சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்..! தமிழக அரசுக்கு மார்க்ஸிஸ்ட் கோரிக்கை



Sponsored



'தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வால் நடுத்தர, சாதாரண ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழக அரசு, குடியிருப்புக் கட்டடங்களுக்கான வரி 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. தமிழக அரசின் இந்த வரி உயர்வு முடிவுக்கு எதிராக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை 100 சதவிகிதம் வரை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50  சதவிகிதம், வாடகைக் குடியிருப்புக் கட்டடங்களுக்கு 100 சதவிகிதம், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Sponsored


இந்த வரி உயர்வால், சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். வாடகை பல மடங்கு உயர்த்தப்படும் அபாயம் ஏற்படும். இதனால், வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருப்போரின் வாழ்நிலையும் கேள்விக்குறியாகும். இந்த வரி உயர்வு ஏற்கெனவே விலைவாசி உயர்வாலும், வேலையின்மையாலும் அவதிப்படும் மக்களின் தலையில் விழும் பேரிடியாகும். தமிழக அரசின் இந்த அநியாய வரி உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

Sponsored


கடந்த இரண்டாண்டு காலமாக, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்திக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில், வரியை உயர்த்தியிருப்பது உள்ளாட்சி அமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய சுமார் ரூ. 3000 கோடி நிதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த வரி உயர்வைத் தவிர்த்திருக்கலாம். 

ஏற்கெனவே, சொத்து வரி, உள்ளிட்ட வரி உயர்வு கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் 2018 ஜூன் 28 ல் போராட்டம் நடத்தியது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் இந்த வரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

தமிழக அரசு, இந்த வரி உயர்வை திரும்பப் பெறாவிடில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் பங்கேற்புடன் கண்டன இயக்கம் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசின் இந்த வரி உயர்வை எதிர்த்து அனைத்துப் பகுதி மக்களும் வலுவான கண்டனக்குரலெழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.



Trending Articles

Sponsored