'கட்சித் தலைமை காசு கொடுக்கட்டும்!' - திணறவைக்கும் தே.மு.தி.க நிர்வாகிகள்Sponsoredவிஜயகாந்த் பிறந்தநாளை, வழக்கம்போல நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவதற்குத் தயாராக உள்ளனர் கட்சி நிர்வாகிகள். ஆனால், ' கட்சித் தலைமை நிதி அளித்தால், விழாவை சிறப்பாக நடத்துகிறோம்' என மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர் மாவட்ட நிர்வாகிகள்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துவருகிறார், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். சிகிச்சை நிறைவடைந்ததும், அடுத்த மாதம் சென்னைக்கு வரவிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, அவரது பிறந்தநாள் வருகிறது. சிகிச்சை முடிந்து வருவதால், இந்தப் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவுசெய்துள்ளனர் நிர்வாகிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், " கட்சி தொடங்கிய நாளில் இருந்தே, பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்துவந்தார் விஜயகாந்த். அன்றைய நாளை வறுமை ஒழிப்பு நாள் என்று கூறி, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வழக்கம்.

Sponsored


இதைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு விருந்து வழங்கப்படும். கடந்த காலங்களைப் பொறுத்தவரை, நிர்வாகிகள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வாரி இறைத்து செலவுசெய்தனர். இதுவரை கட்சிக்காக செலவுசெய்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டனர். இதனால், கட்சிக்கு வரவேண்டிய நிதியும் குறைந்துவிட்டது. மீண்டும் பழைய நிலைக்கு கட்சியைக் கொண்டு வர வேண்டும் எனத் தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவுரைகளும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Sponsored


மக்கள் மத்தியில் கேப்டனின் செல்வாக்கை மீண்டும் பலப்படுத்தும் வகையில், இந்தப் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடவும் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டவாரியாக நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிகழ்ச்சிக்குச் செலவு செய்வதற்குப் பலரும் தயக்கம்காட்டிவருகின்றனர். கட்சி வட்டாரத்தில், `பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. கட்சித் தலைமை ஏற்பாடுசெய்தால், பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' என சில மாவட்ட நிர்வாகிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே சொந்தச் செலவில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் வந்திருக்கிறார்கள்" என்றார் ஆதங்கத்துடன். 

 Trending Articles

Sponsored