18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு - தினகரன் தரப்பு வாதம் நிறைவு!Sponsored18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் விசாரணை, 3-வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு நடைபெற்று வருகிறது. இதில், தினகரன் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடந்தது. தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் என்றார். உடனே, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், எடியூரப்பா வழக்குத் தீர்ப்பு இந்த வழக்குக்குப் பொருந்தாது என தலைமை நீதிபதியும், நீதிபதி சுந்தரும் கூறியுள்ளதால், அதுபற்றி விவாதிக்கக் கூடாது என்றார்.

Sponsored


தொடர்ந்து, வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாகக் கூறுவதைத் தவிர, மற்ற அனைத்து சம்பவங்களும் இந்த வழக்குடன் பொருந்தும். அதேபோல எடியூரப்பாவுக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ-க்கள், ஆட்சிக்கும் முதல்வருக்கும் எதிராக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், நாங்கள் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளதாக 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, முதல்வருக்கு எதிராக புகார் அளிப்பது அரசுக்கு எதிராக அல்ல எனக் கூறுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு, ஆமாம் எனப் பதிலளித்த வழக்கறிஞர் ராமன், எம்.எல்.ஏ-.க்கள் கவர்னரை சந்திக்க உரிமை உள்ளதாகவும்,  கட்சியின் அப்போதைய துணைப்பொதுச் செயலாளர் தினகரனின் அனுமதியோடுதான் கவர்னரை சந்தித்து மனு அளித்ததாகவும் வாதிட்டார்.

Sponsored


தொடர்ந்து, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், 18 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக அ.தி.மு.க கொறடா புகார் அளித்தபோது, கட்சி முடக்கத்தில் இருந்தது. முதல்வர், சசிகலா அணியில்தான் இருந்தார். சசிகலா சிறை சென்றபின், மூன்று அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இணைந்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்குதான் அதிகாரம் உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. தேர்தல் ஆணைய முடிவு வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும். மேலும், சபாநாயகரிடம் அளித்த புகாரில், அ.தி.மு.க கொறடா எனக் கூறியே புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில், அ.தி.மு.க இல்லை என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 18 பேரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ என்று கூறித்தான் புகார் அளித்துள்ளனர் என்றார். இந்நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு தினகரன் தரப்பு வாதங்கள் இன்றுடன் முடிவடைந்தன. நாளை, சபாநாயகர் தரப்பு வாதம் தொடங்குகிறது.Trending Articles

Sponsored