`இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்!’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்Sponsoredலாரிகள் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாகத் தொடர்வதால், தீப்பெட்டி நகரமான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலைகளில் ரூ.20 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. 

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயிப்பதுடன் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6,200 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

Sponsored


இதனால், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வருமானக் காரணியான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பணிகள்  பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, தூத்துக்குடியில் இருந்து உப்பு, வாழைத்தார்கள், இலைக்கட்டுகள், கல் ஆகியவையும் ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி நகரமான கோவில்பட்டியில், தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் ஆலைகளிலும், குடோன்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

Sponsored


தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 250 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள், 25 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சம் நேரடி மற்றும் மறைமுகத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வட மாநிலங்களுக்கு லாரிகள் மூலமாகவும், வெளிநாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலமாகவும் தினமும் 8 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து லாரிகள் மூலம் மட்டும் வட மாநிலங்களுக்கு சுமார் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பப்படுகின்றன. லாரிகள் வேலைநிறுத்தத்தால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளார் சேதுரத்தினம் கூறுகையில் “ காஷ்மீர், பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் தீப்பெட்டி பண்டல்களுக்கான ஆர்டர்கள் வரவில்லை. ஏற்கெனவே அனுப்பப்பட்ட பண்டல்களுக்கு இன்னும் பணப்பட்டுவாடா செய்யப்படாததால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், லாரிகள் ஸ்டிரைக்கினால் ரூ.20 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் ஆலைகளிலும், குடோன்களிலும் தேக்கம் அடைந்துள்ளன. இதே நிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டிய நிலைதான் ஏற்படும்” என்றார்.Trending Articles

Sponsored