`மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’ நெல்லையில் கே.டி.ராகவன் நம்பிக்கை!Sponsoredவரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்றும் தற்போது உள்ளதை விடவும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் எனவும் மாநிலச் செயலாளரான கே.டி.ராகவன் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. அதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளரான கனிஅமுதா தலைமையில் வள்ளியூரில் அலோசனைக் கூட்டம் நடந்தது. நகர, ஒன்றிய மற்றும் கிளைக்கழக நிர்வாகிகளுக்கான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.டி.ராகவன், ஊடகப் பிரிவுத் தலைவரான பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். 

Sponsored


இந்தக் கூட்டத்தில், கட்சியின் கொள்கைகளைக் கிராமங்கள்தோறும் கொண்டு செல்வது பற்றியும் எந்த மாதிரியான உத்திகளை நாடாளுமன்றத் தேர்தலுக்கு கையில் எடுக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இப்போதே நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்களை தயார்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Sponsored


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளரான கே.டி.ராகவன், ``பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. அதுவும் இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிடவும் கூடுதலாகப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களுக்கு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏராளமான பயனுள்ள திட்டங்கள் மூலம் மக்கள் பலன் அடைந்துள்ளார்கள். அதனால் மக்கள் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறார்கள். 

காங்கிரஸ் கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. அது ட்ரெய்லர் மட்டும்தான். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதாக நினைத்துக்கொண்டு மத்திய அரசை குறை கூறிவிட்டு கண்ணடித்தார். இதைப் பார்க்கும்போது நாட்டுமக்கள் மீது அவருக்கு என்ன அக்கறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களும் அதைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.  

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் தோற்றது போல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்பார்கள். தமிழத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலிருந்து பாரதிய ஜனதா கட்சி பின்வாங்காது. எட்டுவழிச் சாலை, மின் திட்டங்கள் போன்றவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதனால் அவற்றை நிறைவேற்றுவதை எதிர்க்கக் கூடாது’’ எனத் தெரிவித்தார். 
 Trending Articles

Sponsored