காந்தியடிகள், கால் பதித்த இடத்தைப் புறக்கணித்த ஆளுநர்! திண்டுக்கலில் சலசலப்புSponsoredதிண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்திலுள்ள பல்வேறு துறைகளைப் பார்வையிட்டார். ஆனால், திண்டுக்கலில், காந்தியடிகள் மக்களை சந்தித்த இடத்தைப் பார்வையிடுவதை பன்வாரிலால் புரோஹித் தவிர்த்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

``சிறுநாயக்கன்பட்டி பிரிவு ஹைவே பக்கத்துல 500 மீட்டருக்கு உள்ளே ஓர் ஆளு ஆடு மேய்ச்சிட்டு இருக்கான் பாருங்க... அவனை அப்படியே மடக்கி திருப்பி விரட்டுங்க. கட்ரோட்டுலயிருந்து யாரையும் உள்ள விட்டுறாதீங்க" காலை 11 மணி முதல் இதே ரீதியில் அலறிக்கொண்டே இருந்தன திண்டுக்கல் போலீஸாரின் வாக்கி டாக்கிகள். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை முன்னிட்டுதான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.

Sponsored


வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். திண்டுக்கல்-மதுரை சாலையில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளை இன்று பார்வையிட்டார். மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையில் இருக்கிறது காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம். மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்தாலும் காந்திகிராமம் பகுதியைக் கடந்துதான் வர வேண்டும். எனவே பல்கலைக்கழகத்திலேயே ஆளுநர், ஓய்வெடுக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Sponsored


ஆனால், அதை மறுத்த ஆளுநர், திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வரவேற்றார். சில நிமிடங்கள் ஓய்வெடுத்த ஆளுநர், மீண்டும் மதுரை சாலையில் பயணித்து காந்திகிராமம் வந்தடைந்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்-மதுரை சாலையில் அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

காந்திகிராமம் நுழைவாயிலில் ரயில்வே கேட் உள்ளது. காந்தி ஒருமுறை மதுரைக்குச் செல்லும்போது இந்த இடத்தில் கூடி நின்ற மக்கள் அவரைப் பார்க்க வேண்டும் என விரும்பினர். அதற்காக இந்த இடத்தில் ரயிலிலிருந்து கீழே இறங்கிய காந்தி சில நிமிடங்கள் பொதுமக்களுடன் பேசிவிட்டுச் சென்றார். காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் அமைய அந்த நிகழ்வு காரணமாயிற்று. காந்தி கிராமத்துக்கும் காந்திக்கும் ஆன தொடர்பு இந்த இடம்தான். மகாத்மா காந்தி பொதுமக்களை சந்தித்ததன் அடையாளமாக அந்த இடத்தில் நினைவுப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு வரும் வி.ஐ.பி-க்கள் இந்த இடத்தைப் பார்வையிட்டு மரியாதை செலுத்துவார்கள். இந்நிலையில் இன்று பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்த ஆளுநர், காந்தி, மக்களை சந்தித்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தைப் பார்வையிடுவதைத் தவிர்த்த ஆளுநர் நேரடியாகப் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நடராஜன் கதர் சால்வை அணிவித்து வரவேற்றார். காந்தி மியூசியம் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கல்வி கண்காட்சி அரங்குகள், மரபு சாரா எரிசக்தித்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்டார். காந்தியடிகள் பொதுமக்களை சந்தித்த இடத்தைப் பார்வையிடாமல் ஆளுநர் சென்றது காந்தியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Trending Articles

Sponsored