எப்படி இருக்கிறார் கருணாநிதி?
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். சளித்தொந்தரவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மூச்சுவிடுவதை எளிதாக்கும் வகையில் அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. இதற்காக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைக்காக  மருத்துவமனைக்குச் சென்றுவந்தார். இந்த நிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்ககாகக் கடந்த 18-ம் தேதி, காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார். டிரக்யாஸ்டமி கருவியில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. இதையடுத்து, இதர பரிசோதனைகளும் முடித்து, அன்றைய தினமே அவர் வீடு திரும்பினார். 

Sponsored


லண்டனிலிருந்து சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் கருணாநிதியைப் பார்த்து உடல் நலம் விசாரித்தார். அருகில் இருந்து, மருத்துவமனையில் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்றுவந்த பிறகு, கோபாலபுரம் வீட்டின் முதல் மாடியில் உள்ள அவரது அறையில் கருணாநிதி ஓய்வில் உள்ளார். கட்டிலில் படுத்துள்ள அவருக்கு, அவரது உதவியாளர் அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்கிறார். கருணாநிதி உடல்நிலையில் வழக்கத்தைவிட சோர்வு காணப்படுவதால், அவரைப் பார்க்க வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து, உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள். அவருக்கு, திரவ உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored