மணல் கொள்ளையர்களின் உதவியுடன் சோதனைச் சாவடி அமைத்த போலீஸார்!Sponsoredநெல்லை மாவட்டத்தில், பயணிகள் நிழற்குடையை காவல்துறையினர் சோதனைச் சாவடியாக மாற்றம் செய்துவிட்டதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயிலில் இருக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நம்பியாறு, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, திசையன்விளை வழியாகப் பாய்கிறது. இந்த ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதைத் தடுப்பவர்களை மணல் கொள்ளையர்கள் லாரி ஏற்றிக் கொலைசெய்கின்றனர். கடந்த 2012 மார்ச்   11-ம் தேதி, மிட்டார்குளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் மணல் கடத்தல் கும்பலால் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். 

Sponsored


கடந்த இரு வருடங்களுக்கு முன்பு, தலைமைக் காவலரான திருநாவுக்கரசு மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அதன் பின்னணியில் மணல் கடத்தல் கும்பல் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுந்தபோதிலும், எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மணல் கடத்தலை எதிர்த்த செல்லப்பா என்பவர், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மணல் லாரியால் மோதி கொல்லப்பட்டார். அதைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஒரு வாரத்திலேயே அதை விபத்து வழக்காக மாற்றிவிட்டனர். 

Sponsored


செல்லப்பா கொல்லப்பட்ட 10 தினங்களுக்குப் பின்னர், மே 6-ம் தேதி விஜயநாராயணம் காவல்நிலைய தலைமைக் காவலரான ஜெகதீஷ்துரை என்பவரை மணல் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். ஆனாலும்கூட நம்பியாற்றில் மணல் கடத்தல் தடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மணல் கடத்தலைத் தடுப்பதற்காக திசையன்விளை அருகே உருமன்குளத்தில் காவல்துறை சார்பாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடையை ஆக்கிரமித்து, இந்த சோதனைச் சாவடியை போலீஸார் அமைத்துள்ளனர். அதனால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும் மழையிலும் அவதிப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், மணல் கடத்தலில் தொடர்புடைய முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான பொன்.இசக்கி மற்றும் மணல் கடத்தலில் ஈடுபடும் சிலரிடம் உதவிபெற்று இந்த சோதனைச் சாவடியை காவல்துறையினர் அமைத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. 

முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான பொன்.இசக்கிக்கு மணல் கடத்தலில் தொடர்பு இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மீது ஏற்கெனவே மணல் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாகவும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். அவரிடமிருந்து காவல்துறையினர் உதவிபெற்ற விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் காலாவதியான நிலையில், தற்போது சீரமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பொன்.இசக்கியின் பெயரை உருமன்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் எனக் குறிப்பிட்டிருப்பதும் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அந்த இடத்தில் மீண்டும் நிழற்குடை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் விருப்பமாக உள்ளது. Trending Articles

Sponsored