`பன்னீர்செல்வத்தை அடுத்து எடப்பாடி பழனிசாமி!'- சொத்து வழக்குக்குத் தயாராகும் தி.மு.க.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், `துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். தேர்தல் வேட்புமனுவில் இதுகுறித்து தவறான தகவல்களை அளித்திருக்கிறார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடுசெய்துள்ளனர்.

2011 தேர்தலில், மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016-ம் ஆண்டில் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இது, சந்தேகத்தை எழுப்புகிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றிய டைரியில், பன்னீர்செல்வத்துக்கும் இதில் தொடர்பிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேகர் ரெட்டியிடம் ஆறு மாதங்களில் 4 கோடி ரூபாயை பன்னீர்செல்வம் பெற்றுள்ளதும் டைரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை முதல்கட்ட விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று வழக்கை முடித்துவைத்தனர் நீதிபதிகள்.

Sponsored


Sponsored


ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். "ஓ.பன்னீர் செல்வத்தின் மீதான ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு, போதுமான ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவந்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தை நாடினோம். இப்போது வேறுவழியில்லாமல், விசாரணையைத் தொடங்கிவிட்டதாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்புப் புகார் மீதான விசாரணையை முறையாக நடத்த வேண்டும். அதுவரை, குற்றம் சாட்டப்பட்டவர் துணை முதலமைச்சராக நீடிக்கக் கூடாது. அவரைப் பதவியில் இருந்து நீக்கி, ஆளுநர் உத்தரவிட வேண்டும். இதற்கு இடம் அளிக்காமல், பன்னீர்செல்வமே தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் முறையான விசாரணைக்கு வழிவகுக்கும்.

'லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சந்தேகம் ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாடலாம்' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, விசாரணை அதிகாரிகள் விசாரணையை  நேர்மையாக நடத்த வேண்டும். அடுத்ததாக, எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார்களை ஆளுநருக்குக் கொடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடி தீர்வைப் பெறுவோம். முதலமைச்சர் மீது வழக்கு போடவேண்டுமென்றால், ஆளுநர் அனுமதி வேண்டும். அதற்காகத்தான் ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஓ.பி.எஸ்ஸைப் போல ஈ.பி.எஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம். ஊழலில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல'' என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored