பள்ளி மாணவர்களின் தகவல்கள் கூவிக் கூவி விற்பனை... கோட்டைவிடும் தேர்வுத்துறை!Sponsored`பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல் வேண்டுமா? 32 மாவட்ட மாணவர்களின் தகவல்களும் தனித்தனியே இருக்கின்றன. மொத்தம் 9,90,000 தகவல்கள்! பள்ளிவாரியாக மாணவர்களின் பெயர், மொபைல் எண் என அனைத்துத் தகவல்களும் உள்ளன. மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும்...' என்று தேர்வுத்துறைத் தகவல்களை, வாட்ஸ்அப்பில் கூவிக் கூவி விற்பனை செய்துகொண்டிருக்கிறது தனியார் நிறுவனம். 

ஃபேஸ்புக் நிறுவனத்திலும் கூகுள் நிறுவனத்திலும்தான் தகவல் திருடப்படுகிறது என்ற காலம் மாறி, தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களும் திருடப்படுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தில் திருடப்படும் தகவல்கள், அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் விவரத் தொகுப்பு, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வுகளின் பயிற்சி மையங்களுக்கும் விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Sponsored


தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் தகவல்கள் எப்படிப் பொதுவெளியில் ஏலத்துக்கு வந்திருக்கின்றன என்பதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறையில் விசாரித்தோம். ``பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பிவைப்பதற்காக, மாணவர்களிடமிருந்து மொபைல் எண்கள் பெறப்படுகின்றன. இந்த எண்களின் வழியே பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். இவை தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அனுப்பப்படுவதால், மாணவர்களின் விவரங்கள் எளிதாக விற்பனைக்கு வந்திருக்கின்றன. இதில் மாணவரின் பெயர், செல்போன் எண்கள், சாதி, பயின்ற பாடப்பிரிவு, வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்களிலும், தேர்வுத்துறை அலுவலகங்களிலும் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு" என்றனர். 

Sponsored


இந்தத் தகவலை `மார்க்கெட்டிங் டேட்டாபேஸ் இந்தியா' என்ற நிறுவனம் விற்பனை செய்ய, விளம்பரம் செய்துவருகிறது. இந்த விவரங்களைப் பெறுவதற்கு விலை பேசினால், முதலில் சாம்பிள்களை அனுப்பிவைக்கிறார்கள். அதன் பிறகு விலை நிர்ணயிக்கிறார்கள். இந்த விவரங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கும் நேரிலேயே சென்று விற்பனை செய்யப்படுவதாக விவரிக்கிறார்கள். 

இவர்களிடம் பேசியபோது, ``ஒரு மாவட்டத்துக்கான விவரங்கள் 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலை, உங்களுக்கு என்னென்ன விவரங்கள் தேவைப்படுகின்றன என்பதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். உங்களுக்குத் தேவையான தகவல்கள் என்னென்ன என்பதுகுறித்து சொன்னால் போதுமானது. நாங்கள் மாதிரித் தகவல் தொகுப்பை அனுப்பிவைப்போம். அதில் உங்களுக்குப் போதுமான விவரங்களை நீங்கள் பார்வையிட்ட பிறகு, முழுத் தகவலுக்கான தொகை செலுத்தினால் போதுமானது" என்று தகவல் விற்பனை வழிமுறையை விளக்கினார்கள். 

மாணவர்களின் தகவல் எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதுகுறித்து விசாரித்தபோது, ``தற்போது, பொறியியல் கல்லூரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரம். பல தனியார் கல்லூரிகள் மாணவர்கள் இல்லாமல் தடுமாறிவருகின்றன. இவர்களுக்கு இந்தத் தகவல்கள் பெரிய அளவில் உதவுகின்றன. இந்தத் தகவலை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் `கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் அட்மிஷன் நடத்துகிறோம். பலவிதமான சலுகைகளை வழங்குகிறோம்' என மொபைல் எண்ணில் அழைத்தும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். குறிப்பாக தனியார் கல்லூரிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறுகின்றன. இதனால் மாணவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களை தம் கல்லூரியில் சேர்த்துக்கொள்ள முயல்கின்றனர். தொடர்ந்து தகவல் அனுப்பும்போது, மாணவர்கள் முயன்றுபார்ப்போமே என்று சேர்பவர்களும் இருக்கிறார்கள்" என்றனர்.

இந்தத் தகவல் திருட்டு குறித்து, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம்.

``இந்தத் தகவலை பள்ளிக்கல்வித் துறையில் அலுவலகப் பணியில் இருப்பவர்களிடம் வாங்கி வர்த்தகமாக்குகின்றனர். இந்தத் தகவல் தொகுப்பில் அனைத்து விவரங்களும் இருக்கின்றன. குறிப்பாக, மாணவிகளின் விவரங்கள். இது தவறான நபர்களிடம் கிடைத்தால் மாணவிகளின் எண்களை தவறாகப் பயன்படுத்தி தொல்லை கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகம். மாணவிகளின் தகவலும் பொதுவெளியில் கிடைப்பதால், அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. 

மொபைல் எண்களை வைத்தே மாணவிகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றின் மூலம் தொடர்புகொள்ள வாய்ப்பு இருக்கிறது. மேலும், இப்போது ஆதார் அட்டை மொபைல் எண்ணுடன் இணைக்கப்படுவதால், எளிதில் ஆதார் விவரத்தை அறிந்துகொள்ளவும், வங்கிகளின் விவரத்தை அறிந்துகொள்ளவும் முடியும். ஆகையால், இனியாவது மாணவர்களின் தகவல்கள் வெளியாவதைத் தடுக்க, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.Trending Articles

Sponsored