அரசு வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றிய அ.தி.மு.க பிரமுகரைக் கொலைசெய்த இருவர் கைது!Sponsoredகாஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்துள்ள ஆத்தனஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மூங்கிலான் (எ) சுப்பராயன். இவர் மாவட்ட அ.தி.மு.க பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக சாலமங்கலம் பகுதியில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியில் கடைகளைக் கட்டிவருகிறார். இதைப் பார்வையிடுவதற்காக தினமும் அங்கு சென்றுவருவார். அதன்படி கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணியளவில் சாலமங்கலத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், அவரைக் கொலை செய்யத் துரத்தினர். சிறிது தூரத்தில் அவரை மறித்துக் கத்தியால் வெட்டிவிட்டுச் சென்றனர். இதைப் பார்த்ததும் கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஓடிவந்து, மூங்கிலானை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி மூங்கிலான் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

சொத்து தகராறு காரணமாக அவருக்கும் அவரின் பிள்ளைகளான செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோரிடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் செந்தில் குமார், ராஜ்குமாரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். இதனால் செந்தில் குமார் கூலிப்படையை அனுப்பி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். 

Sponsored


இந்த நிலையில், அ.தி.மு.க பிரமுகர் மூங்கிலான் கொலை வழக்கு தொடர்பாக படப்பை காவல்துறையினர் ராஜேஷ் கண்ணா, குர்புதீன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கண்ணாவின் சொந்த ஊர் நரியம்பாக்கம். மூங்கிலானும் அதே பகுதியைச் சேர்ந்தவர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வேலை வாங்கிக் கொடுக்காமல் பணத்தை ஏமாற்றியதால் கொலை செய்துள்ளதாக ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தனது மனைவிக்குச் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என ரூ 1.5 லட்சம் கொடுத்திருக்கிறார் ராஜேஷ் கண்ணா. பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மூங்கிலான் ஏமாற்றி வந்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பணத்தைக் கேட்டு ராஜேஷ் கண்ணா தொந்தரவு செய்திருக்கிறார். ‘நான் மேலிடத்தில் பணத்தை கொடுத்துவிட்டேன். பணத்தைக் கொடுக்க முடியாது’ என மூங்கிலான் தொடர்ந்து அலட்சியமாகப் பதில் அளித்துவந்தார். கடந்த சிலதினங்களுக்கு முன் இருவருக்குமிடையே பிரச்னை வெடித்தது. இதனால் கோபமடைந்த ராஜேஷ் கண்ணா அவரைக் கொலை செய்திருப்பதாகக் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored