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் அணிக்கும் நடக்கும் போட்டியால், தொகுதி ஒவ்வொரு நாளும் அதகளப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னர், ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்குத் தினகரன் வந்தபோது, 20 ரூபாய் நோட்டோடு அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்து, `20 ரூபாய் இங்கே, 20 ஆயிரம் எங்கே?' என்று கோஷம் எழுப்பியது. தினகரனுக்குப் பாதுகாப்பாக  வந்தவர்கள்  , 20 ரூபாய் நோட்டைக் காட்டிய கும்பலோடு மோதினர். இருதரப்பு மோதல், பெரிதாக வெடித்து, தொகுதியின் முக்கியப் பகுதிகள் முழுவதும் கடைகளை அடைக்கும் அளவுக்குப் போனது. கலவரத்தை அடக்கவும், பாதுகாப்பு வழங்கவும் வந்த பெண் போலீஸ் அதிகாரி உட்பட நான்கு போலீஸாருக்கும், அ.தி.மு.க. தொண்டர்கள் சிலருக்கும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கும் கல்வீச்சில் பலத்த காயம் ஏற்பட்டது. இருதரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மண்டை உடைந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். `என்ன எதிர்ப்பு வந்தாலும் தொகுதிக்குள் நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது' என்ற தினகரன், தொகுதி சட்டமன்ற அலுவலக வாசலில் பேட்டி கொடுத்து விட்டுக் கிளம்பிப்போனார். தினகரன் சென்று இரண்டு நாள்கள் ஆன பின்னும், தொகுதியில் மதுசூதனன் அணியினருக்கும், டி.டி.வி. தினகரன் அணி ஆதரவாளர்களுக்கும் முட்டல் - மோதல் சூடு குறையாமல் அதேநிலையே நீடிக்கிறது. எந்த நேரமும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலை தொகுதியில் காணப்படுவதால் போலீஸார் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

`தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு, தனியாகவே ஒரு அவுட்போஸ்ட் (புறக்காவல்நிலையம்) ஒன்றை அமைக்கும் முடிவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் வந்துள்ளனர்' என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி, வ.உ.சி.நகர் மீனவ கிராம நல சபைக்குப் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விழாவை நேற்று நடத்த, மதுசூதனன் அணியினர் திட்டமிட்டிருந்தனர். `முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க' என்ற அறிவிப்பு போஸ்டரோடு, திட்டமிட்டபடி விழாவும் களை கட்டியது. தண்டையார்பேட்டையில் உள்ள வ.உ.சி நகர் திடலில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் இதே விழாவோடு தொடங்கியது. அ.தி.மு.க அவைத் தலைவர் இ.மதுசூதனன், வடசென்னை வடக்கு (கிழக்கு)  மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பங்கேற்று, முதற்கட்டமாக ஆயிரம் குடும்பங்களுக்குத் தலா 10 கிலோ அரிசியை வழங்கினார்.

Sponsored


Sponsored


அரிசி வழங்கும் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்தகட்டமாக மதுசூதனன் மைக் பிடித்தார். ``ரவுடிகளைக் கையில் வைத்துக்கொண்டு, பொதுமக்கள் மீது கல்லை எறிகிற தரக்குறைவான அரசியலை, தினகரன், நம் அம்மா தொகுதியில் நடத்துகிறார். இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்து, அப்பாவியான ஆர்.கே.நகர் தொகுதி பொதுமக்களை ஒருமுறைதான் ஏமாற்ற முடியும். இவர்களெல்லாம் அறிக்கை வாசிக்கும் அவலநிலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒருபோதும் இல்லை. எதிரிகள் அஸ்தமிக்கும் காலம் நெருங்கி விட்டது. தமிழ்நாடும், இந்தத் தொகுதியும் மனிதப் புனிதவதி அம்மாவின் கோட்டையாக என்றென்றும் திகழும். யாராலும் கட்சியை அசைத்துப்பார்க்க முடியாது" என்று ஒரேமூச்சில் பேசி முடித்தார்.

காவல்துறையைப் பொறுத்தவரை ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சி மற்றும் தினகரனின் அ.ம.மு.க. கட்சிகளின் நிகழ்ச்சி என்றாலே, இனம்புரியாத ஒரு பதற்ற நிலைக்குப் போய் விடுகின்றனர். மதுசூதனன் பேசிய இந்த `மினி' கூட்டத்திலும் அதே படபடப்புடன் போலீஸார் இருந்தனர். டி.டி.வி. தினகரன், தொகுதிக்குள் வந்தபோது நடந்த இருதரப்பு கலாட்டாவில், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத வெளி ஆட்களும், குறிப்பாக `சிறைப் பறவை'களும் அதிகளவில் இருந்ததை உளவுப் போலீஸார் கவனித்து, மேலிடத்துக்குக் `குறிப்பு' அனுப்பினர்.

இதன் தொடர்ச்சியாக, ஆர்.கே.நகரில் அ.தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதை முழுமையாக வீடியோ பதிவில் வைக்கும்படி காவல் தலைமை, உள்ளூர் போலீஸாருக்கு அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. டி.டி.வி. தினகரனுக்கு எதிரான மதுசூதனனின், கண்டனப் பேச்சுக்கு, மேடைபோட்டு `கவுன்ட்டர்' கொடுக்க தினகரன் அணியினரும் தயாராகி உள்ளனர். தினகரன் அணியிலிருந்து, `நலத்திட்ட விழா நடத்தப் போகிறோம்' என்று பெர்மிஷன் கேட்கும் தபாலை எதிர்பார்த்து போலீஸார் கவலையில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டில் உச்சகட்ட பதற்ற நிலையோடு இருக்கும் காவல் நிலையமாக தண்டையார்ப்பேட்டை காவல்நிலையம் மாறியிருப்பதுதான் உள்ளபடியே  பரிதாபத்தை வரவழைக்கிறது.Trending Articles

Sponsored