பள்ளி வேனில் ஆற்று மணல் திருட்டு..! இரவில் பதுங்கியிருந்து பிடித்த அதிகாரிகள்Sponsoredகும்பகோணம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், மணல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மாட்டுவண்டி மற்றும் லாரிகளில் மணல் எடுத்துச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக, மணல் கடத்தல் கும்பல் நூதன முறையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் மணலை மூட்டைகளாகக் கட்டி கடத்திவந்தனர். இதேபோல, பள்ளி வேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, கும்பகோணம்  துணை ஆட்சியர் தலைமையில் தனிப்படையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவரைக் கைதுசெய்து விசாரித்து வருவதோடு, பள்ளி வேனையும் பறிமுதல்செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே குடமுறுட்டி ஆற்றில் அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெறுவதாக  துணை ஆட்சியர் பிரதீப்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வுசெய்யும்படி தனிப்படை அமைத்து பிரதீப்குமார் உத்தரவிட்டார். அப்போது, சாக்கோட்டையில் உள்ள பட்டு மெட்ரிக் பள்ளி வேனில், கடந்த ஒரு மாதமாக மணல் மூட்டைகள் கடத்தப்பட்டுவருவதைக் கண்டுபிடித்தனர். மேலும், ஒவ்வொறு முறையும் அவர்களைப் பிடிக்கச் செல்லும்போதும் தகவல் அறிந்து தப்பிச்சென்றுவிடுவர்.

Sponsored


இந்நிலையில், கும்பகோணம் துணை ஆட்சியர், தனிப்படையினருடன் ரகசியக் கூட்டம் நடத்தியதோடு, நேற்றிரவு 8 மணிக்கு உடையாளூர் அருகே உள்ள சந்திரசேகரபுரம் பூண்டி பகுதிக்கு அனைவரும் லுங்கி அணிந்துகொண்டு வரும்படியும் செல்போன்களை சைலன்ட் மோடில் வைத்துக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து, கும்பகோணம் தாசில்தார் உட்பட அதிகாரிகள் கைலி அணிந்து கொண்டு இரவு 8 மணிக்கு வந்தனர்.அப்போது,  துணை ஆட்சியர் அந்த இடத்துக்கு வந்து குடமுறுட்டி ஆற்றில் உள்ள முட்புதரில் அனைவரும் மறைந்திருந்து கண்காணித்தனர்.

Sponsored


 இரவு 10.45 மணியளவில், சாக்கோட்டை பட்டு மெட்ரிக் பள்ளியின் வேனை ஆற்றுக்குள் இறக்கி, 10 பேர் கொண்ட கும்பல் மணலை மூட்டையாகக் கட்டி வேனில் ஏற்றினர். அப்போது, முட்புதரில் மறைந்திருந்த அதிகாரி ஒருவருடைய செல்போனின் டார்ச்லைட் திடீரென ஆனாகியதால், அந்த வெளிச்சத்தைப் பார்த்த மணல் திருடர்கள், அதிகாரிகள் மறைந்திருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.  வேன் டிரைவர், வேனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள், தப்பி ஓடிய அவர்களை விரட்டியுள்ளனர். வேன் டிரைவர்,  ஸ்டியரிங்கை லாக் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், தில்லையம்பூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கருணாநிதி என்பவர் மட்டும் அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். 

அவரிடம்  அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, வலங்கைமான் வரதராஜன் பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் அந்தப் பள்ளியின் வேன் டிரைவராக இருந்துள்ளார். இவர், ஏற்கெனவே மணல் லாரி டிரைவராக இருந்தபோது இது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். பின்னர், அந்த தனியார் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியில் சேர்ந்துள்ளார்.  காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுபோய் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் மீண்டும் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, வேனை வலங்கைமானில் நிறுத்திவைக்க வேண்டும். அப்படிச் செய்யாமல்,  இரவு நேரத்தில் மணல் மூட்டைகளைக் கடத்திவந்துள்ளார். தில்லையம்பூரைச் சேர்ந்த லோடுமேன் முருகேசன் என்பவருடன் சேர்ந்துகொண்டு, கூலியாட்களை வரவழைத்து ஒரு மூட்டை மணல் அள்ளி கொடுப்பவர்களுக்கு 5 ரூபாய் சம்பளம் கொடுத்து மணலை அள்ளியுள்ளார். ஒரு மூட்டை மணலை ரூபாய் 150-க்கு விற்றுவந்துள்ளார். இதுபோல, கடந்த ஒரு மாதமாக மணல் விற்றுவந்ததுள்ளார். ஆற்றில் தண்ணீர் வரப்போகிறது என்பதற்காக ஒரே நேரத்தில் 150 மூட்டைகள் மணலை அள்ளியதும் விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகள் சிலர் கூறுகையில், மணல் கொள்ளையில் ஈடுபட்ட வைரமுத்து, சில அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு, துணை ஆட்சியர்   எங்கு ஆய்வுசெய்யப்போகிறார் என்ற தகவலை அறிந்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் பிடிபடாமல் தப்பிச் சென்றுவிடுவார். இந்நிலையில் நேற்று, துணை ஆட்சியர் பிரதீப் குமார் இரவு 8 மணிக்கு யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், தன்னுடய சொந்தக் காரில் பாலக்கரையில் இருந்து மேலக்காவிரி வழியாக தாராசுரம் சென்று, அங்கிருந்து சோழன்மாளிகை சென்று, அங்குள்ள தென்னந்தோப்பில்  காரை  நிறுத்திவிட்டு, அங்கிருந்து 2 கிலோ மீட்டர்  தூரம் ஆற்றுக்குள் நடந்தே சென்று மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடித்துள்ளார்.Trending Articles

Sponsored