`பூச்சிக்கொல்லியைத் தெளித்தும் கட்டுப்படுத்த முடியல'- வேதனையில் பருத்தி விவசாயிகள்Sponsoredநாகை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் 18,000 ஏக்கர் பரப்பளவில் பருத்திப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதனால் தினந்தோறும் பருத்தி எடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போதும் கொடுக்கும் லாபத்தைவிட இம்முறை லாபம் குறைவாகவே கிடைத்து வருகிறது. நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் தொடர்ந்து பூச்சித் தாக்குதல் ஏற்பட்டதே இதற்குக் காரணம். பூச்சித்தாக்குதலால் பருத்திப் பயிர் அதிகமாகச் சேதம் அடைந்துள்ளன. ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்திக்கு அதிக விலை இருந்ததால் இப்பகுதி விவசாயிகள் பருத்திச் சாகுபடியில் அதிக ஆர்வம் செலுத்தினர். ஆனால், பருத்தியில் ஏற்படும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாததால் இம்முறை பெரும்பாலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். 

இதுபற்றி இப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளிடம் பேசினோம், ``கொள்ளிடம் பகுதியில் உள்ள அதிகமான கிராமங்களில் பரவலாகப் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பருத்திப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பலமுறை பூச்சிக்கொல்லி பயன்படுத்தினாலும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே, வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அவர்கள் பரிந்துரைத்த பூச்சிக்கொல்லியைத் தெளித்துப் பார்த்தோம். இம்மருந்துகள் மூலமாகவும் பூச்சித் தாக்குதலை மூன்று நாள்களுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. மூன்று நாள்களுக்குப் பின்னர் மீண்டும் பூச்சிகள் பயிர்களுக்குத் திரும்பிவிடுகின்றன. இதனால் பருத்திப் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதுவரை பூச்சித் தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருப்பதால் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 35,000 முதல் 40,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பருத்திப் பயிரை ஒரு மாத காலத்துக்கு பாதுகாத்து அறுவடை செய்யும் முயற்சியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனவே, பருத்திப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்து, தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த ஆலோசனை தர வேண்டும்" என்றனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored