ஜெய் ஹிந்த் சொன்னவர் தமிழரா? தமிழக ஜி.டி.பி வீழ்ந்ததா? - வாட்ஸப் வீடியோவின் பொய் மழைSponsoredசமூக வலைதளங்களில் வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாவது ஒன்றும் புதியது அல்ல. ஒரு வீடியோவைப் பார்த்தவுடன் சரியா.. தவறா... என்பதைக் கூட ஆராயாமல் பிறருக்கும் அனுப்புவதுதான் வைரலுக்குக் காரணம். அப்படி சில தினங்களாக வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் 'தமிழ்நாட்டில் பலருக்கு வேலை இல்லாமல் போனதற்கு நடக்கும் போராட்டங்கள்தான் காரணம்' என்ற கருத்து முன்வைக்கப்பட்டு  வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்படும் தகவல்கள் 90% தவறானவை. அவற்றின் உண்மை விபரங்களைக் பார்க்கலாம்.

தவறான தகவல்

Sponsored


தமிழ்நாட்டின் ஜி.டி.பி (GDP) 
2014-15 -ம் ஆண்டு - 6.93 
2015-16 -ம் ஆண்டு - 8.79 
2016-17 -ம் ஆண்டு - 7.93 
2017-18 -ம் ஆண்டு - <5 
எப்படி  3 புள்ளி குறைஞ்சது தெரியுமா? 

Sponsored


உண்மை

அந்தத் தகவல்களில் 2017-18 -ம் ஆண்டு ஜி.டி.பியானது < 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் இந்த ஆண்டிற்கான ஜி.டி.பி வெளியாகவில்லை. பொருளாதார சரிவுக்குக் காரணம் '500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்புதான் என்பது உலக அளவில் பல நிபுணர்கள் சொன்னது. இதைத்தவிர ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும், அப்போதைய செயல்படாத அரசும்தான் முக்கியமான காரணம். போராட்டத்தால்தான் ஜி.டி.பி குறைந்தது என்று எங்கேயும் சொல்லவில்லை. எந்த ஆதாரமும் இல்லை.

தவறான தகவல்

போராட்டங்களாலதான் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பல பெரிய கம்பெனிகள் திரும்பிக் கூட பார்க்காம போயிட்டாங்க? கியா மோட்டார்ஸ் (KIA Motors), ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பிளான்ட்... அப்புடி இப்புடினு 65 கம்பெனிகள் திரும்பிக்கூட பார்க்காம போயிட்டாங்க... 

உண்மை

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவுக்குப் போனது, தமிழ்நாட்டில் லஞ்சம் அதிகமாகக் கேட்கிறார்கள் என்பதற்காகத்தான். இதனை கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்த பின்னர்தான் ஆந்திராவுக்குச் சென்றது. ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பிளான்ட் குஜராத்தில் அமைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது பிளான்ட்டை தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதுவும் இங்கு இருக்கும் ஆட்சியாளர்களின் பிழை தானே தவிர போராட்டங்கள் இல்லை. சரியாக நேரம் ஒதுக்காதது, லஞ்சம் போன்றவை ஃபோர்டு நிறுவன மாற்றத்துக்குக் காரணம்.  

தவறான தகவல்

கம்பெனிகள் வெளியேறியதால் தமிழ்நாடு இழந்த வேலை வாய்ப்புகள் 32 லட்சம். அப்ப எத்தனைக் குடும்பம் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும்... யோசிச்சுப்பார் 

உண்மை

எங்கேயுமே 32 லட்சம் வேலை வாய்ப்புகள் இழந்ததாகத் தகவல்கள் அரசாங்கத்தாலோ அல்லது சர்வதேச அமைப்புகளாலோ வெளியிடப்படவில்லை. ஆக இதுவும் பொய். 

தவறான தகவல்

ஜல்லிக்கட்டு தவிர எதுவுமே மக்கள் போராட்டம் கிடையாது. அதிலும் வன்முறை கலவரமாக மாறிடுச்சு நியாபகம் இருக்கா... இதையெல்லாம் அப்போ இருந்து நக்‌சல்ஸ்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஸ்டெர்லைட் உட்பட. 

உண்மை

ஜல்லிக்கட்டு தவிர்த்து நெடுவாசல் ஹைட்ரோகார்பன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், நதிநீர் வேண்டி போராட்டம், விவசாயப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்கள் நடத்தியிருப்பது உண்மைதான். அவை அனைத்துமே மக்கள் முன்னெடுத்த போராட்டங்கள்தானே தவிர, தன்னிச்சையாக இயங்கிய போராட்டங்கள் கிடையாது. ஜல்லிக்கட்டில் வன்முறை கலவரமாக மாறியதற்குக் காவல்துறையினர்தான் முக்கியக் காரணம். காவல்துறையினர் ஆட்டோவுக்கும், குடிசைக்கும் தீ வைத்த செயல் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை... கூகுளை விட்டு நீங்கவும் இல்லை. வேண்டுமானால் கூகுளில் அந்த வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள். போராட்டத்திற்குக் காரணம் நக்சல்கள்தான் என்பதை அரசே இன்னும் சொல்லாதபோது இந்த வீடியோவில் பேசியிருப்பவரிடம் யார் சொன்னது என்று தெரியவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சல்கள்தான் புகுந்ததாக அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் அனைவரும் நக்சல்கள் என்று சொல்ல வருகிறீர்களா என்று தெரியவில்லை. அப்படி இறந்தவர்கள் நக்சல்கள் என்றால் தமிழக அரசு ஏன் நிதியுதவி வழங்குகிறது? 

தவறான தகவல்

அப்போ ஸ்டெர்லைட்டால கேன்சர் வருதுனு ஒருத்தன்கூட சொல்லலியே... 

உண்மை

ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களில் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததற்கான ஆதாரம் இருக்கிறது. 

தவறான தகவல்

ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக போராளிகள் சீனாகிட்ட இருந்து பொட்டி பொட்டியா பணம் வாங்கியிருக்கானுங்க. நமக்கு பாகிஸ்தான் மட்டும் எதிரி இல்லை... கண்ணுக்கு தெரியாத சீனாவும்தான். 20 வயசுல இருந்து 60 வயசு வரைக்கும் உழைக்குற வர்க்கம் சீனாவுல குறைவு. இந்தியாவுல அது இரண்டு மடங்கா இருக்கு. இந்த இளைஞர் படைதான் இன்னும் 20 வருஷத்துல நாட்டை வல்லரசாக்கும். ஆனா போராட்டம்னு நமக்கு எதிரா திருப்பிவிட்டா நாடு எப்படி வல்லரசாகும். ஒரு சீனன் அவன் நாட்டைக் காட்டிக் குடுக்க மாட்டான். ஆனா நம்ம போராளிங்க சீனாகாரன்கிட்ட காசை வாங்கிட்டு நம்ம முதுகுலயே குத்துறாங்க. 

இன்னொரு குரல் - இதுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் என்ன சம்பந்தம். 

முதல் குரல் - சீனாவோட முதல் திட்டமே ஸ்டெர்லைட்டை காலி பண்றதுதான்டா. ஸ்டெர்லைட்தான்டா இந்தியாயோட பெரிய காப்பர் உற்பத்தியாளர். அதை மூடிட்டாங்கள்ல, இப்போ காப்பரோட தேவை இரண்டு மடங்காகிடும். 250 ரூபாய்க்கு இருந்த காப்பர் விலை இப்போ 520 ரூபாய்க்கு வந்துருச்சு. காப்பர் விலை ஏறிச்சுன்னா நம்ம ஓட்டுற பைக், கார், மிக்ஸி, கிரைண்டர், டிவி, செல்போன்னு எல்லா விலையும் ஏறும். இதை வேணாம்னு விவசாயம் பக்கம் போலாம்னு பார்த்தா பம்பு செட்டுக்கு காப்பர் தேவை இருக்கே. மின்சாரக் கட்டணம் இன்னும் மூன்று மடங்கு ஏறும். 

உண்மை

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் காப்பரை குறைந்த விலைக்கு 30 சதவிகிதம் இறக்குமதி செய்வது சீனாதான். இந்நிலையில் சீனா போராளிகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது? அவனே சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வானா?. சந்தையில் காப்பர் விலை ஏறவும் இல்லை. சர்வதேச அளவில் அதன் தேவை அதிகரிக்கவும் இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தியாளர் ஸ்டெர்லைட் கிடையாது. அதன் பெயர் ஹிண்டல்கோ. 


source: tradingeconomics.com

தவறான தகவல்

சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிரா போராடுவானுங்க. அங்க வரப்போற டிபன்ஸ் காரிடார்க்கு எதிரா போராடுவானுங்க. 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும். 25 லட்சம் குடும்பத்துக்கு சோறுபோடும். தமிழ்நாட்டோட பாதுகாப்புக்குத்தான் டிபன்ஸ் காரிடார் வருது. ஈஸியா சீனாவும், இலங்கையும் வந்து நம்மளைக் கொல்லும் வாய்ப்பு இருக்கு. டிபன்ஸ் தயாரிக்கிறதுக்கு பல ஆயிரம் கோடி கொடுத்து சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். நம்ம போராளிகள் வெறும் அரசியலுக்காக மட்டும் இல்லைடா.. காசு குடுத்தா நம்ம முதுகுல குத்துவானுங்க. 

உண்மை

மறுபடியும் அதே கதைதான். சீனா ஏற்கெனவே ஸ்டெர்லைட்டிடம் இருந்து 30 சதவீதத்திற்கும் மேல் வாங்குகிறது. இந்நிலையில் டிபன்ஸ் பொருட்கள் தயாரிக்கிறதுக்காக எப்படி இந்தியாவிற்குச் சீனா தரும். இந்தியாவை அழிக்கவேண்டுமென்று நினைத்தால் காப்பரை சீனா நமக்கு கொடுக்காமலே இருக்கலாம். உலகில் எடுத்தோம், கவுத்தோம் என்று ஒரு போர் நடந்துவிடாது. 

தவறான தகவல்கள்

சின்னதா கூகுள்ல சர்ச் பண்ணி பார்த்தேன்... அப்போதுதான் இதெல்லாம் தெரிஞ்சது. 

உண்மை

நீங்க தேடின கூகுளில்தான் இவ்வளவு தகவல்களும் கிடைக்கின்றன.

தவறான தகவல்

அப்துல்கலாம் ஐயா, நியூட்ரினோ திட்டத்தை ஆதரிச்சார். அவர் பேச்சையா நாம கேட்குறோம். நேத்துக்கு வந்த சினிமாக்காரனுங்க பேச்சைத்தானடா கேட்குறோம். 

உண்மை

'ஓர் இடத்தில இருந்துகொண்டே இந்த நியூட்ரினோ கதிரால், பூமியில் உள்ள அணு குண்டுகளின் அணு கதிரியக்க தன்மையை செயலிழக்கச் செய்யமுடியும். மேலும், பூமியில் உள்ள பெட்ரோலியம் போன்ற கனிம வளங்களையும் நியூட்ரினோ மூலம் கண்டறிய முடியும்' என்று  கலாம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். நியூட்ரினோவை ஆய்வு செய்யும் நிகழ்வால் அணு ஆயுதப்போர் நிகழு வாய்ப்பு உண்டு. நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படுத்தப்பட உள்ள பகுதி சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. இதுதவிர, மத்திய அரசு முறையாக அத்திட்டத்தைப் பற்றி மக்களிடம் சொல்லவில்லை. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் இடத்திற்கு முறையான ஆணைகூட மத்திய அரசால் வாங்க முடியவில்லை. இதுதான் உண்மை... அப்துல்கலாம் பெயரால் சொன்னால் நம்பி விடுவோமா? 

தவறான தகவல்

ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்ங்குற இந்த வார்த்தைகூட தமிழர் சொன்னதுதான்.
 
உண்மை

ஜெய்ஹிந்த் எனும் வார்த்தை ஆந்திரா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெயின் - உல் அபிதீன் ஹசன் (Zain-ul Abideen Hasan) என்பவர் சொன்னது. இவரது அப்பா ஹைதராபாத்தில் கலெக்டராக இருந்தவர். சிலர் டாக்டர் செம்பகராமன் பிள்ளை என்றும் சொல்கிறார்கள். ஆனால், அவரும் தமிழ்நாடு கிடையாது திருவனந்தபுரம். 

இந்த வீடியோ தவறான தகவல்களைக் கொடுத்து ஸ்டெர்லைட்டைப் பற்றித்தான் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க நினைக்கிறது. அதைவிடத் தமிழர்களின் உணர்வுகளை எளிதில் திசை மாற்றிவிடும் பங்கும் இதுபோன்ற பொய்யான வைரல் வீடியோக்களுக்கு உண்டு. 

இந்த வைரல் வீடியோ என்றில்லை. எதையும் ஃபார்வர்டு செய்யும் முன் ஒரு முறை யோசிக்க வேண்டியது அவசியமாகிறது. தேவைப்பட்டால் இணையத்திலும் தேடலாம். தேவையில்லாத ஃபார்வர்டுகளால்தான் நாட்டில் பாதி பிரச்னைகள் என்பதை அனைவரும் உணர வேண்டிய நேரமிது.Trending Articles

Sponsored