தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் என்ன தண்டனை?!



`தனியார் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்து நிரூபிக்கப்பட்டால், பள்ளியின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், பள்ளி நிர்வாகிகளுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் பெற்றுத்தரப்படும்’ என்று எச்சரித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை. 

Sponsored


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, சர்வதேச அளவில் பள்ளியின் தரத்தை உயர்த்த, காப்புக் கட்டணமாக   (Caution Deposit) இரண்டு லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தது.  கடிதத்தைக் கண்டு கொதித்தெழுந்த பெற்றோர்கள், பள்ளிக்குச் சென்று போராட்டம் நடத்தினர். அத்துடன்,  இந்தப் பள்ளியின் மீது பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

Sponsored


உடனே களம் இறங்கிய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், தனியார் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். ஆனால், பள்ளியின் நிர்வாகம், ``நாங்கள் சி.பி.எஸ்.இ பள்ளி. எங்கள் மீது மாநில அரசின் பள்ளிக்கல்வித் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்று பேசி அதிகாரிகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர். பெற்றோர்களிடம் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் திகைத்து, அங்கிருந்து வெளியேறினர்  அதிகாரிகள். 

Sponsored


இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை, தற்போது அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதில், தனியார் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற  சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தைத் தவிர, பல்வேறு வகையில் இதரக் கட்டணங்களை அதிகளவில் வசூலித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

`தனியார் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கம் இல்லாமல் செயல்படுகிறோம் என்ற வகையிலேயே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், வணிக நோக்கிலேயே செயல்படுவது அறக்கட்டளையின் கொள்கைகளுக்கு எதிரான செயல். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்கப்படுத்தி, தமிழ்நாடு பள்ளிச் சட்டம் 2009-ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் இருக்கிறது. இது சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்தச் சட்டத்தை எதிர்த்து சி.பி.எஸ்.இ பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ஆனால், 2012-ம் ஆண்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதையும் பள்ளிகள் நினைவில் கொள்ள வேண்டும்' என எச்சரித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை.  

மேலும், `தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால், அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியின் அனுமதி ரத்து செய்யப்படும். பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம் என்று சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்தவிதமான கேப்பிட்டேஷன் கட்டணத்தையும் பெறக் கூடாது. இந்த விதிமுறை சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் பொருந்தும். இதனை இடைநிலை கல்வி வாரியமும் தனது விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதிகளவில் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் பள்ளியில் அனுமதி ரத்து செய்யவும் உரிமை உள்ளது' என்பதையும் பள்ளிக்கல்வித் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

`இதுவரை தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் வசூலிக்கும் கட்டண விவரத்தை வெளியிடாமல் இருந்தால், ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ பள்ளிகளும் தங்கள் கட்டண விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அதிகளவில் கட்டணம் பெறுவது குறித்து புகார் வந்தால், விசாரித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்குக் கல்வி நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்’ என அறிவித்துள்ளது. 

மேலும், `கட்டண நிர்ணய கமிட்டி அனுமதித்ததை விட கூடுதலாக கட்டணம் பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாவட்டத்தின் தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

`வழக்கம் போல, கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்படும். ஆனால், இதுவரை பெற்றோர்கள் அனுப்பிய புகாரின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தால் நன்றாக இருக்கும்' என்கிறார்கள் கல்வியாளர்கள்.



Trending Articles

Sponsored