சென்னைக் கட்டட விபத்துக்கு இவர்தான் காரணம்- கொந்தளிக்கும் டிராஃபிக் ராமசாமி Sponsored``சென்னையில் நடந்த கட்டட விபத்துக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கந்தன்தான் காரணம்'' என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார் டிராஃபிக் ராமசாமி. 

சென்னைத் தரமணி, கந்தன்சாவடி, எம்.ஜி.ஆர். சாலையில் புதியதாக தனியார் மருத்துவமனை கட்டும்பணி நடந்தது. இந்தப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பப்லுகுமார், ராஜன் என இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர். காயமடைந்தவர்கள் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Sponsored


இந்தநிலையில், கட்டட விபத்து குறித்து பொதுப்பணித்துறையினர் காஞ்சிபுரம் கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர். அதில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரங்கள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாகக் கட்டட வடிவமைப்பில் ஜெனரேட்டருக்கான ஒரு தூண் அமைக்காமல் விட்டதே விபத்துக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தரமணி போலீஸார் வழக்கு  பதிவு செய்து இரண்டு இன்ஜினீயர்களை கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நேரத்தில் டிராஃபிக் ராமசாமி, பரபரப்பான புகார் ஒன்றை போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில், அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்தன் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

Sponsored


இதுகுறித்து டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். ``கட்டட விபத்து நடந்த இடத்தில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், 300க்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அந்த இடம், அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் வாடகை வசூலித்துக் கொண்டிருந்தனர். அதை எதிர்த்துப் போராடினேன். சில ஆண்டுக்கு முன் அங்கு குடியிருந்தவர்கள் காலி செய்துவிட்டனர். அந்த இடத்தில்தான் தனியார் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அரசு இடத்தில் எப்படித் தனியார் மருத்துவமனை கட்டமுடியும். அதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் எனப் பல கேள்விகள் உள்ளன. 

 அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. கந்தன் தரப்பினர்தான் தனியார் மருத்துவமனைக்குக் கட்டடம் கட்டி கொடுத்துள்ளதாகத் கிடைத்த தகவலின்படி அவர் மீது புகார் கொடுத்துள்ளேன். தொடர்ந்து முதன்மைச் செயலாளர் தொடங்கி 16 பேரை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளேன். அதில், 13 வது எதிர்மனுதாரராக முன்னாள் எம்.எல்.ஏ. கந்தன் உள்ளார். இந்தக் கட்டட விபத்து குறித்து சிபிஐ விசாரணை கேட்டுள்ளேன்" என்றார். 

முன்னாள் எம்.எல்.ஏ. கந்தனை அவரின் செல்போனில் தொடர்பு கொண்டோம். அவரின் பி.ஏ.ஜெயக்குமார் பேசினார். ``அந்த இடத்துக்கும் கந்தனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் அவரின் பெயரைக் குறிப்பிட்டுப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்றார். 

இதற்கிடையில் டிராஃபிக் ராமசாமியை போனில் தொடர்பு கொண்ட, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அ.தி.மு.க.விலிருக்கும் மூத்த நிர்வாகி ஒருவர், எனக்கும் அந்த இடத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் கட்டட விபத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 Trending Articles

Sponsored