துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் – ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிSponsored``போலீஸார் சாதாரண உடையில் வந்து மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்களே மக்கள் என்ன தீவிரவாதிகளா? நக்சல்களா? சட்டத்தை  மீறியதும்,  சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதும் மக்கள் அல்ல போலீஸார்தான். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.” என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கெளடா தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்ப்பணித்து, உறுதி ஏற்கும் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

Sponsored


துப்பாக்கிச்சூடு நடைபெற்று 60 நாள்கள் கடந்த நிலையிலும், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட போலீஸார் தற்போது வரை விலக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சியை நடத்த விடக்கூடாது என பல வழிகளிலும் தடைகளை விதித்தது காவல்துறை. தடைகளை மீறி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரின் உதவியால் இக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கெளடா மற்றும் நல்லகண்ணு ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஆய்வறிக்கையின் பிரதியை அளித்தனர்.

Sponsored


தொடர்ந்து பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கெளடா,`` 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதைப் போல ஒரு போலீஸ் அதிகாரத்தையும் அடக்குமுறையையும் நான் பார்த்ததே கிடையாது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார். இங்கு போலீஸ் ராஜ்ஜியம் நடந்துகொண்டிருப்பதைக் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு. இதை நடத்தக் கூறியது வேதாந்தா குழுமம்தான். ஜாலியன் வாலாபாக் போன்ற நிகழ்வுதான் இங்கு நடந்துள்ளது. இது சுதந்திர நாடுதானா அல்லது போலீஸ் ராஜ்ய நாடா? 

போலீஸார் சாதாரண உடையில் வந்து மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்களே மக்கள் என்ன தீவிரவாதிகளா, நக்சல்களா? சட்டத்தை  மீறியதும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதும் மக்கள் அல்ல, போலீஸார்தான் என்பதை இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளோம். போலீஸார்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், தற்போது வரை போலீஸார் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பக்கபலமாக இருந்து சட்ட உதவிகள் செய்தது தூத்துக்குடியில் உள்ள  வழக்கறிஞர்கள்தான். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும்.

மக்கள் மீது இதுவரை நடத்தியது மட்டுமல்ல, தற்போதும் அடக்குமுறை தொடர்கிறது. இந்த அடக்குமுறையையும் அழுத்தங்களையும் தமிழக அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் போராடி நிறுத்தச் செய்வார்கள். இந்தக் குற்றங்களுக்கு அரசு பதில் சொல்லும் ஒரு நாள் வரும்.” என்று பேசியவர் இறுதியாக, நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் எனச் சொன்னபடியே, 2,400 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையின் 5 பாகங்களை கனிமொழியிடம் வழங்கினார் நீதிபதி.Trending Articles

Sponsored