பரங்கிமலை அருகே மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்து நால்வர் பலி - கூட்டநெரிசலால் விபரீதம்!  



Sponsored



சென்னை பரங்கிமலையில் மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் இறப்புக்கு கூட்ட நெரிசலே காரணம் எனக் கூறப்படுகிறது.

சென்னை கடற்கரை - திருமால்பூர் விரைவு ரயில் இன்று காலை 8.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, மாம்பலம் - கோடம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால் நீண்ட நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Sponsored


இதையடுத்து நீண்ட நேரத்துக்குப் பிறகு எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பலர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய சிலர் ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்தும், அருகில் இருந்த தடுப்பு சுவர் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

Sponsored


இதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின் மருத்துவமனை செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும், சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இதே இடத்துக்கு அருகே தடுப்புச் சுவரில் மோதி இரண்டு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. ரயில்கள் எண்ணிக்கை குறைவாக இயக்கியதும், தடுப்புச் சுவர்கள் தண்டவாளத்துக்கு அருகில் இருப்பதும் அதிகளவு விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த நால்வரில் ஒருவர் பள்ளி மாணவர் என்றும், ஒருவர் கல்லூரி மாணவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 4 பேரில் 3 பேரின் விவரம் தற்போது தெரியவந்துள்ளது. பிரவீன் குமார், சிவகுமார், பரத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதில் பரத் என்பவர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி மாணவர் ஆவார். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே கூடுதல் காவல் ஆணையர் சாரங்கன் விபத்துக் குறித்து ஆய்வு நடத்தினார்.

சம்பவம் குறித்து பேட்டியளித்த ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு, ``உயிரிழப்புக்கு தடுப்பு சுவரும், ரயில்கள் எண்ணிக்கை குறைவாக இயக்கப்பட்டதும் காரணமாக இருந்தாக பயணிகள் புகார் கூறியுள்ளனர். உடனடியாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்புச்சுவரை அகற்றும் வரை ரயில்களை இயக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். முடிந்தவரை படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.



Trending Articles

Sponsored