தொடரும் லாரி ஸ்டிரைக்: தூத்துக்குடியில் 15,000 டன் உப்பு, 25,000 டன் மரக்கட்டைகள் தேக்கம்!



Sponsored



 5-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் லாரிகளின் தொடர் ஸ்டிரைக்கின் காரணமாக, தூத்துக்குடியில் 15,000 டன்  உப்பு ஏற்றுமதியும், துறைமுகத்திலிருந்து லாரிகள்மூலம் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும்  கொண்டுசெல்லவேண்டிய 25,000 டன் மரத்தடிகளும் தேக்கம் அடைந்துள்ளன. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து 5-வது  நாளாக  நாடு முழுவதும்  லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் ஏற்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் உப்பு ஏற்றுமதியும், மரத் தடிகள் ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.  இந்தியாவில், குஜராத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் உப்பு அதிமாக உற்பத்திசெய்யப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில்தான். தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவங்காடு, பழையகாயல், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், வேம்பார், தருவைகுளம், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர் என மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்றுவருகிறது. 

Sponsored


Sponsored


இத்தொழிலில், சுமார் 20 ஆயிரம் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. உப்புக்கு போதிய விலை கிடைக்காமலும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழகத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடந்துவந்தது. இதனால், உப்பளங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படாமல், தரிசாகக் கிடக்கும் சூழல் உருவாகிவந்தது. பல்வேறு காரணங்களால்  பாதிக்கப்பட்டிருந்த உப்பு உற்பத்தியாளர்கள் மெள்ள மீண்டு வந்த நிலையில், திடீரென அறிவிக்கப்பட்டிருக்கும் லாரிகள் ஸ்டிரைக்கால், மீண்டும் உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், 15 ஆயிரம் டன் உப்பு பண்டல்கள் ஏற்றுமதி செய்யமுடியாமல், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. அத்துடன், உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் பண்டல் போட முடியாமல் களத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டும், துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனிகள்மூலம் லாரிகளில் வெளியூர்களுக்கும் மரத்தடிகள் ஏற்றுமதிசெய்யப்பட்டுவருகின்றன. தற்போது, லாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக மூலமாக தேக்கு உள்ளிட்ட மரத்தடிகள் திறந்தவெளி குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

 இதுகுறித்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனியினர் கூறுகையில், "தூத்துக்குடியில் 45 சிறிய மற்றும் பெரிய அளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கம்பெனிகள் உள்ளன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 முதல் 60 லாரிகளில் பர்மா தேக்கு, சூடான் தேக்கு, ஐவுரி உள்ளிட்ட பல வகையான மரத்தடிகள் தூத்துக்குடியில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், சென்னை, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது லாரிகள் ஸ்டிரைக்கினால், பல கோடி மதிப்பிலான  சுமார் 25,000 டன் மரத் தடிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன" என்றார்.



Trending Articles

Sponsored