இளைஞரை விளாசிய எஸ்.ஐ... விகடன் ஆதாரத்தை வைத்து நடவடிக்கை எடுத்த கமிஷனர்!Sponsoredவாகனச் சோதனை என்ற பெயரில், அராஜகம் செய்த சேத்துப்பட்டு எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ம் தேதி இரவு 11 மணியளவில் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகே எஸ்.ஐ இளையராஜா மற்றும் சில காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சோதனையின் போது வாகனம் ஓட்டிவந்த இளைஞர்களிடம் சரியான ஆவணங்கள் இருந்த போதும் `ஒரிஜினல் எங்கே... அதைக் கொண்டு வா... இதைக் கொண்டு வா' என இளைஞர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் வந்த ஹாரூண் என்ற கல்லூரி மாணவரிடமும் போலீஸார் ஆவணங்களைப் பரிசோதித்துள்ளனர். உரிய ஆவணங்களை ஹாரூண், காண்பித்த பிறகும் `ஒரிஜினலைக் காட்டிவிட்டு வண்டியை எடுத்துவிட்டுப் போ' எனக் கூறியுள்ளனர் போலீஸார். `வண்டியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். காலையில் ஒரிஜினலைக் காட்டிவிட்டு வண்டியை எடுத்துச் செல்கிறேன்' என்று கூறியுள்ளார் ஹாரூண். உடனே, `எங்களிடமே எதிர்த்துப் பேசுகிறாயா?' எனக் கூறிய காவலர்கள் ஹாரூணை லத்தியால், கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளைஞரின் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹாரூண் சென்னைக் காவல்துறை ஆணையரிடம், `எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி' புகார் தெரிவித்தார். 

இந்த நிலையில், வாகனச் சோதனையின் போது எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்கள் ஹாரூண் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதைப் பற்றி `வாகனச் சோதனையில், இளைஞர்களை விரட்டியடிக்கும் காவலர்கள்! பதற வைக்கும் வீடியோ!' என்ற தலைப்பில் வீடியோ செய்தியாகப் பதிவிட்டிருந்தோம். இந்தச் செய்தியிலுள்ள உண்மையை ஆராய்ந்த காவல்துறை ஆணையர், காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான ஹாரூணை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார். `இந்தச் சம்பவத்தில், தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அறிவித்திருந்தார்.

Sponsored


Sponsored


தற்போது எஸ்.ஐ இளையராஜா இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இந்தச் சம்பவம் பற்றிக் காவல்துறை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது முகநூல் பக்கத்தில், `சென்னைச் சேத்துப்பட்டு பகுதியில், கடந்த 19-ம் தேதி நடந்த வாகன சோதனையின் போது எஸ்.ஐ இளையராஜா தாக்கியதில் முகமது ஹாரூண் சேட் என்ற இளைஞர் காயமடைந்தார். இச்சம்பவத்தை அறிந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம் அத்துமீறியதற்காக எஸ்.ஐ இளையராஜா சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில், காயமடைந்த இளைஞர் முகமது ஹாரூண் சேட்டை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்த காவல்துறை ஆணையர், நலம் விசாரித்தார். மேலும் வருங்காலங்களில் இவ்வாறான செயல் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

`காவலரால் தாக்கப்பட்ட இளைஞர், காவலர்களை விரோதியாகப் பார்க்கும் சூழல் தொடரக் கூடாது' எனக் கூறினார் காவல் ஆணையர். மேலும், பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சியாக அமைந்தது. நமது செயற்பாடுகளால் ஆணையருக்குத்  தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக் கூடாது என்பதை நினைவில்கொண்டு காவல்துறையினர் பணியாற்ற வேண்டும் என்பதே என் அவா!' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான கல்லூரி மாணவர் ஹாரூண் நம்மிடம் பேசியபோது ``அன்றிரவு ஆவணங்கள் இருந்தும் என்னைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். கை, மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டன. இதனால் காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்தேன். என்னைக் காவலர்கள் தாக்கியதற்கான ஆதாரங்கள் கேட்டனர். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த நிலையில் என்னைக் காவலர்கள் தாக்கிய வீடியோவை விகடன் வெளியிட்டது. இந்த ஆதாரமே காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தது. விகடனுக்கு நன்றி. அதுபோல தவறு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை ஆணையருக்கும் நன்றி. தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை என்ற பெயரில் காவலர்கள் செய்யும் அராஜகம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைக் காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்." என்றார்.

அராஜகத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ இளையராஜா மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை ஆணையரின் செயல் பாராட்டப்பட வேண்டியது. அதே சமயத்தில், அன்று நடந்த வாகனச் சோதனையின் போது பலரின் ஒரிஜினல் லைசென்ஸ் எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. இதையும் ஆணையர் கண்டறிந்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு மீட்டுக் கொடுத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை ஏற்படும்!Trending Articles

Sponsored