ரன்னிங் பேண்ட்... டி-ஷர்ட்... ஷூ... பைக்கில் வலம் வந்து கலக்கிய அமைச்சர் வேலுமணி!Sponsoredசமீபத்தில் பெய்த தொடர் மழையால் கோவை முழுக்க உள்ள குளங்கள் நிரம்பியுள்ளன. குனியமுத்தூருக்கு அருகே உள்ள குளங்களை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? அமைச்சர் வெள்ளை வேட்டி சட்டை மிளிர காரில் வருவதைப் பார்த்தே பழக்கப்பட்ட மக்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி. ரன்னிங் பேண்ட், டி-ஷர்ட்...ஷூ என ஆள் அப்படியே மாறிய அமைச்சர், தன் ஏரியாவான குனியமுத்தூருக்குள்  பைக்கில் வலம் வந்ததைப் பற்றித்தான் இப்போது கிசுகிசுத்துக்கொண்டிருக்கிறது கோவை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸில் திறந்தவெளி கலையரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல், உடற்பயிற்சிக்கூடங்கள் என 88 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப்போகிறது கோவை மாநகராட்சி. அதற்கான ஆய்வுப்பணிக்காக நேற்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் வந்த அமைச்சர் வேலுமணியின் காஸ்ட்டியூம்தான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. ரொம்ப யூத்தா தெரியுறீங்க என்று அதிகாரிகள் சிலரே அசடுவழிந்தார்கள்.

Sponsored


ரன்னிங் பேண்ட்- டிஷர்ட் சகிதம் வந்தவர் அடுத்து குனியமுத்தூருக்குச் சென்றார். அவர் அங்கே சென்றதும்தான் அமைச்சர்  குளங்களை பார்வையிடப்போகிறார் என்ற தகவல் வந்தது. சந்துபொந்துக்குள் நுழைய கார் சரிப்படாது  என்று  காரிலிருந்து டூவீலருக்கு மாறினார். அமைச்சரின் பாதுகாப்பு போலீஸாரும் ஆளுக்கொரு டூவீலரில் ஏறிக்கொள்ளக் குளங்களை காணப் புறப்பட்டது அமைச்சரின் டூவிலர் படை. 

Sponsored


ஏதோ…ஊர்வலம் போல குனியமுத்தூர் வீதிகளில் கூட்டமாக டூவீலகள் நுழைய என்னமோ ஏதோவென்று பராபரத்து ஓடிவந்து பார்த்தார்கள் மக்கள். அமைச்சரை அடையாளம் காண்பதற்கு அவர்களுக்குச் சற்று அவகாசம் தேவைப்பட்டது. உற்றுப்பார்த்துத் தெரிந்துகொண்டதும், 'அட.. அமைச்சருப்பா' என்று உற்சாகம் கொண்டார்கள். சுண்டாமுத்தூர் சராப்பன்ணை மதகிலிருந்து பேரூர் குளத்திற்கு வரும் வாய்க்கால் வரை அமைச்சரின் பார்வையிடல் பணி தொடர்ந்தது. இடையில் நானே ஓட்டுறேன் என்று பைக்கை வாங்கி முறுக்கினார். (அமைச்சர் ஹெல்மெட் அணியவில்லை!) அமைச்சர் பைக் ஓட்டுவதை ஒரு குரூப் வீடியோ எடுத்துக்கொண்டே விரைந்தது. 

குளக்கரையில்  அமைச்சர் ஸ்டைலாக நிற்பதைப் பார்த்து அவர் பின்னாடி நின்றவர்கள் சிலர்,  'அண்ணன் சினிமாவுக்கு போயிருந்தாலும் பெரிய ஆளா ஆகிருப்பாப்ல' என்று சொல்லி கிலி ஏற்றினார்கள். அமைச்சரோடு  பலர் போட்டிப்போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். இறுதியில் வழியும் நிலையில் குளங்களில்  அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க குளக்கரையை உயர்த்த அதிகாரிகளுக்கு ஆன்-ஸ்பாட்டில் உத்தரவு பிறப்பித்து கிளம்பியவர், வழியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி தொண்டர்களோடு மதிய உணவு சாப்பிட்டார். இப்படியாக நேற்று திடீர் மாற்றம் காட்டியுள்ளார் அமைச்சர் வேலுமணி.Trending Articles

Sponsored