"இந்த நாளை கடந்து போக முடியல!" - நீதிக்காக தவிக்கும் சிறுமி ஸ்ருதியின் அம்மாSponsoredதாம்பரத்தில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுமி ஸ்ருதி, பேருந்து ஓட்டையில் விழுந்து இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. வீட்டுக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் பள்ளிப் பேருந்தில் உட்கார்ந்து வந்த சிறுமி, தன் இருக்கைக்குக் கீழிருந்தே பெரிய ஓட்டைக்குள் விழுந்து, சக்கரத்தில் அடிபட்டு இறந்து போனாள். 2012 ம் ஆண்டு இதே ஜூலை 25, தன் மகள் எப்போதும்போல பள்ளியிலிருந்து மாலை வீட்டுக்கு வருவாள் என்று காத்திருந்த அந்தத் தாய்க்குத் தன் பிஞ்சு மகளின் மரணச் செய்திதான் கிடைத்தது. ஸ்ருதியின் அப்பாவும் பள்ளிப்பேருந்தின் ஓட்டுநர்தான். மற்ற வீட்டுக் குழந்தைகளையெல்லாம் பாதுகாப்பாக இறக்கிவிட்டு வீடுவந்து சேரும் அவர், மற்றொரு பள்ளிப்பேருந்தினால் தன் மகள் இறந்ததைக் கேட்ட தருணம் அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. 

சிறுமி, கீழே விழுந்ததும், சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினார் ஓட்டுநர். பேருந்தை மக்கள் எரித்தனர். பள்ளி முன் நின்று போராட்டம் செய்தார்கள். தினமும் தங்களது பிள்ளைகளைப் பள்ளிப் பேருந்தில் அனுப்பும் எல்லாப் பெற்றோருக்கும் குழந்தை ஸ்ருதியின் மரணம் பயத்தையும், அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் கொடுத்தது. தமிழக மக்கள் ஸ்ருதியின் மரணத்தை தங்களது சொந்த துக்கமாகக் கருதினார்கள். ஸ்ருதியின் மரணத்துக்குப் பலர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினார்கள். குழந்தைகள் பயணிக்கிற பேருந்து என எவ்வித அக்கறையும் இல்லாமல், பேருந்தில் இருந்த ஓட்டையைப் பலகைப் போட்டு மூடிவைத்த ஓட்டுநர், பேருந்தின் உரிமையாளர், இப்படியொரு பேருந்தை இயக்க சம்மதித்த பள்ளித் தாளாளர், இவ்வளவு மோசமான பேருந்துக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்கிய வாகன ஆய்வாளர் என எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள். பள்ளி வாகனங்களில் முறையாகப் பாதுகாப்பைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்த உத்தரவு வந்த சில மாதங்களுக்கு மட்டும் பள்ளி வாகனங்களை எல்லாம் வாகன ஆய்வாளர்கள் தீவிரமாகச் சோதனையிட்டனர். பின்னர் எல்லாம் வழக்கமாகிப்போனது. 

Sponsored


Sponsored


கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். வாகனச் சோதனைகளில் காவலர்களின் கண்டிப்பு வழக்கமாகிவிட்டது. இதுபோன்ற மரணங்களை தினசரி செய்தியாக நாமும் கடந்து போய்விட்டோம். குழந்தை சுருதியின் மரணத்துக்குக் காரணமானவர்கள் எல்லாம் இப்போது, அவரவர் குடும்பத்தில் ஐக்கியமாகி இருக்கலாம். ஆனால், சுவரில் மாட்டப்பட்ட தன் மகளின் படத்தின் முன்பு ஆறாண்டுகள் ஆகியும் அழுதழுது தீர்ந்தபாடில்லை ஸ்ருதியின் அம்மா ப்ரியாவுக்கு. இந்த நாளை கடந்து போக முடியாமல், தன் மகள் விளையாடித் திரிந்த வீட்டில் வெறுமை சூழ்ந்திருக்க கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருக்கிறார்.

மகளை இழந்த துக்கம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் தன் மகளைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை என்கிற ஆவேசமும் ப்ரியாவிடம் இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி நிர்வாகம் உடனடியாக ஐந்து லட்சம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர். ஸ்ருதியின் குடும்பத்துக்கு இன்னும் அந்த இழப்பீடு வந்து சேரவில்லை. ஸ்ருதி தரப்பிடம் வழக்கு நடத்த பணமில்லையென ஆதரவாக நின்ற வழக்கறிஞர்களும் சற்று பின்வாங்கினார்கள். நிறைய மிரட்டல்கள், சாட்சிகளை வளைக்கும் போக்கு என எல்லா வகையிலும் இழப்புகளையும், சவால்களையும் தாங்கியபடி நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம். ஆறாண்டுகள் கடந்தும் இவர்களின் போராட்டம் நீடிக்க வேண்டுமா?. தற்போது, புழக்கத்தில் இருக்கும் எல்லாப் பள்ளிப் பேருந்துகளும் முறையான பராமரிப்புடன்தான் இயங்குகிறதா? அல்லது இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு இன்னொரு ஸ்ருதியின் மரணத்துக்காகக் காத்திருக்கப்போகிறோமா?Trending Articles

Sponsored