``வீட்டுமனை பட்டா இருந்தும், குடியேற முடியவில்லை” ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள்!Sponsoredகடந்த வருடம் நவம்பர் 9-ம் தேதி தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனைகள், பயனாளிகளுக்கு இன்னமும் கொடுக்கப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் வாழ்ந்துவரும் பழங்குடி குறவர் இன மக்கள், இலவச வீட்டுமனைக் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பல வருடங்களாகக் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, வீடின்றி வாழும் குறவர் இன மக்கள் 85 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்தில் வனத்துறை சார்பில் சாலி மரங்கள் நடப்பட்டிருப்பதால் வீடு கட்டிக் குடியேற முடியாமல் தவித்துவருகிறார்கள். இது தொடர்பாக இன்று மாவட்டக் கலெக்டரை சந்தித்துப் புகார் மனு கொடுக்க வந்த குறவர் இன மக்களிடம் பேசியபோது, ``சாலை ஓரங்களில், மரத்தடியில் வாழ்ந்துவரும் எங்களுக்கு நிரந்தரமாக ஒரு இடத்தில் வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்று ஆசை. வீடு இல்லாததால் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. அடிக்கடி இடத்தை மாற்றிச் செல்வதால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டுப் பல முறை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம். ஏதோ நல்லது நடந்தது மாதிரி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்தார்கள்.

Sponsored


Sponsored


ஆனால், இன்று அதில் குடியேற முடியாமல் இருக்கிறோம். கொடுக்கப்பட்ட நிலத்தில் இருக்கும் சாலி மரங்களை வனத்துறைதான் வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் கலெக்டர் சொன்னால்தான் வெட்ட முடியும் என்கிறார்கள். அதனால், இன்று கலெக்டரை சந்தித்துப் பேசினோம். உடனே மரங்களை அகற்றி இடத்தை எங்களிடம் ஒப்படைப்பதாக உறுதி கூறினார்’’ என்றனர்.

வருவாய்துறைக்குச் சொந்தமான இடத்தில் வனத்துறை சாலி மரங்களை நட்டு வளர்த்திருப்பது சமூக நலத்துறைக்குத் தெரியாமலா இலவச வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழாமல் இல்லை. வீடின்றித் தவிக்கும் குறவர் இன மக்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.Trending Articles

Sponsored