`உங்கள் மருமகன் அதிக சொத்து சேர்த்துள்ளார்; ரெய்டுக்கு வந்துள்ளோம்'- மாமியாரை கலங்கடித்த போலி ஐ.டி.அதிகாரிகள்Sponsoredவருமான வரித்துறை அதிகாரிகள்போல் நடந்து தனியார் நிதிநிறுவன அதிபரின் வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடிக்கடி வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அதுபோல கொள்ளையடிப்பவர்களும் தங்களை வருமான வரித்துறையினர்போல காட்டிக்கொண்டு நவீன முறையில் கொள்ளையடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காஞ்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். தனியார் நிதிநிறுவன அதிபரான இவர் தனது மனைவியுடன் இன்று அதிகாலை வெளியூர் சென்றுவிட்டார். அப்போது, அவரின் மாமியார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திய 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று அதிகாலையில் வருமான வரித்துறையினர் போல டிப்டாப்பாக அவரின் வீட்டுக்கு வந்தனர். அழைப்பு மணியை அடித்தவுடன் அவரின் மாமியார் கதவைத் திறந்திருக்கிறார். உடனே. ``நாங்கள் காஞ்சிபுரம் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம். உங்கள் மருமகன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்திருக்கிறது'' எனச் சொல்லி கதவை உள்பக்கமாக தாழிட்டிருக்கிறார்கள்.

Sponsored


பின்பு அவரிடம் செல்போன் பிடுங்கப்பட்டு ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். இதனால் அந்த மூதாட்டி என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார். அவரிடம் இருந்து பீரோ சாவியைப் பெற்று, பீரோவிலிருந்து 50 சவரன் நகை மற்றும் 15,000 ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். பிறகு ஒவ்வொரு அறையாக சோதனை இடுவதுபோல வேறு ஏதாவது கிடைக்கிறதா என தேடிப்பார்த்தனர். சுமார் அரைமணி நேரம் கழித்து அவரிடம்  ஒரு பேப்பரை கொடுத்து கையெழுத்து போடச் சொல்லி அதையும் அந்த பேப்பரையும் அவர்களே எடுத்துக்கொண்டு, காஞ்சிபுரம் வருமான வரி அலுவலகத்துக்கு வந்து பார்க்கச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர்.

Sponsored


அதன் பிறகு சரஸ்வதி தனது மருமகன் குமரவேலுக்கு போன் செய்து விவரங்களை சொல்லி இருக்கிறார். அவர் வந்து விசாரித்தபோது வீட்டுக்கு வந்தவர்கள் போலி அதிகாரிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர். காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை சோதனை செய்யும்போது சொகுசு காரில் அவர்கள் வந்தது தெரியவந்தது. காரின் நம்பர்கள் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், அந்தக் காரின் எண் போலியானவையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குமரவேல் வீட்டைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.Trending Articles

Sponsored